வாழ்த்துவதால் நமக்குக் கிடைக்கக் கூடிய நன்மைகளை இன்றைய பழமொழிகள் பேசுகின்றன..
01.
மற்றவர்களின் துன்பங்களும், எதிர்மறைகளும் நம்மை பாதிக்காமல் இருக்க வேண்டுமானால் நாம் வாழ்த்துவதை ஒரு கருவியாக பாவிக்க வேண்டும். வாழ்த்தும்போது அந்த எண்ணம் நம் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரவேண்டும்.
02.
வெறுப்பும் கோபமும் வேதனை தரும், அதைவிடுத்து வாழ்த்த ஆரம்பித்தால் வாழ்த்து பெறுபவர் நலமடைவார்கள் அது நமக்கு நன்மை பயக்கும். இருபது வருடங்களாக அறுந்து போன உறவுகள் கூட வாழ்த்துவதால் மறுபடியும் துளிர்த்து வளர்ந்துள்ளன.
03.
இப்படி தினசரி வாழ்த்துங்கள்
:
வாழ்க வாழ்க என் வாழ்க்கைத் துணைவி ( துணைவர் )
வாழ்க வாழ்க என் குழந்தைகள் எல்லாம்
வாழ்க வாழ்க என் உடன் பிறந்தோர்கள்
வாழ்க வாழ்க என் தொழிற்துறை அன்பர்கள்
வாழ்க பகைவர்கள் வளமோடு திருந்தி வாழ்க
இவ்வுலகில் வாழ் மக்கள் எல்லாம்
வாழ்க வாழ்க இவ் வையகம்
வாழ்க வாழ்க அற நெறி,
வாழ்க மெய்ஞானம் அனைவரும்
அருளாற்றல் பெற்று நலத்துடனும் நல்லறிவுடனும் வாழ்க..
04.
நாமறிந்து நமக்கு பகைவர்கள் இல்லாதிருக்கலாம் ஆனால் நமது செயல்கள் ஏதோ ஒரு விதத்தில் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி பகை கொள்ள வைத்திருக்கலாம், ஆகவே அவர்களை வாழ்த்தும்போதுதான் வெறுப்பின் அலைகளை வாழ்த்தின் அலைகள் எதிர் கொண்டு சமாதானப்படுத்தும்.
05.
வாழ்த்தி வாழ்ந்தால் அமைதி நிலவும், பொறாமை நீங்கி மரியாதை பிறக்கும், கோப வெங்கொடியன் ஓடி மரியாதை பிறக்கும், வெறுப்பென்னும் முட்கள் மறைய கருணை என்னும் மலர் விரியும், நமது ஜீவகாந்தம் பெருகும்.
06.
வாழ்த்தி வாழ்த்தி எப்பேற்பட்ட தீயவர்களையும் நண்பர்களாக மாற்றிவிட முடியும், அவர்களின் செயலை திருத்திவிட முடியும், எண்ணங்களை எல்லாம் ஒழுங்குபடுத்திவிட முடியும், நல்வர்களாக மாற்றிவிட முடியும் – இது உண்மை என்பதை வாழ்த்தி பலன் கண்டவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.
07.
தினசரி இப்படி வாழ்த்துங்கள் :
நான் பெற்றிருக்கிற ஒவ்வொரு நல்லனவற்றையும் வாழ்த்துகிறேன்..
எனது உடல் நலத்தை வாழ்த்துகிறேன்..
எனது அன்பை வாழ்த்துகிறேன்..
எனது மகிழ்ச்சியை வாழ்த்துகிறேன்..
எனது செல்வத்தை வாழ்த்துகிறேன்..
எனது வேலையை வாழ்த்துகிறேன்..
எனது குடும்பத்தை வாழ்த்துகிறேன்..
எனது நண்பர்களை வாழ்த்துகிறேன்..
எனது உற்றாரையும் உறவினரையும் வாழ்த்துகிறேன்..
எனது சூழலை வாழ்த்துகிறேன்..
எனது தெய்வீக உறைவிடத்தை வாழ்த்துகிறேன்..
எனது தூய்மையான மனப்பாங்கை வாழ்த்துகிறேன்
எனது சீரிய மனப்பக்குவத்தை வாழ்த்துகிறேன்
எனது திறமைகளை வாழ்த்துகிறேன்
என்னைச் சுற்றியுள்ள உயிருள்ளவை, உயிரற்றவை ஆகிய அனைத்தையும் வாழ்த்துகிறேன்.
இத் தெய்வீகம் சூழ்ந்த உலகை வாழ்த்துகிறேன்
வளமுடைய பேரண்டத்தையும் வாழ்த்துகிறேன்
என நம்முடன் தொடர்புடைய எல்லாவற்றையும், எல்லோரையும் வாழ்த்த வேண்டும்.
09.
ஒரு பேனாவை வாழ்த்தி உபயோகித்தால் அது நன்றாக எழுதும், அதிக நாள் உழைக்கும், ஒரு புத்தகத்தை வாழ்த்திப் படித்தால் கருத்துக்கள் விளங்கும், மனதில் ஆழப்பதியும், புதிய கருத்துக்கள் உருவாகும்.
10.
கொடுக்கும் பணத்தை இந்தப்பணம் வளமையைப் பெருக்க வாழ்த்துகிறேன் என வாழ்த்தி மன நிறைவோடு கொடுக்க வேண்டும்.
11.
வாங்கும் பணத்தை இந்தப் பணம் எனக்கு முடிவில்லா வளமையைத் தரவேண்டுமென வாழ்த்தி மன நிறைவோடு வாங்க வேண்டும். இதை அன்றாட பழக்கமாக்க வேண்டும்.
12.
இந்தக் கைக்கடிகாரத்தை வாழ்த்துகிறேன், இது எனக்கு சரியான நேரத்தைக்காட்டி எனது கடமையை நான் நேரம் தவறாது செய்ய உதவுகிறது இது வாழ்க.. என வாழ்த்துங்கள், இதுபோல அனைத்து பொருட்களையும் வாழ்த்துங்கள்.
13.
உயிரில்லாத பொருட்களை வாழ்த்தி என்ன பயன் என்று கருதிவிடாதீர்கள் உயிரில்லாதவற்றுக்கும் ஆன்மா உண்டு மறந்துவிடாதீர்கள்.
14.
என்னைக் கடந்து போகும் ஒவ்வொருவரையும் வாழ்த்துகிறேன், ஒருவரைப் பார்க்கப் போகும்போது அவர்களை மனதால் வாழ்த்திவிட்டு போவேன், எனக்கு உதவுபவர்கள் இதனால் அதிகம் கிடைக்கிறார்கள் என்கிறார் அந்த அன்பர்.
15.
ஒருகாலமும் மற்றவரிடம் வெறுப்பு கொள்ளாதீர்கள், வெறுப்பு என்பது ஓர் எலியை வீழ்த்த தமது வீட்டையே கொழுத்துவது போன்ற செயல்.
16.
துரியோதனனுக்கு உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் தீயவர்களாக தெரிந்தார்கள், தர்மனுக்கோ நல்லவர்களாக தெரிந்தார்கள். இருவரும் எண்ணப்பாங்கின்படியே பலன்களை பெற்றார்கள். ஆகவேதான் ஒரு காலமும் வெறுப்பு, பொறாமை, பழிவாங்கல், பகிஷ்கரிப்பு போன்றவற்றை வளர்க்க வேண்டாம்.
16.
மனவள பயிற்சி மனிதனுக்கு முக்கியம் :
a. எங்கெல்லாம் நான் இருக்கிறேனோ அங்கெல்லாம் இறையும், இறையருளும் இருப்பதால் என்னைச்சார்ந்த எல்லாமே நலமாக இருப்பதாக எண்ணுங்கள்.
b. மற்றவர்கள் மீதும், எனது சூழல் மீதும், நான் இருக்கும் இடம் மீதும் நான் கொள்ளும் கடும் சினமும், மனக்கசப்பும், எதிர்மறையான எண்ணங்களும் தெய்வீக ஒளியால் நீங்குகிறது.
c. தெய்வீக ஒளியும், நலமாக்கும் சக்தியும், இணக்கமும், அமைதியும் என்னிலிருந்து வெளிப்பட்டு, என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றின் மீதும் படர்கிறது.
d. இந்தத் தெய்வீகச் சூழல், இங்குள்ள எல்லாவற்றையும் வாழ்த்துகிறேன், நல்லதே என்னை வந்தடைகிறது.
17.
பகிஷ்கரிப்பது, புறக்கணிப்பது போன்றவை சமுதாய நாசகார செயல்களாகும், இதை செய்தாலும், செய்வோருக்கு துணை போனாலும், கருத்தியல் ரீதியாக ஏற்றாலும் ஒரு நாள் நீங்களும் உலகத்தால் பகிஷ்கரிக்கப்பட்டவராக மாறுவீர்கள்.
18.
பகிஷ்கரிப்பு செய்தவர்களை உலகம் ஒன்று திரண்டு அழித்து, பகிஷ்கரிக்காதவர்களை வாழ வைப்பதே புராண, இதிகாச, உலக வரலாறாக இருப்பதை உணர்ந்து வாழ்த்துங்கள், வாழ விடுங்கள் பகிஷ்கரிக்காதீர்கள்.
19.
உலகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது, நாம் நினைப்பதுதான் சரியென பிடிவாதம் பிடித்து, உலகத்தின் முன்னேற்றத்திற்கு குறுக்கே நின்றால் காலம் உங்களை தூக்கி வீசிவிட்டு நடக்கும் இதை உணர்ந்து வாழ்த்தி வழிவிடுங்கள்.
20.
நல்ல நிகழ்வுகள் நடைபெறுவதை பார்க்க வேண்டும், பங்கேற்க வேண்டும், அதைத் தடுத்தால் நல்ல நிகழ்வுகள் நடைபெறாத வாழ்வை நாமே வரவேற்றதாகப் போய்விடும், அதன் பிறகு இருளே நமது வாழ்விற்குள் தாமாக வந்து அடர்ந்துவிடும்.
21.
உலகைக் குறைகூறக்கூடாது அதில் உள்ள குறைகளை களைந்து நிறைவாக்க வேண்டும், குறை சொல்லிக்கொண்டே இருந்தால் நிறைவு வராது. பகிஷ்கரிக்க சொல்வோரின் பேச்சுக்களை தொடர்ந்து அவதானித்தால் அவர்களுடைய பழக்கம் குறைகூறி வாழ்வதாகவே இருக்கக் காண்பீர்கள் ஆகவே அத்தகையோர் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
22.
இவ் அண்டத்தில் கண்ணுக்கு தெரிந்த, தெரியாத ஒவ்வொன்றும் எனக்கு நன்மைகளையும், வெற்றிகளையும் பெற்றுத் தருகின்றன என்று எண்ணுங்கள்.
23.
என்னுள்ளே உறையும் இறைத்தன்மையை வெளிக் கொணர்கிறேன். அதனால் நான் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் என்னிடமிருந்து அன்பும், அருளும், தன்னம்பிக்கையும் சேர்கின்றன என நினையுங்கள்.
24.
நான் தொடும் ஒவ்வொன்றையும், பார்க்கும் ஒவ்வொன்றையும் வாழ்த்துகிறேன், இதனால் இவ்வுலகில் அமைதி மகிழ்ச்சி ஆறுதல் ஆகியன நிறைகின்றதாகக் கருதுங்கள்.
25.
அன்பு என்பது ஒரு ஜீவனின் மணி முடி, இதயத்தின் ஊற்று, உலகின் ஜீவ சக்தி, அன்பிலா உடம்பு என்பு தோல் போர்த்த வெற்றுடம்பு. அன்பிலா மனம் பாலைவனம், மன வறட்சிக்கு மாற்று மருந்து அன்பு. வாடிய பயிர்களை கண்ட போதெல்லாம் வாடும் அன்பு உயரிய தெய்வீகப் பண்பாகும்.
No comments:
Post a Comment