மட்டக்களப்பு ( Batticaloa,මඩකලපුව) இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மிகப் பெரிய நகரமும், மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவில் முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர். இதன் எல்லைகளாக திருகோணமலை, பொலன்னறுவை, அம்பாறை ஆகிய மாவட்டங்கள் அமைகின்றன. கொழும்பிலிருந்து இது 301 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
மீன்கள்தான் இசையெழுப்பின என்ற கருத்தும் பிரதேசவாசிகளிடம் காணப்படுகிறது. இதன் காரணமாக மட்டக்களப்பு 'மீன் பாடும் தேன் நாடு' என பன்னெடுங் காலமாக அழைக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டம் வாவியால் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒருபகுதி எழுவான்கரை (சூரியன் எழும் பகுதி அ-து கிழக்குப்பகுதி) என்றும் மறு பகுதி படுவான்கரை (சூரியன் மறையும் பகுதி அ-து மேற்குப்பகுதி) என்றும் அழைக்கப்படுகின்றது. காடுகள், விவசாய நிலம், வாவி, முகத்துவாரம்,கடல், அணைகள், களப்பு, இயற்கைத் துறைமுகம், குளம் போன்ற புவியியல் அம்சங்களைக் கொண்டுள்ளது. படுவான்கரைப் பிரதேசம் வளமிக்க விவசாய நிலத்தினைக் கொண்ட பகுதியாகும். மட்டக்களப்பு பிரதான நகரினைச் சூழ்ந்து வாவி காணப்படுவது இயற்கை வனப்பான விடயமாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய பொருளாதார நடவடிக்கையாக விவசாயம் காணப்படுகின்றது. தெங்கு உற்பத்திக்குரிய சிறப்பான வளங்களை இம்மாவட்டம் கொண்டிருந்தது.சிறுபோக, பெரும்போக பயிர்ச்செய்கை விவசாயத்தில் முக்கிய இடம்பெறுகின்றது. கொச்சி மற்றும் சின்ன வெங்காய பயிர்ச்செய்கையும் முக்கிய விளைச்சல் பயிர்களாகும்.
கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு இங்கு பொருளாதாரத்தில் முக்கிய இடம்பெறுகின்றன. கடல் மற்றும் பிற நீர்வளங்கள் இங்கு உள்ளதால் மீன்பிடி முக்கிய தொழிலாகவுள்ளது. இறால், நண்டு என்பன முக்கிய வருவாய் ஈட்டித் தருவனவாகவுள்ளன. மட்டக்களப்பு நகர் மற்றும் அதனைக் கிட்டிய இடங்களில் கைத்தொழில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
அரச மற்றும் தனியார் வங்கிகள் நகரத்தில் காணப்பட்டு, பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்புச் செய்கின்றன.
இங்கு பெரும்பாலும் தமிழர் பண்பாடு செல்வாக்கு செலுத்தும் ஒன்றாகக் காணப்படுகின்றது. இசை, நடனம், நாடகம், சமயம் என இதன் தாக்கம் உள்ளது. தமிழர் ஆடற்கலைகளில் ஒன்றான நாட்டுக்கூத்து (வடமோடி, தென்மோடி
நாட்டுக்கூத்து) இங்கு பிரபல்யம் பெற்றது. ஆயினும், குறிப்பாக முசுலிம்கள் அதிகமாகம் வாழும் பகுதிகளில் இசுலாமிய கலாச்சாரம் காணப்படுகின்றது. மட்டக்களப்பு காலணித்துவ ஆட்சியின் கீழ் இருந்ததால், இங்கு ஐரோப்பிய போர்த்துக்கேய கலாச்சாரத்தின் தாக்கம் குறிப்பிடத்தக்கது. இங்கு "கத்தோலிக்க பறங்கியர்
ஒன்றியம்" என்ற போர்த்துக்கேய கலாச்சாரத்தை பின்பற்றும் அமைப்பு காணப்படுகின்றது. இலங்கையில் அதிகளவில் இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி பேசுவோர் இங்குள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து, இசுலாம், கிறித்தவம், பெளத்தம் ஆகிய நான்கு சமய நம்பிக்கை கொண்டவர்கள் இம்மாவட்டத்தில் காணப்படுகின்றனர். இவர்களில் இந்துக்கள் அதிகமாகக் காணப்படுகின்றனர்.
மட்டக்களப்பில் பல துறைகளிலும் பாண்டித்தியம் பெற்ற பலர் வாழ்ந்துள்ளனர். அவர்களில் பன்முகத் தமிழறிஞர்களான ஈழத்துப் பூராடனார், ஏ. பெரியதம்பிப்பிள்ளை, வி. சீ. கந்தையா, விபுலாநந்தர், வீ. தோ. பொ. த. ஆறுமுகபிள்ளை போன்ற பலர் வாழ்ந்துள்ளனர்.
0 comments:
Post a Comment