கவியொளி:பக்கத்து வீட்டு பைங்கிளி





பக்கத்து வீட்டு பைங்கிளி

கோடியில் நிற்குது,

வெக்கத்தை விட்டு அது

ஆடிப் பாடுது,

தூக்கத்தை கலைத்து எனக்கு

துடிப்பை தருகுது,

ஏக்கத்தை கூட்டி மனதை

நொடியில் வாட்டுது!

  

மேகத்தை கூட்டி மழை

தானாய் கொட்டுது,

தேகத்தை நனைத்து கிளி

கானா பாடுது,

ராகத்தை வீசி என்னை

மீனாய் பிடிக்குது,

மோகத்தை கொட்டி அது

மானாய் மறையுது!

 

ஆற்றம் கரையில் பைங்கிளி

      அன்னநடை போடுது,

நூற்றுக்கு மேல் அன்னம்

      பின்னால் தொடருது,

காற்று வேகத்தில் தாவணி

      மின்னலாய் மறையுது, 

முற்றும் துறந்த முனியும்

       தன்னை மறக்குது!

  

வயல் வெளியில் பைங்கிளி

      துள்ளி திரியுது,

கயல் விழியில் கவர்ச்சியை  

      அள்ளி எறியுது,

மயக்கம் கொடுத்து நெஞ்சை

      கிள்ளி இழுக்குது,

தயக்கம் கொண்டு கொஞ்சம்

      தள்ளி போகுது! 

  

 

அரசமர நிழலில் பைங்கிளி

      ஊஞ்சல் ஆடுது,

முரசொலி போல என்னை

      குஞ்சம் அழைக்குது,

விரசமில்லா சரச புன்னகை

      நெஞ்சை தாக்குது,

பரவசம் அடைந்து மனம்

      கொஞ்சம் தளருது!


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]



0 comments:

Post a Comment