சினிமா


ராஜாராணி - விமர்சனம்
என் தலைமுறையில் சூப்பர் டூப்பர் ஹிட்டான 'மெளன ராகம்' படத்தை கொஞ்சம் டிங்கரிங் வேலை செய்து புது திரைக்கதையுடன்.. புத்தம் புதுப் பொலிவுடன்.. தற்போதைய ஹாட்டான ஜோடிகளை நடிக்க வைத்து தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் மெகா இயக்குநர் ஷங்கரின் சீடரான அட்லி..!
rajarani-sep15ஆர்யா-நயன்தாரா இருவருமே காதலில் தோல்வியடைந்தவர்கள். பெற்றவர்களின் வற்புறுத்தலுக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள்.. விருப்பமில்லாமலேயே ஒதுங்கியே வாழ்கிறார்கள்.. வாழ்க்கை அவர்களை எப்படி தம்பதிகளாக இணைக்கிறது என்பதுதான் கதை..!

முதற்பாதியில் நயன்தாரா-ஜெய் காதல் காட்சிகள் நிச்சயம் இப்போதைய ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.. ஜெய்யின் இந்த கேரக்டர் ஸ்கெட்ச்சுக்காக இயக்குநருக்கு ஒரு ஷொட்டு..! செல்போன் கம்பெனியின் கஸ்டமர் கேர் ஸ்டாப்பாக இருக்கும் ஜெய்.. நயன்தாராவிடம் மாட்டிக் கொண்டு அழுகைவரையிலும் போகும் அந்த முதல் காட்சியே அருமை.. மிக இயல்பாக  உண்மையாகவே நடித்திருக்கிறார் ஜெய்..!

தொடர்ந்து ஜெய்யை மடக்க நயன்தாராவும் அவரது தோழிகளும் செய்யும் போன் கால் தொல்லைகளும்.. அதைத் தொடர்ந்த காட்சிகளும் செம கலகலப்பு..! உச்சக்கட்டமாக கால்சென்டர் சிஓஓ மனோபாலாவுக்கு போனை டிரான்ஸ்பர் செய்ய அவருக்கு வரும் போன் காலும்.. அந்த கோரிக்கையும்.. அதற்கு மனோபாலாவின் ரியாக்சனும்.. செம செம..

இப்படியொரு அப்பா யாருக்குக் கிடைப்பார்..? சத்யராஜின் பாசமிகு நடிப்பு.. அப்பாவுக்கும், மகளுக்குமான நட்பு அவர்களையே நேசிக்க வைக்கிறது.. சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து மகளை அழைத்துவரும் சத்யராஜின் பேச்சும், அந்தக் காட்சிகளும் வெகு யதார்த்தமானவை.. இப்படியொரு ஓப்பன் மைண்ட் கோடீஸ்வர அப்பா மகளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைப்பதும், அதன் பின்னான காட்சிகளிலும் சத்யராஜ் தனியே தெரிகிறார்.. லொள்ளுவையெல்லாம் விட்டுவிட்டு இப்படியும் தொடர்ந்து நடிக்கலாமே..?

முதற்பாதியில் இந்தக் கதையெனில் பிற்பாதியில் நஸ்ரியாவின் கதை.. ஏற்கெனவே பல படங்களில் பார்த்ததுதான்  என்றாலும் நஸ்ரியாவின் துள்ளலான நடிப்பால் பார்க்கப் பார்க்கப் பிடிக்கிறது..! ஆர்யாவின் இளிப்பும், பிரதர் என்று அழைத்து மொக்கை போடும் நஸ்ரியாவின் சமாளிப்பும் கலகலப்பு..!

'பூவே பூச்சுடா'வில் நதியாவை பார்த்ததுபோல இருக்கிறது இந்த நஸ்ரியாவை பார்க்கும்போது..! பாடல் காட்சிகளிலும் சில குளோஸப் காட்சிகளிலும் மனதை அள்ளுகிறது அவரது அழகு.. இந்தப் பொண்ணை கோடம்பாக்கம் நிறையவே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்..! தனது காதலைச் சொல்லாமலேயே மறைத்துவிட்டு கடைசியில் ஒத்துக் கொள்ளும் பெண்ணை இதோடு எத்தனையாவது தடவையா பார்த்திருக்கோம்னு எண்ணிப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனா இந்தப் படத்துல சொல்றது நஸ்ரியான்றதால முதல்முறை என்றே பொய் சொல்லிவிடலாம்..

சோகமான முடிவை வலிந்து திணிக்கவில்லையென்றாலும்.. இரண்டுவித சோகத்தை தாங்கியவர்கள்.. அப்படியே இருக்கணுமா என்ன என்று கேட்டு கல்யாணம் செய்து வைக்கிறார்கள்.. பின்பு..? ஏன் எதற்கு என்ற கேள்வியுடனேயே முதல் அரைமணி நேரம் கதை நகர்கிறது.. இந்த அளவுக்கு படித்து, நல்ல வேலையில் இருக்கும் இவர்களே ஹஸ்பெண்ட் அண்ட் வொய்ப் பதவியையே கார்ப்பரேஷன் கவுன்சிலர் போஸ்ட் மாதிரி யூஸ் பண்ணிக்கிட்டு கண்டும் காணாததும்போல இருப்பதெல்லாம் ரொம்பவே லாஜிக் மீறல்.. சினிமா சென்டிமெண்ட்டுக்காக நயனுக்கு உள்ள அந்த வியாதியும்.. அதனால் பரிதாபப்பட்டு ஆர்யா செய்யும் வேலைகளும் அக்மார்க் 1985 காலத்து தமிழ்ச் சினிமா டைப்..!

இவ்வளவு பெரிய கோடீஸ்வரரின் பொண்ணு ஏன் டூவீலரில் போகணும்.. எதுக்கு சாப்ட்வேர் கம்பெனில வேலை பார்க்கணும்..? ஒரு சாதாரண எஸ்..யின் மகனை காதலிப்பதாகச் சொல்வதும், அதனை அவருடைய அப்பா கேள்வியே கேட்காமல் ஏற்றுக் கொண்டு வீடு தேடிச் சென்று இது பற்றி பேசுவதுமாக ரன் பாஸ்ட்டில் கதை நகர்கிளது.. அப்போ கேக்கணும்னு தோணலை.. ஆனா இப்போ தோணுது..!

இடையில் காமெடி உதவிக்கு சந்தானம்.. அதேபோன்ற நீள, நீளமான டயலாக்குகள்தான்.. அவருடைய போர்ஷனில் அவருடைய சித்தப்பாவை வைத்துக் கொண்டும், ஒரு சாதாரண செக்கை வைத்துக் கொண்டும் செய்திருக்கும் கலாட்டாக்களை மட்டுமே ரசிக்க முடிகிறது.. சந்தானத்தின் வாய்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வருவதை இந்தப் படத்திலும் பார்க்க முடிகிறது..!

நயன்ஸ் இழந்த அழகை மீண்டும் பெற்றுவிட்டார் என்றே நினைக்கிறேன். ஐயா படத்தில் தோன்றிய அதே நயன்ஸ் இப்போதுதான் இந்தப் படத்தில்தான் கிடைத்திருக்கிறார்.. அக்காவுக்கு அழுகவும் வரும்போலிருக்கு.. செமத்தியான அழுகை.. நடிக்கவும் வைத்திருக்கிறார்கள்..! அநேகமா நயன்தாரா நடித்ததிலேயே அவர் அதிகமான டயலாக்குகள் பேசியிருப்பது இந்தப் படத்தில்தான் என்று நினைக்கிறேன்..!

.. .. என்றால் இன்றைய இளைஞர்கள் டாஸ்மாக் கடைக்குத்தான் போகிறார்கள் என்பதை இந்தப் படமும் காட்டுகிறது..! இந்தப் பழக்கம் எங்க போய் முடியப் போவுதுன்னு தெரியலை.. ஆனா ரொம்ப ஓவராவே போயிட்டிருக்கு.. வீட்டுல பொண்ணுகளே அப்பனுக்கும், புருஷனுக்கும் பீர் வாங்கிக் கொடுத்து குடிக்கச் சொல்வது போலவும்.. இதெல்லாம் இந்தக் காலத்துல சகஜமப்பா என்பதும் இயக்குநரின் முடிவாக இருக்கலாம். ஆனால் இது வரும்காலத்திய சினிமா ரசிகர்களின் மனதில் ஒரு தவறை சரி என்று சொல்லவும் வைக்கும்.. செய்யவும் வைக்கும்..!

இசை ஜி.வி.பிரகாஷ்குமாராம்.. நஸ்ரியா, ஆர்யா பாடும் பாடல் மட்டுமே ஓகே... மற்றவைகளை திரும்பவும் கேட்டாலும் எந்த படம்ன்னு யோசிக்கணும்.. அந்த அளவுக்குத்தான் இருக்கு..! ஆர்யாவின் சோக்க் கதையைக் கேட்டவுடன் எப்படியும் மனசு மாறி ஒண்ணு சேரத்தான் போறாங்க என்பது ரசிகர்களுக்கே தெரிந்த்துதான்.. பின்பு எதுக்கு மேலும் 15 நிமிடங்களுக்கு கதையை வளர்த்திருக்கணும்..?
கிளைமாக்ஸில் ஜெய் திரும்பி வருவதை கட் செய்திருந்தால்கூட நன்றாகத்தான் இருக்கும்.. அந்தக் கிளைமாக்ஸே இல்லாமல் இருவருமாகவே யோசித்து இணைவது போல திரைக்கதை அமைத்திருக்கலாம்.. இட்ஸ் ஓகே.. இருந்தவரையிலும்.. எடுத்தவரையிலும் ஒரு புதிய இயக்குநராக.. புதிய வெற்றி இயக்குநராக தனது பெயரை முதல் படத்திலேயே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் அட்லி.. அவருக்கு எனது வாழ்த்துகளும், நன்றிகளும்..!


No comments:

Post a Comment