தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். வடக்கே குரும்பசிட்டி, கிழக்கே புன்னாலைக்கட்டுவன், மேற்கே ஊரெழு, மற்றும் புன்னாலைக்கட்டுவனின் ஒரு பகுதி, மேற்கே ஏழாலை ஆகிய கிராமங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இதன் கிழக்கேபலாலி வீதியும் மேற்கே காங்கேசன்துறை வீதியும் அமைந்துள்ளன.
நீர்வளம், நிலவளம், கல்விவளம், தொழில் வளங்களோடு யாழ்ப்பாணத்துத் தொன்மை பேசும் பாரம்பரியம் மிக்க சகல வளங்களையும் மொத்தமாகத் தன்னகத்தே செழுமையான கிராமம். எமது முன்னோர்களின் காலத்தில் எங்களின் கிராமத்தில் சஞ்சீவிகளில் ஒன்றான குப்பிழாய் என்ற புல் வகையினம் அடர்த்தியாக வளர்ந்து காணப்பட்டமையால் குப்பிழாய் என்ற சொல் காலப்போக்கில் மருவி குப்பிளான் என்று வந்ததாக வரலாறு ஒன்று உள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட சமூக நிறுவனங்களையும், விவசாய நிலங்களையும் கொண்ட இயற்கையோடு இயைந்த ஆரோக்கியமான வாழ்வையும், நேசமும் பாசமும் மிகுந்த உறவுகளையும் களங்கமில்லாத மனிதர்களையும், நாட்டுக்காகவே தங்களை நேர்ந்து கொண்டு விட்ட கல்வியலாளர்களையும், சமயப்பெரியார்களையும், அறிவியலாளர்களையும், தன்னகத்தே கொண்ட அழகான ஊர் எங்களுடையது.
எங்களின் மக்களை ஒன்றிணைக்கும் சமூக நிறுவனங்களில் முதலாவதாக ஆலயங்கள் விளங்குகின்றன. எங்களது கிராம நிர்வாக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட ஆலயங்கள் இருக்கின்றன. இவற்றுள் முக்கியமானவைகளாக கற்கரை கற்பக விநாயகர் பெருங்கோவில், சொக்கவளவு சோதி விநாயகர் பெருங்கோவில், கன்னிமார் கௌரி அம்பாள் பெருங்கோவில் ஆகியவை விளங்குகின்றன. இக்கோயில்களில் இடைவிடாது ஒலிக்கும் மணியோசையில் காற்றே சங்கீதமயமாகிவிடுகின்றது. இவ் ஆலயங்கள் தான் எங்களது சமூகத்தை அறநெறியின் பால் சமூகப் பற்றுள்ளவர்களாகவும், சமயப்பற்றுள்ளவர்களாகவும், தேசப்பற்றுள்ளவர்களாகவும் வழி நடாத்திச் செல்கின்றன. இவ் ஆலயங்களில் மகோற்சவப் பெருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும் போது உள்ளுரில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும், ஏன் வெளிநாடுகளில் இருந்தும் கூட எம்மவர்கள் இங்கு வந்து உற்சவங்களில் கலந்து கொண்டு தங்கள் குல தெய்வங்களை வழிபடுவார்கள். எம்மக்களின் ஒன்று பட்ட சமூக சங்கமமாக இத்திருவிழாக்கள் தான் திகழ்கின்றன.
அடுத்ததாக விக்னேஸ்வரா சனசமூக நிலையமும், விளையாட்டுக் கழகமும்
முயற்சியினால் மிகச் சிறப்பாகவே செயற்பட்டு வந்தது. போர்ச் சூழலின் காரணமாக தற்போது அந்தப் பகுதிக்குச் செல்ல முடியாததால் இயங்குவதில்லை. அடுத்து கொலனி பகுதியிலுள்ள வளர்மதி சனசமூக நிலையம் இதுவும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.
பௌர்ணமி நாட்களில் எம்கிராமத்தின் அழகே தனி அழகு. சமயப் பெருவிழாக்கள் குறிப்பாக கார்த்திகை விளக்கீடு காலங்களில் இன்னும் அழகாக ஜொலிக்கும். எங்களின் விவசாய நிலங்களில் அனேகமாக நெல்லைத் தவிர அனைத்துப் பயிர்களும் சிறப்பாக வளரும். பெரும்பாலும் விவசாயப் பெருமக்களைக் கொண்ட கிராம ஆகையால் புகையிலை, வெங்காயம், மிளகாய், போஞ்சி, குரக்கன் ஆகிய பயிர்வகைகளைப் பயிரிட்டு இதன் மூலம்
இவர்களது வாழ்வாதாரம் வளம் பெறுகிறது. எம்மக்களின் வீடுகளில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளில் ஏதேனும் ஒன்றாவது எப்பவுமே இருக்கும். அதிலும் வரிக்கை இனப்பலாப்பழமும், கறுத்தக்கொழும்பான் மாம்பழமும் தனி ருசி. வாழைப்பழம் குலைகுலையாக வீடுகளில் எப்பவுமே இருக்கும். பனங்கிளங்கு, பனங்காய்ப் பணியாரம், ஒடியல் என்று பனை மூலம் கிடைக்கும் பலநூறு நன்மைகளும் கால்நடைகள் முக்கியமாக ஆடு,மாடு இவை மூலம் கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளும், இறைச்சியும் எங்கள் மக்களின் பிரதான ஊட்டச்சத்து
மூலங்களாக விளங்குகின்றன. வீடுகளில் நாம் ஆசையுடன் வளர்க்கும் பூக்கும் செடி கொடிகளும் மன நிறைவைத்தரும். ஒழுங்காக கத்தியால்களில் கட்டப்பட்ட கிடுகு வேலிகளையும் நேர்த்தியாகப் போடப்பட்ட சாலைகளையும் பருவ மழையிலும் பாறையாய் நிற்கின்ற வேப்ப மரங்களையும் எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் மக்களையும் கொண்டது எம் கிராமம்.
எம்மக்களின் உண்மையான உழைப்பு, நேர்மை, உடைந்து அழுதுவிடும் மென்மை உடனே போராடும் ஆண்மை, வாழ்வில் உண்மை, வறுமையிலும் செம்மை இவையெல்லாம் சிறிய வயதிலிருந்தே அவர்களை வணங்க வைத்தன. விஞ்ஞானத்தின் நாகரிக வசதிகள் எதையும் பெரிதாகப் பயன்படுத்திக் கொள்ளாத எம்மக்கள் இயல்பிலேயே எளிமையானவர்கள். கூர்ந்த மதியும் சுபாவத்திலேயே மெய்ப்பொருளைக் காணத் துடிப்பவர்களாகவும் விளங்குகின்றனர். தமது தோள்களையும் சொந்தச் சேமிப்பையும் நம்பித்தான் அவர்கள் சீவித்தார்கள். நிலத்தின் வளத்தை விடவும் தமது அயரா உழைப்பின் பலத்தையே அவர்கள் அதிகமதிகம் நம்பினார்கள். இது அவர்களை பிறரில் தங்கியிராத தனது சொந்தச் சேமிப்பிலேயே தங்கியிருக்கின்ற தன்னம்பிக்கை அதிகமுடைய ஒரு தந்திரசாலியாக்கியது. இப்படி வீரம், விவேகம்,விச்சுழி, தந்திரம், சுயநலம், கட்டுப்பெட்டித்தனம், புதுமை நாட்டம் , விடுப்பார்வம், விண்ணானம் இவையெல்லாம் கலந்த ஒரு மனிதனாக்கியது.
நூறு நூற்றாண்டாய் அவர்கள் தேடிய தேட்டமனைத்தையும் ஒரே நாளில் கை விட்டு இடம்பெயர்ந்து போகுமொருவனாய் மாறினார்கள். யுத்தம் அவர்களைச் செதுக்கியது. சுயநலமியாய் சேமிப்பில் வெறியனாய் இருந்தவர்களை வீரனாக்கியது. எம் மக்களை பண்பு மாற்றம் பெற வைத்தன. கந்தபுராணக் கலாச்சாரத்திலிருந்து அவர்களைக் கட்டாயமாக இடம்பெயர வைத்தன. ஒவ்வொரு இடப்பெயர்வும் அவர்களுக்கு மனப்பெயர்வாய் மாறியது. இடம் பெயர்த்து நடப்பட்டத்தில் அவன் வாழ்க்கை வாடிக்கொண்டே வளர்ந்தது. பூமியில் வேறெந்த ஜனங்களிற்கும் நடந்திராத தொடர்ச்சியான சோதனைகள் இழப்புக்கள் என்பதன் பேறாய் உருவாகியவர்கள். கோடை வெயிலைக் குடித்தும் புகையிலைச் செடிகளின் மீது அரும்பிய அதிகாலைப் பனித்துளிகளை உண்டும் வளர்ந்தவர்கள் ஆதலால் அவர்கள் வலியனாயும் சுழியனாயும் அயராத கடும் உழைப்பாளியாயும் உருவானார்கள்.
இரண்டு எதிர்த் துருவங்களுக்கும் போய் வரக்கூடிய எம்மக்களில் பெரும்பாலானோர் தற்போது புலத்திலேயே எம் கிராமத்தின் நினைவுகளுடனேயே வாழ்ந்து வருகிறார்கள்.
நன்றி- kuppilan.net,kuppilanweb.com
No comments:
Post a Comment