சங்கதி கேளீரோ?

ஊரிலுள தனவந்தர்
உவந்து தந்த பணத்தில்
அருகமைந்த காணி
ஆலயத்தின் உரித்தாயிற்று
தேரிழுக்க நிலமது
போதாதெனத் தானோ
விசாலமாக நிலத்தை
விரித்து விட்டால்
பார்வைக்கு கோயில்
எடுப்பாய் தெரியுமெனவோ
அடுக்காய் பணம்
கொடுத்தார் தனவந்தர்
அது சரிதான்
அவரது கொடைவள்ளல் தன்மையது
மெச்சத் தக்கது தான்.
நிலத்தைப் பெற்ற
நிர்வாகத்துக்கோ

ஏகப்பட்ட குசி
கூட்டம் போட்டனர்
இந்தப் பெரிய நிலம்
இப்படியே விட்டால்
ஊரிலுள சிறுவர்
கெந்திப் பிடிக்க வருவர்
கிரிக்கற் கூட விளையாடுவர்
நாடி வந்த இளைஞர்
கழகம் அமைத்து பந்து உருட்டுவர்
கண்ட சாதிப் பயலைச் சேர்ப்பினம்
பெண் பிள்ளைகள்
தெருவில் சென்றுவர
கரைச்சல் கொடுப்பினம்
விடக் கூடாது
விரைவாய் மண்டபம் ஒன்று அமைப்பம்
என்ற தீர்மானம் ஏகமனதாய் எடுத்தாச்சு
அன்னதான மண்டபம் எழும்புது பாருங்கோ
என்ன தம்பி அன்னதானம் சிறந்ததன்றோ
ஏன்காணும் இப்பிடி எதிர்த்துக் கதைக்கிறீர்!
சொன்னால் குறை விளங்காதையுங்கோ
இந்தத் தானம் இரப்பவர்க்கன்று
சொந்த வீடும் சொகுசு வாழ்வும்
பெற்று வாழும் பெரியவர்கள்
மடிப்பு குலையா
பட்டு வேட்டி சால்வையோடு
இட்டு உண்ணும் கூட்டுத்தானண்ணை
இருந்தாலும் இயலாதவர் வந்து
உண்ணுவினந்தானே?
இருக்கும் இருக்கும்....
ஆனாப் பாருங்கோ
அன்ன தான மடம் என்று சொன்னால்
அள்ளிப் பணம் வழங்கமாட்டாரென்று
திருமண மண்டபம் அல்லோ
கட்டப்போறமென்று
புலம்பெயந்த சனத்திட்ட
கறக்கிறாங்கள் பணத்தை!
அழ பகீதனின் ''எப்படிஎனிலும்'' கவிதைத் தொகுப்பிலிருந்து.

1 comment:

  1. கவிதை பிரசுரித்தமை நன்று. இந்தக்கவிதையை பே,வேந்தன் குரலில் கேட்டபோது கவிதை உயிர்ப்பு பெற்றதை உணர்ந்தேன்,.அழ. பகீரதன் என்பதே சரியான பெயர், பண்ஒளியிலும் தவறுதலாக பகீதரன் என வந்துள்ளது.

    ReplyDelete