"கேமராக் கண்களுடன் இயல்பாகக் கதை சொன்னவர் பாலு மகேந்திரா"

புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா இன்று வியாழக்கிழமை சென்னையில் காலமானார்.
அவருக்கு வயது 74.
கடந்த சிறிது காலமாகவே உடல் நலம் குன்றியிருந்த பாலு மகேந்திரா, இன்று காலை சென்னையின் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, காலமானார்.
இலங்கையின் மட்டக்களப்பில் பிறந்த பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரா, லண்டனில் படித்து, இந்தியாவின் பூனாவில் உள்ள திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக் கலை பயின்றவர்.
'கேமரா கண்களுடன் இயல்பாகக் கதை சொன்னவர்'
படங்கள், விருதுகள்
1970களில் வெளியான மலையாளப் படமான " நெல்லு"வில் முதன் முதலில் ஒளிப்பதிவாளராக வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படம் அவருக்குக் கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற விருதை பெற்றுத்தந்தது.
பின்னர் பல மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய பாலு மகேந்திராவுக்கு, கன்னடப் படமான "கோகிலா"வின் மூலம் தேசிய விருதும் கிடைத்தது.
தமிழ்த் திரையுலகுக்கும் ஜே.மகேந்திரனின் "முள்ளும் மலரும்" படம் மூலம் அறிமுகமாகிய பாலு மகேந்திரா, 1979ல், தனது இயக்கத்தில் " அழியாத கோலங்கள்" படத்தைத் தந்தார்.
பின்னர் தெலுங்கு திரைப்படங்களிலும் பணியாற்றிய பாலு மகேந்திரா, தமிழ்த் திரையுலகில், 'மூடுபனி', 'மூன்றாம் பிறை' ' நீங்கள் கேட்டவை', 'ரெட்டைவால் குருவி', 'வீடு' ' மறுபடியும்' , 'சதி லீலாவதி' போன்ற படங்களைத் தந்தார்.
அவரது படமான 'மூன்றாம் பிறை' சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதையும் அவருக்குப் பெற்றுத்தந்தது. மேலும் அந்தப் படம் ஹிந்தியிலும் 'சத்மா' என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
கலைப்படங்களை நோக்கிய நேர்த்தியான படங்களை உருவாக்குபவர் என்று பெயர் பெற்றிருந்த பாலு மகேந்திராவின் பெரும்பாலான படங்கள் வணிக ரீதியிலான முயற்சியே என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அவரது திரைப்படமான 'வீடு', அவருக்கு சிறந்த தமிழ்ப் படம் என்ற தேசிய விருதைப் பெற்றுத்தந்தது.
கடைசிப் படம்
'தலைமுறைகள்' என்ற சமீபத்தில் வெளியாகி விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இவரது திரைப்படம் தான் இவருடைய கடைசி திரைப்படம் ஆகும்.
இவரது மறைவிற்கு பல திரையுலக நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரசிகர்களும் திரை நட்சத்திரங்களும் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது திரைப்பட பள்ளிக்கூடமானசினிமா பட்டறைக்கு அவரது உடல் எடுத்து செல்லப்படுகின்றது.


No comments:

Post a Comment