ஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவும், வெவ்வேறு வள்ளல்களால் ஆதரிக்கப்பட்டனர் எனவும் கூறப்படுகிறது.
அவர்கள் சிறப்பான பாடல்கள் பல பாடியுள்ளனர். தற்போது காணப்படும் வரலாறுகளை வைத்து ஒளவையார் கதைகளைத் தொகுத்தால் கீழ்க்கண்ட நால்வர் பற்றிய வரலாறுகளைத் தனிமைப்படுத்தலாம்.
1.
சங்க கால ஒளவையார்
2.
பாரி மகளிர் - பெண்ணை நதி என்ற கதைகளோடு தொடர்புடைய ஒளவையார்.
3.
சோழர் கால ஒளவையார்
4.
14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார்
5.
தனிப்பாடல்களின் அடிப்படையில் இன்னும் இரு ஒளவையார்கள்.
இப்பகுதியில் நாம் காண இருப்பவர் சோழர் கால ஒளவையார். ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர். இவர் எங்கே பிறந்தார் என்பதற்கு வரலாறில்லை. இவர் தனிப்பாடல்களும் பாடியுள்ளார். இவர் பாடிய நாலு கோடிப்பாடல்கள் குறிப்பிடதக்கவையாகும்.
ஒரு முறை சோழ நாட்டிலே ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி அரங்கேறியது. அன்று சோழ மன்னனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. மன்னன் தம் புலவர்களை எல்லாம் அழைத்து மறுநாள் பொழுது விடிவதற்குள் நாலு கோடிப்பாடல் பாடிவர வேண்டும் என்று கட்டளையிட்டார்.
ஒரு நாளில் நாலு பாடல் என்பதே பெரிய வேலை. அதுவும் புலமையுடன் எழுத வேண்டும். நாற்பது பாடல் என்றாலும் பரவாயில்லை. ஒரேயடியாக நாலுகோடிப் பாடல்கள் வேண்டுமானால் நாங்கள் எப்படி எழுதுவோம். ஐயோ சொக்கா...! என்று தருமியைப் போலப் புலம்பத் துவங்கி விட்டார்கள் புலவர்கள். எப்படிப் பாடுவது என அஞ்சினார்கள்.
அந்த வழியாக வந்த ஒளவையார், புலவர்கள் இப்படி புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து என்னவென்று விசாரித்தார். புலவர்களோ "எப்படிச் சிக்கிருக்கோம் பார்த்தீங்களா??" என்று நடந்ததைக் கூறினார்கள்.
இதைக் கேட்ட ஒளவைப் பாட்டி "பூ இவ்வளவு தானா?" என்று சொல்லி 'சிறப்பான பண்புளைக்' குறிக்குமாறு நான்கு பாடல்களை ஒவ்வொன்றும் ஒரு கோடிக்குச் சமானம் எனப் பொருள் படும்படியாகப் பாடி அந்த நான்கு பாடல்களையும் புலவர்களிடம் தந்தார்.
மறுநாள் புலவர்கள் அந்தப் பாட்டை மன்னரிடம் பாடிக்காட்டினார்கள். மன்னனுக்கோ மிகவும் ஆச்சரியம். இத்தனைச் சிறப்பு வாய்ந்த பாடலை இவ்வளவு சமயோசிதமாகப் பாட ஒளவையாராலேயே முடியும் என்று கூற புலவர்களும் ஒத்துக்கொண்டார்கள்.
பெருமகிழ்ச்சியடைந்த மன்னன் ஒளவைப்பாட்டியை அழைத்து அவருக்கு பெரு மரியாதை செய்து பரிசுகளும் கொடுத்து மகிழ்ந்தான் என்கிறது வரலாறு.
விடிவதற்குள் பாடப்பட்ட அந்த நான்கு கோடிப்பாடல் என்னவென்று கேட்கிறீர்களா? இதோ கீழே:
மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்;
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்
(ஒளவையார் தனிப் பாடல்:42)
என்பதே அப்பாடல்.
இப்பாடலில் கோடி என்று ஒரு கோடி பொன் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடலில் ஒவ்வொன்றும் ஒரு கோடி பொன்னுக்கு இணையானவை என்று நான்கு செயல்களை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.
1.
நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரின் வீட்டின் முன்பகுதியைக் கூட மிதிக்காமல் இருப்பது, செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். (நம்மை மதிக்காதவரின் வீட்டுக்குச் செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது என்றும் பொருள் கூறுவார்கள் அதாவது மதியாதார் தலைவாசல் மிதியாதே!)
2.
உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
3.
கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
4.
பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
இப்படி நான்கு கோடிப்பாடலை எழுதியதால் ஒளவையார் சோழ மன்னனால் மிகவும் போற்றப்பட்டார்.
|
No comments:
Post a Comment