2014 கலக்க வரும் புதிய தொழில்நுட்பம்


தொழில் நுட்பம் என்பது தொடர்ந்து முன்னேற்றம் காணும் இயக்கமாகும். வல்லுநர்கள் கூட எந்த வகையில் இது மாறுதலை ஏற்படுத்தும் எனச் சரியாகக் கணிக்க இயலாது. கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவில், இதுவரை மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் அடிப்படையில், இனி என்ன மாறுதல்கள் மற்றும் தொழில் நுட்ப யுக்திகள் வரும் ஆண்டில் கிடைக்கும் என இங்கு பார்க்கலாம்.
டி.டி.4 மெமரி (DD4 MEMORY): இன்று வரை பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் டி.டி.ஆர்.3 மெமரியின் இடத்தில் புதியதாக ஒன்று இடம் பெற வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஏனென்றால், டி.டி.ஆர். 3 பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டி.டி.ஆர். 4 மெமரி, தயாராக இருந்தாலும், எப்போது அது சாதனங்களுடன் இணைந்து செயல்படும் வகையில் அறிமுகப்படுத்தப்படும் என்பதனைச் சரியாகக் கூற இயலவில்லை. வர இருக்கும் இன்டெல் நிறுவனத்தின் ப்ராட்வெல் அல்லது ஹேஸ்வெல் - சி.பி.யு. ஆகியவற்றுடன் இணைந்து இது வெளியாகலாம். அப்படி என்ன முன்னேற்றம் இந்த டி.டி.ஆர். 4 மெமரியில் கிடைக்கும் என்ற கேள்வி எழுகிறதா? தயாரிப்பாளர்கள், அதிகமான மெமரி மாட்யூல்களை இதன் மெமரி ஸ்டிக்குகளில் அமைக்கலாம். மேலும், இவை குறைந்த மின் சக்தியில், அதிக வேகத்தில் இயங்கும். இதில் இயங்கும் சி.பி.யு.க்கள், டி.டி.ஆர். 3 யுடனும் இணைந்து இயங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
யு.எஸ்.பி. 3.1 (USB3.1): யு.எஸ்.பி. 3 ஏற்கனவே வந்துவிட்டது. இருப்பினும்,
இதில் மாற்றப்பட்ட அம்சங்கள் இணைக்கப்பட்டு, ஒரு புதிய வகை வர உள்ளது. யு.எஸ்.பி.3ன் அலைக்கற்றையை இரு மடங்காக ஆக்கி இயக்கும் திறனுடன் இது அமைக்கப்படும். எனவே நொடியில் 5 கிகா பிட்ஸ் டேட்டா வேகம் என்பது 10 கிகா பிட்ஸ் ஆக இருக்கும். அண்மையில் இதனைச் சோதனை செய்த போது, நொடிக்கு 800 எம்.பி. டேட்டா பரிமாற்றத்தினைக் காட்டியது. இது விரைவில் நொடிக்கு ஒரு கிகா பைட் என்ற அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டா எக்ஸ்ப்ரஸ் ஸ்டோரேஜ் (SATA EXPRESS STORAGE): சாலிட் ஸ்டேட் ட்ரைவ்கள் ஏற்கனவே SATA 6 வரையறையை எட்டி விட்டன. வர இருக்கும் SATA EXPRESS, ஒரு நொடியில் 1.4 கிகா பைட் டேட்டா பரிமாற்றத்தை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டா எக்ஸ்பிரஸ் ட்ரைவ்கள் வழக்கமான 2.5 அல்லது 3.5 அங்குல அளவில் இருக்காது. புதிய லேப்டாப் கம்ப்யூட்டர்களில் காணப்படுவது போல M.2 பார்ம் பேக்டர் அளவில் இருக்கும். அப்படியானால், மெக்கானிகல் ட்ரைவ் இனி இல்லாமல் போய்விடுமா? எஸ்.எஸ்.டி. டிஸ்க்குகளின் விலை மிக மலிவாகக் குறையும் வரை, மெக்கானிக்கல் டிஸ்க்குகள் புழக்கத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், SATA Express இன்டர்பேஸ் குறித்து அறிந்த பயனாளர்கள், நிச்சயம் மெக்கானிகல் ட்ரைவிற்கு விடை கொடுக்கத் தயங்க மாட்டார்கள் என்பது நிச்சயம். ஏனென்றால், புதிய சட்டா எக்ஸ்பிரஸ், அதிவேக எக்ஸ்பிரஸ் ஆக ஸ்டோரேஜ் மற்றும் டேட்டா பரிமாற்றத்தை மேற்கொள்கிறது.
ஜி-ஸிங்க் மானிட்டர்கள் (GSync MONITORS): ஜி-ஸிங்க் என்பது, என்வீடியாவின் (NVIDIA) புதிய தொழில் நுட்பமாகும். மானிட்டர் ஒன்றில் ஜி.பி.யு.வினை இணைத்துச் செயல்படுத்துவதே இந்த தொழில் நுட்பம். இதனால், மானிட்டர் தன் திறனை இழக்கும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. என்றும் அது இயங்கும். இதனால், கம்ப்யூட்டர் கேம்ஸ் இயக்கத்திற்கு இது மாபெரும் துணையாக இருக்கும். அசூஸ் நிறுவனம், வரும் 2014 ஆம் ஆண்டில் வெளியிட இருக்கும் மானிட்டர்களில் ஜி-ஸிங்க் தொழில் நுட்பத்துடன் இருக்கும் என அறிவித்துள்ளது. VG248QE என்ற மாடல் மானிட்டர் விலை 400 டாலர் அளவில் இருக்கும்.
தொலைக் காட்சியை விஞ்சும் இணையம்: வரும் காலத்தில், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை, இணையம் வழியே அனைவரும் காணத் தொடங்கிவிடுவார்கள். இதனால், தொலைக்காட்சிப் பெட்டிகள் பயன்பாடு குறையும். ரேடியோ நிலைய ஒலிபரப்பு வெளிநாடுகளில், இணையம் வழியாகத்தான் பல ஆண்டுகளாகப் பெறப்பட்டு வருகிறது. ஆனால், அதனைக் காட்டிலும் வேகமாக, இணையம் வழி தொலைக் காட்சி நிகழ்வுகள் பார்ப்பது வளரும் என்று உறுதியாக நம்பலாம்.
கூகுள் கிளாஸ் பயன்பாடு: கூகுள் கிளாஸ் எனப்படும், தலையில் அணிந்து பயன்படுத்தும் கம்ப்யூட்டர், வரும் ஆண்டில் வேகமாக மக்களைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தை, கைகளின் பயன்பாடு இல்லாமல், இதன் வழி அணுக முடியும். இது, வழக்கமாக நாம் கண்களில் அணியும் கண்ணாடி போலத்தான் வடிவத்தில் உள்ளது. கண்ணாடியில் உள்ள லென்ஸுக்குப் பதிலாக, சிறிய எலக்ட்ரானிக் திரை உள்ளது. இது, நம் சொல் ஒலிப்பிற்குக் கட்டுப்பட்டு இயங்கும் வகையில் உள்ளது. அத்துடன் கண் சிமிட்டலையும் கட்டளையாக ஏற்று இயங்குகிறது.
கண்ணாடியின் பக்கவாட்டுப் பிரேமில் ஆடியோ அவுட்புட் மற்றும் டச் கண்ட்ரோல் பேட் அமைக்கப்பட்டுள்ளது. மேலாக போட்டோ மற்றும் வீடியோ பதிவதற்கு பட்டன் ஒன்று தரப்பட்டுள்ளது. இதற்கான கேமரா இதில் இணைக்கப்பட்டுள்ளது. சென்ற 2013 ஆம் ஆண்டில் இது சாப்ட்வேர் தயாரிப்பவர்களுக்கு வழங்கப்பட்டது. 2014ல் இது பரவலாக மக்களை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக அணியும் கண் குளிர் கண்ணாடிகளைக் காட்டிலும் எடை குறைவாக உள்ளது. 2012ல் இது பற்றிய தகவல்களை கூகுள் வெளியிட்ட போது, விளம்பரத்தை நம் மீது திணிக்க கூகுள் திட்டமிடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அது போல் எதுவும் இல்லை என கூகுள் அறிவித்துள்ளது.
2014ல் ஆப்பிள் நிறுவனம்: ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவிற்குப் பின்னர், ஆப்பிள் நிறுவனம் தாக்குப் பிடிக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தொடர்ந்து தன் வழக்கமான சுறுசுறுப்பினை ஆப்பிள் நிரூபித்துக் கொண்டுள்ளது. வரும் 2014ல், இதன் தாக்கம் அதிகமாகவே டிஜிட்டல் உலகில் எதிர்பார்க்கப்படுகிறது. 2013ன் இறுதி காலாண்டில், இதன் பங்கு விலை எகிறியது. இதற்குக் காரணம் ஐபேட் ஏர், பேட் மினி மற்றும் ஐபோன் 5 எஸ் விற்பனை எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமாகவே இருந்ததாகும். 2013ல், ஏற்கனவே இருந்த சாதனங்களை அப்டேட் செய்தே ஆப்பிள் புதிய சாதனங்களை வெளியிட்டது. ஆனால், வரும் ஆண்டில் முற்றிலும் புதிய வடிவமைப்புகள் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், வாட்ச் (iWatch) புதிய வடிவமைப்பில், நவீன தொழில் நுட்பத்துடன் வெளி வரலாம்.
சாம்சங் தன் போன்களில் 4 முதல் 10 அங்குல அளவில் டிஸ்பிளே திரைகளைக் கொண்டு வந்துள்ள நிலையில், ஆப்பிள் இன்னும் சிறிய அளவிலேயே திரைகளைக் கொண்டு தன் போன்களை வடிவமைத்து வருகிறது. இது வரும் ஆண்டில் மாறலாம். ஆப்பிள் நிறுவனமும் பெரிய திரைகளுடன், தன் போன்களைக் கொண்டு வரும்.

மேலும், 2013 இறுதியில், ஆப்பிள், ப்ரைம் சென்ஸ் (Primesense) என்னும் நிறுவனத்தை தனதாக்கிக் கொண்டது. இது அசைவுகளின் அடிப்படையிலான தொழில் நுட்பத்திற்குப் பெயர் பெற்றது. இதனால், வரும் ஆண்டில், ஆப்பிள் இந்த தொழில் நுட்பத்தினைத் தன் சாதனங்களில் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment