[வீரத் தாய் [வீர அன்னை]]
சங்க காலச் சமூகம் ஒரு போர்ச் சமூகம்; அதன் ஒட்டு மொத்த இயக்கமும் போரை மையப் படுத்தியே இருந்தது என்பதைப் பல்வேறு ஆய்வுகள் மூலம் ஏற்கெனவே நிறுவியுள்ளன. உதாரணமாக
"ஒருவனை
ஒருவன் அடுதலும், தொலைதலும்,
புதுவது அன்று; இவ்
உலகத்து இயற்கை’’- (புறநானூறு 76)
..............................................
பசும்பூட் செழியன்
10
பீடும் செம்மலும் அறியார் கூடிப்
பொருதும் என்று தன்தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
ஒருதான் ஆகிப் பொருது களத்து அடலே!"
என்று அடித்து சொல்கிறது. அதாவது 'ஒருவனை
ஒருவன் தாக்கிப் போரிடுவதும், அப்போது
ஒருவனோ அல்லது இருவருமோ மாண்டு போவதும் இயல்பு தான்.
.... என்றாலும் பசும் பொன்னாலான அணி கலன்களை அணிந்த நெடுஞ் செழியனின் செல்வம்
பொருந்திய நாட்டையும் அவனுடைய பெருமையையும் அறியாமல், கூடிப் போர்
செய்வோம் என்று தன்னிடத்தில் வந்த கழலணிந்த எழுவரின் நல்ல வலிமை அடங்குமாறு தான்
ஒருவனாக நின்று போர்க் களத்தில் அவர்களை அழித்ததை முன்பு கண்டதில்லை' என்று
தலையாலங்கானப் போரில் பாண்டியன் ஏழு அரசர்களை
எதிர்த்துப் போரிட்டதைக் கண்ட புலவர் பாடுகிறார்.
இப்படி பல சான்றுகள் புறக் கவிதைகளில் மேலே கூறியவாறு ஏராளமாக உள்ளன, என்றாலும் கவி
பொன்முடியின் ஒரு கவிதை முதன்மையான ஆதாரம் எனச் சொல்லும் விதமாக அமைந்துள்ளதை
எவரும் மறுக்க இயலாது. "வாளைக் கையில் ஏந்தி போர்க்களத்தில் இருந்து
வெற்றியுடன் மீள்வது ஆண்மகனின் கடமை" என்கிறது!
சங்கப் பாடல்களை எழுதிய புலவர்களின் எண்ணிக்கை 473 பேர். அவற்றில் பெண் புலவர்களின் எண்ணிக்கை 41 ஆகும். 16 புறநூனூற்றுப் புலவர்கள். அவர்கள் 59 பாடல்களைப் பாடியுள்ளனர். அதில் ஒரு புலவர் தான் இந்த பொன்முடியார். இவர் ஒரு தாய்.
"ஈன்று
புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே"
என முடியும் (புறநானூறு 312) புகழ் பெற்ற அந்தக் கவிதை ஆகும். ஆண் மகனைப் பெறுவதில் சங்க காலச் சமூகத்துக் கிருந்த
மகிழ்ச்சியையும் அதை விட அவனை சான்றோன் ஆக்குதலில் இருந்த இரட்டிப்பு
மகிழ்ச்சியையும் நாம் இங்கு காண்கிறோம். சங்க காலத்தில் சான்றோன் என்பதற்கு வீரன்
என்ற பொருளே பொதுவாக இருந்தது.
ஒரு நாள், மறக்குடியில் பிறந்து மறக்குடியில் மணம் புரிந்த பெண்பாற் புலவராகிய காவற் பெண்டு அல்லது காதற்பெண்டு என்பவரின் இல்லத்திற்கு வந்த ஒருவர் அவரின் சிறிய வீட்டின் ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு, அவர் மகன் எங்கு உளன் என்று கேட்டார். அதற்கு, காவற் பெண்டு “உன் மகன் எங்கே உள்ளான்” என்று நீ என்னை கேட்கிறாய். இதோ என் வயிற்றைப் பார், என தன் வயிற்றைக் காட்டி, அவனைப் பெற்ற வயிறு இது. புலி இருந்து சென்ற குகை இது. என் மகனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு புலிக்கும் குகைக்கும் உள்ள தொடர்பைப் போன்றது. என் மகன், அந்த புலி, இப்ப குகையை விட்டு வெளியே போய் விட்டது. அவன் இப்ப தன் நாட்டுக்காக போர்க் களத்தில் இருப்பான். அங்கு போய்ப் பார் என்று கூறுகிறார். இதோ அந்த வீரத் தாயின் பாடல்:
"சிற்றில்
நற்றூண் பற்றி, நின்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல்அளை போல,
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத்
தானே"
[புறநானூறு
86]
பழந்தமிழ் மறத்தி ஒருத்தி நாட்டைக் காக்கத் தந்தையைப் போர்க் களத்திற்கு அனுப்பினாள். அவன் வீரச் சாவடைந்தான். நேற்றுக் கணவனைக் களத்திற்கு அனுப்பினாள். அவனும் களம் பட்டான். ஆனாலும் அவள் கலங்கவில்லை.இன்றும் போர்ப் பறை கேட்டுத் தன் மகனை - ஒரே மகனை இளம் பிள்ளையை அழைத்துக் கையில் வேலைக் கொடுத்துக் களத்திற்கு அனுப்பினாள் என ஓக்கூர் மாசாத்தியார் என்ற பெண்பாற் புலவர் மறத்தி ஒருத்தியின் மாண்பினைப் [சிறப்பை, பெருமையை] படம் பிடித்துக் காட்டுகிறார்.
"கெடுக
சிந்தை கடிது இவள் துணிவே
மூதின் மகளிர் ஆதல் தகுமே
மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை
யானை எறிந்து களத்து ஒழிந்தன்னே
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
பெரு நிரை விலக்கி ஆண்டுப்பட்டனனே
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல் கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇப
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒரு மகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்க என விடுமே."
[புறநானூறு
279]
களத்தில் உன் மகன் புறமுதுகிட்டான் என்று சிலர் சொல்லக் கேட்ட பழந் தமிழ் மறக்குடி முதியவள் ஒருத்தி, செவியில் விழுந்த சொல்லால் சீற்றம் கொண்டாள். “புறங்காட்டினான் மகன் என்பது உண்மையானால் அவனுக்குப் பாலூட்டிய மார்பினை அறுப்பேன்” எனச் சூளுரைத்தாள். கையில் வாளெடுத்தாள். களம் நோக்கிக் கடுகினாள். வடுப்பட்டு வீழ்ந்து கிடந்த பிணங்களை வாளாற் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள்: மகனைப் பிணமாகக் கண்டாள்: அழுகை பொங்கியது. ஆயினும் சிலர் சொன்னது போல் அல்லாமல் மகன் மார்பில் விழுப்புண் பட்டு [போரில் முகத்தினும் மார்பினும் பட்ட புண்] மாண்டான் என்பது கண்டு உவகை [மகிழ்ச்சி] கொண்டாள் .அவனை ஈன்ற ஞான்றினும் [நாள்] பெரிது உவந்தனள். இப்படிப் பழந் தமிழ் முதியவள் ஒருத்தியின் மறப் பண்பைக் [வீரத்தை] காக்கைப் பாடினியார் எடுத்துக் காட்டுகிறார்.
"நரம்பு
எழுந்து உலறிய நிரம்பா மென் தோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படை அழிந்து மாறினன் என்று பலர் கூற
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என்
முலை அறுத்திடுவென் யான் எனச் சினைஇக்
கொண்ட வாள் அடு படு பிணம் பெயராச்
செங்களம் துழவு வோள் சிதைந்து வேறாகிய
படு மகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே."
[புறநானூறு
278]
ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த, சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கிய மகாகவி காளிதாசன், தனது குமார
சம்பவத்தில் (7-87)
" நீ வீரர்களின் தாயாக விளங்க வேண்டும் (வீரப் ப்ரசவா
பவேதி)" என்று வாழ்த்துவதாகக் கூறுவதையும், தனது மற்றும் ஒரு
நாட்டிய நாடகமான சாகுந்தலம் காவியத்தில் சகுந்தலையை வாழ்த்தும் துறவிகளும்
முனிவர்களும் - வீரர்களின் தாயாக [வீரப்ரசவினீ பவ] விளங்குவாயாக என்று சகுந்தலையை
வாழ்த்துவதையும் கவனிக்க. அப்படிபட்ட வீரர்களின் நடு கல்லை "வீரக்
கற்கள்" என்றும் கூறுவர். பொதுவாக இறந்தவர்
எவருக்குமே நடுகற்கள் எடுக்கப் படலாமாயினும், வீரச்சாவு
அடைந்தவர்களுடைய நடுகற்களுக்கே
பெரு மதிப்புக் கொடுக்கப் பட்டு வந்தது. சங்க இலக்கியங்களில் கூறப்
பட்டுள்ள நடுகல் பற்றிய செய்திகள் அனைத்தும் போரில் வீரமரணம் அடைந்தவர்களின்
நினைவைப் போற்றி வணங்குவதற்காக நடப்பட்ட கற்களைப் பற்றிய தாகவே உள்ளதும்
குறிப்பிடத் தக்கது.
நெடுங்காலம் பிள்ளையில்லா ஒரு குடும்ப பெண், தனது முதுமை
பருவத்தில் ஒரு ஆண் பிள்ளையை பெற்றாள்.
மலடி பெற்ற மகன் என்று ஊரார் மறைவாகப் பேசினர். அவன் காளை பருவம் அடைந்த பொழுது
நாட்டில் போர் மூண்டது. தன் முதுமையையும் கருதாது, அந்த தாய், தன் ஒரே மகனை, வாழ்த்து கூறி
போருக்கு அனுப்பி வைத்தாள். போரில் அவன் யானையை எதிர்த்துப் போரிட்டு இறந்தான். இதை கேள்வியுற்ற அந்த தாய், பிறவி பயனைப்
பெற்றவள் போல், பேரின்பம்
உற்றாளாம் என்கிறது இன்னும் ஒரு பாடல்.
"மீன்உண்
கொக்கின் தூவி அன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர்,
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே"
[புறநானூறு 277]
மீன் உண்ணும் கொக்கின் இறகு போன்ற வெண்மையான, நரைத்த கூந்தலையுடைய முதிய தாய், தன் சிறுவன் யானையை எதிர்த்துப் போரிட்டு இறந்தான் என்ற செய்தியைக் கேட்டவுடன் அடைந்த மகிழ்ச்சி, அவள் தன் மகனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விட அதிகம். மகிழ்ச்சியால் அவள் வடித்த கண்ணீர்த் துளிகள், மூங்கிற் புதரில் உள்ள மூங்கிலில் தங்கியிருந்து கொட்டும் மழைத் துளிகளை விட அதிகமானவை என்று அந்த வீரத் தாயை பூங்கண் உத்திரையார் என்ற பெண்பாற் புலவர், அவளின் இந்த வியக்கத்தகு செயல்களைக் கண்டு பாடுகிறார்.
“ஈன்ற
பொழுதிற் பெரிதுஉவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்டத்தாய்”
(குறள்:69)
என்கிற திருக்குறளை மேலே நாம்
சுட்டிக் காட்டிய புறநானூற்றுப் பாடல்களோடு ஒப்பிட்டு பார்க்கலாம். ஒரு தாய் தன்
மகன் இறந்தாலும் அவன் சான்றோனாகவும், வீரனாகவும்
தான் இறக்க வேண்டும் என்றும், இது அவனைப் பெற்ற போது அடைந்த மகிழ்ச்சியை விட
உண்மையில் பெரியதாகும் என திருவள்ளுவர், சங்கத் தமிழரின்
வாழ்க்கை நெறி முறையை உணர்ந்தே இங்கு வீரத்தாயின் உணர்வினை படம் பிடித்துக்
காட்டுகிறார் என்று நம்புகிறேன்.
மேலும் சங்க காலத்தில் பெண்கள் வீரமானவர்களாகவும் , வீர மகன்களை பெற்ற வீர அன்னையாகவும் இருந்துள்ளனர் என்பதையும் ஆண் குழந்தைகள் வீரத்தின் அடையாளமாக, குறிப்பாக எண்ணப்பட்டது போல, அவர்களுக்கான வீரமும், வீரமரணமும் முக்கியமெனவும் பதிவு செய்யப் பட்டுள்ளதையும் காண்கிறோம். புறநானூற்றில் வீரமகனைப் பெற்றெடுத்த தாயின் உணர்வுகள் மிக மிகத் தெளிவாக, சில பாடல்களில் தரப் பட்டுள்ளதும் எம் கவனத்தை இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் தன்பால் ஈர்ப்பதும் அதன் பெருமையே ஆகும்!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி 03 - "மாவீரன் பாண்டியன் நெடுஞ்செழியன்" தொடரும்.... வாசிக்க அழுத்துங்கள்👉 Theebam.com: புறநானுற்று மா வீரர்கள் [பகுதி03]
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள்👉 Theebam.com: புறநானுற்று மா வீரர்கள் [பகுதி/Part 01]
அன்று எழுதப்பட்டு இன்று கிடைக்கப்பெற்று இறுக்கும் சில செய்யுள்களை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்தமாக ஆண்மக்கள் எல்லோருமே வீர சூரர்கள் என்று முடிவு செய்வது பிழையானது என்பதே அடியேனின் தாழ்மையான கருத்து.
ReplyDeleteஅன்று பாடிய புலவர்கள் பெரும்பாலும் ஏழ்மையில் வாழ்ந்து, அரசனால் அவ்வப்போது வழங்கப்படும் வெகுமதிகளைப் பெற்றே தங்கள் வயிற்றைக் கழுவ வேண்டிய சூழ்நிலை. எழுதும் நூல்களை வேறு இடங்களில் சென்று விற்றுப் பணமாக்கும் நிலை அப்போது இல்லை.
எப்பொழுதும் போர் புரிந்து நாட்டைக் காப்பாற்றுவதிலும், நாட்டைப் பிடிப்பதிலும் ஆவலாய் இருக்கும் அரசன்மார்களை உச்சி குளிரப் பண்ணுவதற்கு ஒரே வழி, உன் போர்ப்படையில் சேர்ந்து வீரச் சாவு பெறுவதற்கு எம் ஆண்மக்களும், தாய்மார்களும் எப்பொழுதுமே தயாராகவே இருக்கிறார்கள் என்று வீர வசனம் பேசுவது மட்டுமே. அப்போதுதான் கொஞ்சம் என்றாலும் அவர்கள் வயிறு நிரம்பும்; எதிராகப் பேசினால் தலை போகும் அல்லது பாதாளச் சிறையில் களிதான் உண்ணவேண்டி இருந்திருக்கும்.
"அன்று எழுதப்பட்டு இன்று கிடைக்கப்பெற்று இருக்கும் சில செய்யுள்களை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்தமாக ஆண்மக்கள் எல்லோருமே வீர சூரர்கள் என்று முடிவு செய்வது பிழையானது என்பதே அடியேனின் தாழ்மையான கருத்து."-
Deleteஇதை நானும் ஒத்துகொள்கிறேன் ஆனால் அந்த சங்க காலத்தில் உண்மையான வீரத்திற்கே நன் மதிப்பு இருந்தது என்பது பல பாடல்களில் இருந்து நாம் எடுத்து காட்டலாம்.அதை ஆமோதிப்பது போல "நடு கல் வணக்கம்" அமைகிறது.இதனால்தான் இதை வீரயுக காலம் என கலாநிதி கைலாசபதியால் கருதப்பட்டது என்பதையும் கவனிக்க.மேலும் இவ் நூற்றாண்டு கண்ணதாசனும் "...கனக விசயரின் முடித்தலை நெறித்து கல்லினை வைத்தான் சேரமகன் இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி இடைபட வாழ்ந்தான் பாண்டியனே.அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா..."என்று பாடினான்.
"அரசனால் அவ்வப்போது வழங்கப்படும் வெகுமதிகளைப் பெற்றே தங்கள் வயிற்றைக் கழுவ வேண்டிய சூழ்நிலை. எழுதும் நூல்களை வேறு இடங்களில் சென்று விற்றுப் பணமாக்கும் நிலை அப்போது இல்லை."
இப்படியான சூழ்நிலை அங்கு இருந்த்தது என்பது உண்மையே. ஆனால் அதற்காக முற்றும் முழுதாக "பொய் புகழ்" பாடினார்கள் என்றும் ஒதுக்கிவிட முடியாது.வேறு தடயங்கள்,குறிப்புகள் பலவற்றை உறுதி படுத்துகின்றன.
அதனால்தான் ஒரு சிலரை மட்டுமே எடுத்து இங்கு அலசி உள்ளோம்.
எது எப்படி இருப்பினும் ஆவூர் மூலங்கிழார் என்ற புலவர் பாண்டியனை நோக்கிப் பாடிய புறநானூறு 196, நீங்கள் மேலே கூறிய கருத்தை ஒத்து போகிறது .இதோ அந்த பாடல்:
"ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லே
இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயில் அத்தை;
அனைத்தா கியர்இனி இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம் அதனான்
நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும்
வெயிலென முனியேன்; பனியென மடியேன்;
கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை
நாணலது இல்லாக் கற்பின் வாள்நுதல்
மெல்லியல் குறுமகள் உள்ளிச்
செல்வல் அத்தை; சிறக்க நின்நாளே"
நீண்டநாட்கள் அரசன் வாயிலில் நின்றும் புலவருக்கு பொருள் கிடைக்கவில்லை. தருகிறேன் என்று சொன்ன அரசன் தரவில்லை. வயிறெரிந்து புலவர் பாடுகிறார். 'தருவதும் தராமல் விடுவதும் உன் விருப்பம். தருவதாகச் சொல்லி தராமல் இருப்பது நல்லதல்ல. உன் புதல்வர் நோயில்லாமல் வாழட்டும். கல்போலக் கரையாத வறுமையுடன், நாணத்தை தவிர வேறு எதையும் அணியாமல், வாழும் என் மனைவியிடம் நான் திரும்பிச் செல்கிறேன். நீ வாழ்க' என்கிறார் புலவர்.
அரசன் பரிசில் தராமல் ஒவ்வொரு நாளாக கடத்தி ஏமாற்றியதில் கொதிக்கும் புலவரின் நெஞ்சம் இந்த சங்க கவிதையில் மையமாகத் தெரிகிறது என்பதை கவனிக்க .
உங்கள் கருத்துக்கு நன்றிகள்.இப்படியான ஆக்கபூர்வமான மதிப்புரைகள் எம்மை மேலும் சிந்திக்க/அலச தூண்டுகிறது.
Its like you learn my mind! You appear to know so much about this, such as you wrote the guide in it or something.
ReplyDeleteI think that you simply could do with a few % to force the message
home a little bit, however instead of that, this is wonderful blog.
A fantastic read. I’ll definitely be back. I
have been browsing online more than 4 hours today, yet I never found any interesting article like yours.
It’s pretty worth enough for me. In my opinion, if all website owners
and bloggers made good content as you did, the internet will
be a lot more useful than ever before. I am sure this piece of writing has touched all the internet visitors, its really really nice piece of writing on building up new website.
http://samsung.com