"புறநானூற்று
மாவீரர்கள்" / பகுதி 04
[மாவீரன்
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்]
சங்க காலத்தில் தமிழர் போர் மரபுகள் அறப் போர் முறையைச் சார்ந்ததே ஆகும். அவர்களது போர் முறை நேர்மையாக இருந்தது. காலை சூரிய உதயத்தின் போது முரசறைந்து போர் தொடங்குவர். சூரியன் மறையும் வரை மட்டுமே போர் நடை பெற்றது. பின் முரசறைந்து போரை நிறுத்துவர். சங்க காலத்து தமிழர்களின் தரைப் படைகள் ஐந்து படையணிகளாக பகுக்கப் பட்டிருந்தன: அவை யானைப் படை, குதிரைப் படை, தேர்ப் படை,காலாட் படை, தூசிப் படை ஆகும் இதில் நவீனயுக கொமாண்டோப் படையணிகளுக்கு நிகராக இயங்கியதே தூசிப் படையாகும். அதாவது முதலாவதாக வந்து [படையின் முதற்பகுதியாக] சண்டையிடும் படை தான் தூசிப் படை அல்லது தார் ஆகும். ["தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து."/குறள் எண்: 767] இனி, அப்படியான எதிர்த்து வரும் தூசிப் படையத் தடுத்துப் போரில் வெற்றி பெறுவது எப்படி? என ஆறாத் துயரம் எய்தி, கேள்வி கேட்கிறார் கழாத்தலையார் என்ற கி.மு மூன்றாம் / இரண்டாம் நூற்றாண்டளவில் வாழ்ந்த, சங்க புலவன். இவனை இப்படி கேட்க வைத்தது சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக் கைப் பெருவிறற் கிள்ளி ஆகிய இருவரினதும் வீரச் சாவு தான்.
பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத்
தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச்
சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரரகளின் கொடி விற்கொடி ஆகும்.
சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம்.
மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில
சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் சங்ககாலச் சேர மன்னர்களில் ஒருவன். இவன் போர் வன்மையும் கொடைச் சிறப்பும் மிகுந்தவன். இவனுக்கும் சோழன் வேல்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி என்னும் சோழ மன்னனுக்கும் இடையே திருப்போர்ப்புறம் [திருப்போர்ப்புறம் என்பது இப்போது தஞ்சை மாவட்டத்தில் கோவிலடியென வழங்குகிறது] என்னுமிடத்தில் போர் நடந்தது. போரில் இருவரும் தம் படைகளைப் போரிட வேண்டாம் என்று நிறுத்தி விட்டு, இவ்விருவர் மட்டுமே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இவ்வாறு போரிடும் முறைக்கு ‘அறத்தின் மண்டுதல்’ [அறம்:- ஒழுக்கம், மண்டு:- தாக்கு] என்று பெயர். போர்க்களத்தில், சேரமான் உயிர் நீங்கும் தறுவாயில் இருப்பதைக் கண்ட கழாத்தலையார் அவனைப் புகழ்ந்து பாடினார். சேரன் தன் கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி கழாத்தலையாருக்கு அணிவித்துப் பின்னர் இறந்தான். மன்னர்கள் இருவரும் இந்தப் போரில் விழுப்புண்பட்டு போர்க்களத்திலேயே இறப்பதைக் கண்ட புலவர் கழாத்தலையார் மிகுந்த வருத்த முற்றார். அவர்களுடைய வெற்றியை அறை கூவும் முரசு ஓய்ந்தது. மன்னர்களின் மனைவியர் கைம்மை நோன்பை மேற்கொள்வதை விரும்பாது தம் கணவரைத் தழுவி உயிர் துறந்தனர். விண்ணுலகத்தில் உள்ள தேவர்கள் இந்த இரு மன்னர்களையும் விருந்தினராகப் பெற்றனர் என்று இந்த காட்சியை பார்த்து விட்டு தான் இப்படி பாடினான்.
"வருதார் தாங்கி அமர் மிகல் யாவது
பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டுக்
குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி
நிறம் கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்
எடுத்து எறி அனந்தர் பறைச் சீர் தூங்கப்
பருந்து அருந்துற்ற தானையொடு செரு முனிந்து
அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாம் மாய்ந்தனரே குடை துளங்கினவே
உரை சால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே
பன் நூறு அடுக்கிய வேறு படு பைஞ்ஞிலம்
இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறைக்
களம் கொளற்கு உரியோர் இன்றித் தெறுவர
உடன் வீழ்ந்தன்றால் அமரே பெண்டிரும்
பாசடகு மிசையார் பனி நீர் மூழ்கார்
மார்பகம் பொருந்தி ஆங்கு அமைந்தன்றே
வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவினோரும் ஆற்ற
அரும் பெறல் உலகம் நிறைய
விருந்து பெற்றனரால் பொலிக நும் புகழே!"
[புறநானூறு 62]
இனி, எதிர்த்து வரும்
தூசிப்படையத் தடுத்துப் போரில் வெற்றி பெறுவது எப்படி? அப் போர்க்
களத்தில் சண்டையிட்டு அங்கே புண் பட்ட வீரர்களின் புண்ணைத் தோண்டிக், குருதி தோய்ந்த
சிவந்த கையால் தமது தலை மயிரைக் கோதிய, ஓளிமிக்க உருவத்தையுடைய பேய்ப் பெண்கள், மேன் மேலும் கொட்டு
கின்ற மந்தமான தாளத்திற்க் கேற்ப ஆடுகின்றனர். இறந்த படை வீரர்களின் உடலைப்
பருந்துகள் உண்ணுகின்றன. அத்தகைய படை யோடு, சினந்து அறவழியில் போர் புரிந்த வீரமுடைய
மன்னர்கள் இருவரும் இறந்தனர். அவரது குடைகள் தளர்ந்தன. அவர்களுடைய புகழ் மிகுந்த
சிறப்புடைய முரசுகள் வீழ்ந்தன. நூற்றுக் கணக்கான படை வீரர்கள் அடங்கிய பல வகைப்
படைகளும் இருக்க இடமில்லாத படி நெருங்கி இருக்கும் அகன்ற பாசறைகளில், போர்க் களத்தைத்
தம்முடையதாக்கிக் கொள்வோர் இல்லாமல், காண்போர்க்கு அச்சம் தரும் வகையில் போர் உடனே
முடிந்தது. மன்னர்களின் மனைவியர் பசுமையான கீரைக் கறியை உண்டு, குளிர்ந்த நீரில்
மூழ்கும் கைம்மை நோன்பை விரும்பாதவராய் தம் கணவரைத் தழுவி உடன் கிடந்தனர். வாடாத
பூக்களையும், இமைகளைச்
சிமிட்டாத பார்வையையும், நறுமணமுள்ள அவியாகிய உணவையும் உடைய தேவர்கள் பெறுதற்கரிய
விருந்து பெற்றனர். உங்கள் புகழ் விளங்குவதாக, என அந்த புலவன்
இருவரையும் வாழ்த்தினான்.
போர் என்னும் ஊரைப் போர்வை என்றும்,போஒர் என்றும் சங்கப் பாடல்கள்
குறிப்பிடுகின்றன. போர் என்றவுடன் சண்டை நினைவுக்கு வந்துவிடும். இதிலிருந்து
வேறுபடுத்துக் காட்ட ஊர்ப்பெயரைப் போஒர் என்றனர். இவ்வூர் போர்களமாகவும் மாறியது.
அப்போது திருப்போர்ப்புறம் எனப்பட்டது. இங்குப் பாடிவீடு அமைக்கப்பட்ட இடம்
கட்டூர் எனப்பட்டது. இந்தத் திருப்போர்ப் புறம் தஞ்சை மாவட்டத்திலுள்ள ’கோவிலடி’
என்ற ஊர் என்றும்,
இவ்வூர்க் கல்வெட்டுக்களில் ‘திருப்பேர்த்
திருப்புறம்’என்று குறிப்பிடுவதாகவும் சொல்லப்படுகிறது.
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் போர் வன்மையும் கொடைச் சிறப்பும் மிக உடையவன்.
இவனுக்குப் பிறகு சேர நாட்டை ஆட்சி செய்தவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனாவான்.
வரலாற்று ஆசிரியர்கள் உதியஞ் சேரலாதன் என்ற சேர மன்னனின் மகனாகிய இமயவரம்பன்
நெடுஞ் சேரலாதன் என்னும் சேரமன்னனுக்கும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்
கிள்ளிக்கும் இடையே நடந்த போரில் இருவரும் இறந்ததாகக் கூறுகின்றனர். ஆகவே, சேரமான் குடக்கோ
நெடுஞ்சேரலாதனும் இமயவரம்பன் நெடுஞ்சேர லாதனும் ஒருவனே எனப்படுகிறது.
கரிகால் வளவனுக்கு மணக்கிள்ளி, வேற்பஃறடக் கைப் பெருவிறற்கிள்ளி என்று இரண்டு
மகன்கள் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். கரிகால் வளவன் இறந்த பிறகு, வேற்பஃறடக்கைப்
பெருவிறற்கிள்ளி புகார் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை
ஆண்டான்.
மணக்கிள்ளி என்பவனின் மகள் நற்சோனை என்பவளை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மணம்
புரிந்தான். கண்ணகிக்குச் சிலையெடுத்த சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகாரம்
இயற்றிய இளங்கோவடிகளும் இமயவரம்பனுக்கும் நற்சோனைக்கும் பிறந்த மகன்கள் என்று
கூறப்படுகிறது.
கிட்டத் தட்ட இப்படியான ஒரு போர் தான் எல்லாளனுக்கும் [அனுராதபுரத்தைத்
தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன்] துட்டகாமினிக்கும் [இவனுடைய
இயற்பெயர் கெமுனு என்றும், துஷ்டத்தனம் செய்து வந்ததால், துட்ட காமினி
என்று அழைக்கப்பட்டான் என்றும் மகாவம்சம் கூறுகிறது. தென் இலங்கையை ஆண்ட மன்னன்]
இடையில் இலங்கையில் இரண்டாயிரத்தி நூறு
வருடங்களுக்கு முன் நடைபெற்றது. துட்டகைமுனுவால் எல்லாளனின் போர்த்தந்திரமையை
வெற்றி கொள்ள முடியவில்லை. அவனது படையிலே இறப்புக்கள் அதிகமாக காணப்பட்டதாக
சான்றுகள் கூறுகின்றன. அதனால் "நாம் இருவரும் நேருக்கு நேர் நின்று போர்
புரிவோம். யாருக்கு வெற்றி என்பதை நமது நேரடிப் போர் தீர்மானிக்கட்டும்"
என்றான் கெமுனு என்னும் துஷ்டகாமினி. போர் நடந்த போது எல்லாளனுக்கு வயது 74.துட்ட காமினி
இளைஞன். என்றாலும் அவன் விட்ட சவாலை, தமிழ் மன்னன் எல்லாளன் ஏற்றுக் கொண்டான். அவன்
அறப்போர் மரபு வழி வந்தவன் அல்லவா?
இருவரும் பட்டத்து யானைகள் மீது அமர்ந்து போரிட்டனர். எல்லாளன் வயோதிகராக இருந்தாலும் தீரத்துடன் போரிட்டார். என்றாலும், துட்டகாமினியின் யானை, தன்னுடைய தந்தத்தால் எல்லாளன் அமர்ந்திருந்த யானையின் முகத்தில் குத்தி கிழித்தது. யானை கீழே சாய்ந்தது. அது உடன் சேர்ந்து எல்லாளனும் விழுந்தான் அப்பொழுது, யுத்த தருமத்திற்கு மாறாக துட்ட காமினி எறிந்த ஈட்டி, எல்லாளன் உயிரைக் குடித்தது. அதன் பின் அவன் திட்டங்கள் முற்றாக நிறைவேறுவதற்கு முன், பாம்பு கடித்து அவனும் பின் இறந்து போனான்.
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி 05
- "மாவீரன்
அதியமான் நெடுமான் அஞ்சி" தொடரும். வாசிக்க அழுத்துங்கள்👉
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள்👉 Theebam.com: புறநானுற்று மா வீரர்கள் [பகுதி/Part 01]
0 comments:
Post a Comment