["மாவீரன் பாண்டியன் நெடுஞ்செழியன்"]
வீரயுக காலம் என கலாநிதி கைலாசபதியால் கருதப்பட்ட , சங்க கால தமிழ்
பெண்களின் / தாயின் வீரம் செறிந்த பண்பினை முன்பு பார்த்தோம். மானமா? உயிரா? என்று கேட்டால், மானமே பெரிது
என்று வாழ்ந்த வாழ்க்கை தான் புறநானூறு வாழ்க்கை. "மயிர் நீப்பின் உயர் வாழாக்
கவரி மான்" தான் அந்த வீரர்கள். இதைத் தான் வள்ளுவரும் தனது குறள் 969 இல்
"மயிர்நீப்பின்
வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்."
என்று கூறுகிறார். அதாவது நாணி நிற்கும் சூழல் நேரா வண்ணம் நம்முடைய செயல்கள் ,குணங்கள் இருக்க
வேண்டும் என்கிறார். அப்படித்தான் அன்று வீர மரணம் அடையும் போக்கு சங்க கால
வீரனிடம் இருந்தது.
இந்த வலிமையை வீரத்தை சேர்ப்பது தாய் முலைப் பாலடா என்கிறார் பாரதியார்.
"கருவினில்
வளரும் மழலையின்
உடலில் தைரியம்
வளர்ப்பாள் தமிழன்னை..
களங்கம் பிறந்தால்
பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள்பிள்ளை!"
["அச்சம்
என்பது மடமையடா" / மன்னாதி மன்னன் (1960)]
என்கிறான் கண்ணதாசன். தாயின் கருவில் உண்டாகும் போதே ஒரு மனிதனின் பண்புகள்
உருவாகின்றன என்கிறது விஞ்ஞானம். இந்த வீரத் தமிழ் தாய் அத்துடன் நிற்கவில்லை.
தமது பிள்ளைகளின் மார்பில் ஐம்படைத் தாலி
அணிவித்து இன்புற்றனர் என்கிறது சங்க பாடல்கள். அதுமட்டும் அல்ல, கம்பராமாயணம் /
பால காண்டம் / நாட்டுப் படலத்தில் [58] கூட :
"தாலி
ஐம்படை தழுவு மார்பிடை
மாலை வாய் அமுது ஒழுகு மக்களைப்
பாலின் ஊட்டுவார் செங்கை ... "
என்று கூறுகிறது. அதாவது
ஐம்படைத் தாலி அணி செய்யும்
மார்பிலே சொள்ளு நீர் வழியும் [saliva - உமிழ்நீர்; எச்சில்] தம்
குழந்தைகளுக்குத் பாலமுதைப் புகட்டும்
தாய்மார்களின் அழகிய கைகள் என்று கூறுகிறது. அது என்ன ஐம்படைத் தாலி? வேல் [அல்லது
சங்கு], சக்கரம், தண்டாயுதம், வாள், வில் ஆகிய ஐந்து
கருவிகளின் உருவங்களால் அமைந்த தாலியை பிறந்து ஐந்தாம் நாள் அணிவித்து
மகிழ்கிறார்கள். அதன் பின் சிறிது வளர, அவர்களின் விளையாட்டு காலங்களில் சேவற்கோழி, ஆட்டுக்கடா, எருது போன்ற
வற்றை ஒன்றோடு ஒன்று மோத விட்டு பார்த்து மகிழ விடுகிறார்கள். இப்படி வீரத்தை
ஊட்டியவர்கள் இந்த வீர பெண்கள் / தாய்கள். அதாவது வீரத்தையே பாலாக ஊட்டி வளர்த்த
பண்பினை காண்கிறோம்.
"வாழ்ந்தவர்
கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?
மாபெரும் வீரர் மானங் காப்போர்
சரித்திரந்தனிலே நிற்கின்றார் “
இப்படி கண்ணதாசன், அதே பாடலின் இறுதியில் கூறுகிறான். அப்படி மக்கள் மனதிலும்
சரித்திரத்திலும் நிற்கின்ற, அவர்கள் வளர்த்த சில மாவீரர்களை இனி பார்ப்போம்.
மாவீரன் பாண்டியன் நெடுஞ்செழியன்:
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற சிறப்புப் பெயரைப்
பெற்ற சங்ககாலப் பாண்டிய நாட்டினை கி.பி. 205 முதல் 215 வரை ஆட்சி செய்த ஒரு மன்னன். இவரின் தந்தை
இளமையிலேயே இறந்ததும், இவனது தாயும் அந்த கால மரபுப்படி உடன்கட்டை ஏறியதாலும்
[கணவனை இழந்த மனைவி அவரின் சடலம் தீமூட்டப்படும் போது அந்தத் தீயில் தன்னை அழித்துக்
கொள்ளுதல் உடன்கட்டை ஏறுதல் எனப்படுகிறது. இந்த சடங்கு ஆங்கிலேயர் ஆட்சியில் 1829 ம் ஆண்டு
சட்டத்துக் எதிரானதாக ஆக்கப்பட்டது], சிறு வயதிலேயே முடிசூட்டப் பட்டவன் இவன்.
புறநானூறு 77 இவனை, இந்த பாலகனை,
"கிண்கிணி
களைந்த கால் ஒண் கழல் தொட்டு,
......................................................................
.........................................
தார் பூண்டு,
தாலி களைந்தன்றும் இலனே; பால்
விட்டு
அயினியும் இன்று அயின்றனனே; "
என்று பாடுகிறது. அதாவது சலங்கை கழற்றப் பட்ட கால்களில் ஒளி பொருந்திய கழல்கள்
அணிந்திருக்கிறான் [கழல் என்பது காலில் அணியும் ஒருவகை அணி. காலில் கழல் அணிவது
அவர்களுடைய வீரத்தை எடுத்துக் காட்டுவதற்காக. அதற்குப் பெயரே 'வீரக்கழல்'. ஆண்கள் அணிவது
இந்த வீரக் கழலைத் தான்.] ......... ஆனால் அவன் இன்னும் (சிறுவர்கள் அணியும்)
ஐம்படைத் தாலியைக் கழற்றியதாகத் தெரியவில்லையே! பாலுணவு உண்ணுவதை நிறுத்தி இன்று
தான் சோற்றுணவு உண்டவன் போலத் தோன்றுகிறானே! என்று கூறுகிறது.
நெடுஞ்செழியன் இளையவன், வயது முதிராதவன் ஆற்றல் இல்லாதவன் என இகழ்ந்து
சோழநாட்டை ஆண்ட இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேர நாட்டை ஆண்ட
மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கொங்கு நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய
குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர். இவ்வனைவரும் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது
படை யெடுத்துத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தாக்கினர். இதை அறிந்த இவன்:
“இந்தப் பாண்டியன்
நெடுஞ் செழியனுடைய நாட்டையும் சிறுவனாகிய இவன் அரசாள்வதையும் தங்கள் அறியாமையால்
சிலர் இகழ்ந்து கூறிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகையவர்கள் சிரித்து
இகழத்தக்கவர்கள். அவர்கள், என்னை அறியாப் பருவத்தினன் என்று கூறித் தங்கள் யானைப்
படைகளையும் தேர்ப் படைகளையும் குதிரைப் படைகளையும் காலாட் படைகளையும் செருக்கோடு
திரட்டிக் கொண்டு வந்திருக் கிறார்கள். அவர்கள் தங்களைப் பற்றித் தாங்களே தேவைக்கு
அதிகமான தன்னம்பிக்கை கொண்டிருப்பவர்கள் என்னையும் என் அரசையும் துணிவாக இழித்துப்
பேசியவர்கள் ஆவார்கள்.
அவர்களை வேரோடு அழிந்து சிதைந்து போகும் படியாகத் தாக்கி முரசத்தையும்
குடையையும் கைப் பற்றிக் கொண்டு வெறுங்கையர்களாகத் துரத்த வில்லையானால் என் பெயர்
பாண்டியன் நெடுஞ்செழியனில்லை. என் வெண்கொற்றக் குடையின் நிழற் கீழே வாழும்
குடிமக்கள் என் ஆட்சியில் அறம் காணாமல் ‘இந்த அரசன் கொடியவன்’ என்று பழி தூற்றப்
படுவேனாக! மிக்க சிறப்பையும் உயர்ந்த அறிவையும் உடைய மாங்குடி மருதனைத் தலைவராகக்
கொண்ட பாண்டிய நாட்டுப் புலவர்கள் என்னை விரும்பிப் பாடா தொழியட்டும். ஆளப்படும் மக்களெல்லாம்
அழுது புலம்பிட, ‘இல்லை யென்று
கேட்ட இரவலர்க்கு இட்டு மகிழாத பாவம் என்னை வந்து சேரட்டும். இது என் சபதம்...”
என தனது புறநானூறு பாடல் 72 மூலம் வஞ்சினம் கொட்டி, உடனே படைகளோடு
போருக்குப் புறப் பட்டான். அத்தனை அரசர்களையும் எதிர்த்துப் போரிட்ட இந்த, நெடுஞ்செழியன்
அனைவரையும் தோற் கடித்தான் என்பது வரலாறு. இவனது இந்த பெருமையை புலவர் மாங்குடி
கிழாராகிய மருதனார் இப்படி கூறுகிறார்:
மிக ஆழமான பெருங்கடலில் காற்றால் உந்தப்பட்டு / தள்ளப்பட்டு ஓடும் மரக்கலம்
நீரைக் கிழித்துக் கொண்டு செல்வது போல, உன் யானைகள் சென்று போர்க் களத்தில் வீரர்களை
விலக்கி இடம் அகலச் செய்து ஊடுருவ, அவ்வாறு களம் அகலச் செய்த பரந்த இடத்தில், அதாவது அந்த யானை
சென்ற அகன்ற பாதையில், ஒளிவிடும் வேல்களை ஏந்தி உன்னை எதிர்த்த அரசர்களை அழித்து
போர்க் களத்தைக் கலக்கி, அவர்களது புகழ் பொருந்திய முரசுகளை நீ கைப்பற்றினாய்.
அவ்வரசர்களின் முடி [கிரீடம்] யணிந்த தலைகளை அடுப்பாகவும்,அவர்களின்
குருதியை உலை நீராகவும், வீரவளை அணிந்த அவர்களின் கைகளைத் துடுப்பாகவும் கொண்டு
துழாவிச் சமைக்கப்பட்ட உணவால் போர் வேள்வி செய்த செழிய! நிலை பெற்ற புகழுடைய
வேள்விகளைச் செய்து முடித்த வேந்தே! நீ அவ் வேள்விகளைச் செய்த பொழுது, நிறைந்த கேள்வி, ஐம்புலன்களை
அடக்கிய மனவலிமை, நான்கு
வேதங்களையும் கற்றதால் பெற்ற அறிவு, ஆகியவற்றையுடைய அந்தணர்கள் உன்னைச்
சூழ்ந்திருந்தார்கள்; பகை மன்னர்கள் உனக்கு ஏவல் செய்தார்கள். உன்னோடு மாறு பட்டு
உன்னை எதிர்த்த பகைவர்களும் ஒருவகையில் நோன்பு செய்தவர்கள் தான். அவர்கள் போரில்
வீரமரணம் அடைந்ததால், அவர்களும் விண்ணுலகம் சென்று வாழ்கிறார்கள். அதாவது போரில்
வீரமரணம் அடைந்தவர்கள் எல்லோரும் எந்த வேறுபாடும் இன்றி சொர்க்கம் போவார்கள் என்று
உரைக்கப்படுகிறது. இனி அந்த பாடலை பார்ப்போம்.
"நளிகட
லிருங்குட்டத்து
வளிபுடைத்த கலம்போலக்
களிறுசென்று களனகற்றவும்
களனகற்றிய வியலாங்கண்
ஒளிறிலைய வெஃகேந்தி
அரைசுபட வமருழக்கி
உரைசெல முரசுவௌவி
முடித்தலை யடுப்பாகப்
புனற்குருதி யுலைக்கொளீஇத்
தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியின்
அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய
ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்ற மாக
மன்ன ரேவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே
நோற்றோர் மன்றநின் பகைவர் நின்னொடு
மாற்றா ரென்னும் பெயர்பெற்
றாற்றா ராயினு மாண்டுவாழ் வோரே."
[புறநானூறு
பாடல் 26]
மேலும், புறநானூறு 19, & 25, அகநானூறு 36, 175 & 209, நற்றிணை 387, மதுரைக்காஞ்சி 55, 127 பாடல்களில் இந்த
தலையானங்கானத்து போரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அப்படி பெருமை பெற்ற, சிறப்பு பெற்ற
இவனின் தந்தை, வெற்றிவேற்
செழியன் ஆகும். இவன், கண்ணகியின் கணவன் கோவலனைக் கள்வன் என்று பழி சுமத்திக் கொலை
செய்த, ஆரியப்படை கடந்த
நெடுஞ்செழியன் என்பவனின் தம்பி ஆகும்.
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி
04 -
"மாவீரன் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்" தொடரும். வாசிக்க அழுத்துங்கள்👉
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள்👉Theebam.com:
புறநானுற்று மா வீரர்கள் [பகுதி/Part 01]
♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔
No comments:
Post a Comment