"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு": ஒரு விளக்கம்

  April 13 தீபத்தில் ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்துகொண்டே இருக்க வேண்டும் என்றும், முட்டாளாகத் திரிய வேண்டும் என்று நம் முன்னோர்கள்  சொன்னார்கள் என குறிப்பிட்டு ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளதை கவனித்தேன்.அது தொடர்பாக  நான் ஆராய்ந்த போது எனக்கு மேலும் கிடைத்த தகவலை/விளக்கத்தை  கிழே தருகிறேன்.

போர்ச்சூழல் நிரம்பிய பழைய காலச் சங்க சமூகத்தில்,தொல்காப்பியர், களவியலில் ,அதாவது திருமணத்துக்கு முன்னுள்ள காதல் கட்டத்தில்,

96) "அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப." என்கிறார் .


இது களவியலுக்கு மட்டும்  தான்! ஒரு காதல் சுவைக்கு என்றும் சொல்லலாம்.

அச்சம் என்றால் பயம்.'மடம் என்றால் முட்டால்,நாணம் என்றால் வெட்கம்,பயிர்ப்பு என்றால் அசுத்தம் - அருவருப்பு,அல்லது கூச்சம்.

இப்ப ஒரு "காதல் களவியலில்" காட்சி ஒன்றை பார்ப்போம்.தலைவன் தலைவி [அல்லது கணவன், மனைவி] இரண்டு பேர் தனிமையில்  இருக்கிறார்கள் என வைப்போம்.

"ஐயோ, இப்பவா! யாராயினும் வருங்கள் ... வேண்டாம்". அச்சம்.இது ஒரு  பொய் அச்சம். இது ஒரு வகை.அடுத்தது சமையலறையில் கரப்பான் பூச்சியைப் பார்த்தால் விளக்குமாறால் ஒரு  போடு போடும் அதே தலைவி,இப்ப காதல் களவியலில் அதே கரப்பான் பூச்சியைப் பார்த்ததும் "ஐயோ! கரப்பான்".. என அலறுவது --பயப்படுவது--ஒரு மழலை மாதிரி பிதற்றி கண்ணைப் பொத்திக்கொள்வது மற்றொரு வகை. 

இப்படி ஒரு காதல் களவியல் சம்பவத்தில்: "சரி போதும்-- அலட்ட வேண்டாம்-- இனி காணும்-- எனக்கும் எல்லாம் தெரியும்" என்று கூற  மாட்டார்கள். தெரிந்திருந்தாலும் தெரியாதது  போல பண்ணும் பாவனை. அது தான் இந்த பொய்  மடம்.

இன்னும் கொஞ்சம் போக,"சீ போங்கோ .. கொஞ்சமாவது வெட்கம் இருக்கா பாரு..". இது பொய் நாணம்."எனக்கு இது பிடித்துத்தான் இருக்கிறது" என்று சொல்லும் ஒரு நாணம்.

இந்த மூன்றும் பொதுவாக காதலுக்கு சுவை சேர்க்கின்றன.தன் தலைவன்  அல்லாத வேறு ஒரு  ஆடவன்/அந்நியன் கெட்ட  எண்ணத்துடன் தொடும்போது உண்டாகும் இயல்பான அருவருப்புணர்ச்சி பயிர்ப்பு  ஆகும்.இந்த உணர்ச்சி பொதுவானது அதாவது ஆணுக்கும் உண்டு என கொள்ளலாம். அதாவது   இவையை கலவியல் கவர்ச்சி என்று கூட சொல்லலாம்.அவ்வளவுதான்.   

இது தான் தொல்காப்பியம் களவியலில் சொல்வது!இது பொதுவாக சொல்லப்படவில்லை என்பதையும் காண்க. தமிழ் சொல்வது இதைத்தான் !இந்த நாலு குணமும் பெண்ணுக்கு வேண்டும் என்றால் எப்போது வேண்டும்? இதை சரியாக புரிய வேண்டாமோ?இது சொல்லப்பட்ட "இடம் பொருள் காலம்" அறிய வேண்டும் .அதை விட்டு 
பொருளைச் சிதைத்து, மாற்றி என்னென்னவோ பொருளெல்லாம் சொல்லி வைத்தனர். 'மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்' என்று ஏன் பாரதி கூறினான்? 

பண்டைக்காலத் தமிழரின் அக வாழ்க்கையின் அம்சங்களைத், தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின் ஏக்கத்தினூடாகக் கார்காலப் பின்னணியில் எடுத்துக்கூறுகின்ற நூல் கார் நாற்பது.அதில் ஒரு பாடல் இப்படி சொல்கிறது.

"கடல் நீர் முகந்த கமம் சூல் எழிலிஇடம் என ஆங்கே குறி செய்தேம் பேதைமடமொழி எவ்வம் கெட"குட மலை ஆகத்துக் கொள் அப்பு இறைக்கும்

பல நாள்களுக்குமுன்னால் நான் ஊரில் இருந்து கிளம்பிய நேரம், மடப்பத்தை உடைய வார்த்தைகளைப் பேசுகிற என் காதலி என்னைப் பிரிவதை எண்ணி மிகவும் வருந்தினாள். அவளுடைய வருத்தத்தைப் போக்குவதற்காக, ‘மேற்கு மலைமீது மழை பெய்யும்போது நான் திரும்பிவிடுவேன்’ என்று வாக்குறுதி சொல்லி வந்தேன்.இப்போது, அந்த நேரம் வந்துவிட்டது. நாம் சீக்கிரமாக ஊர் திரும்பவேண்டும். தேரை வேகமாக ஓட்டு!என்கிறான்.அது என்ன "மடமொழி"?"மடம்"தான் இங்கேயும் வருகிறது.ஒரு காதல் சுவை!

இதே மாதிரி அந்த சங்க காலத்தில் குறுந்தொகை 135:"வினையே ஆடவர்க் குயிரே" என்று கூறுகிறது.அதாவது ஆண்மக்களுக்குத் தொழில்தான் உயிர் என்பது இதன் பொருள். 

அதாவது "அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு"  என்பது  காதலின் போது மட்டுமே! வாழ்க்கை முழுக்க  இல்லை என்பதை புரிய வேண்டும். 

இதே சங்க காலத்தில் காதல் களவியல் அற்ற சில சம்பவத்தை பார்ப்போம்.

ஒரு நாள், காவற் பெண்டு என்பவரின் இல்லத்திற்கு வந்த ஒருவர் ,அவர் மகன் எங்கு உளன் என்று கேட்டார்.அதற்கு,காவற் பெண்டு "இதோ என் வயிற்றைப் பார்,என தன்  வயிற்றைக் காட்டி,அவனைப் பெற்ற வயிறு இது.புலி இருந்து சென்ற குகை இது".அவள் அச்சம் கொள்ளவில்லை?முட்டாளாக பேசவில்லை?நாணம் கூட பட வில்லை?வீரமாக முழங்கினாள்!

இன்னும் ஒருத்தி போர்ப் பறை கேட்டுத் தன்மகனை-ஒரே மகனை இளம் பிள்ளையை அழைத்துக் கையில் வேலைக் கொடுத்துக் களத்திற்கு அனுப்பினாள் என அவளின் மாண்பினைப் படம்பிடித்துக் காட்டுகிறது. “புறங்காட்டினான் மகன் என்பது உண்மையானால் அவனுக்குப் பாலூட்டிய மார்பினை அறுப்பேன்” எனச் சூளுரைத்தாள் மற்றும் ஒருத்தி.இங்கு ஒரு வீரத் தாயை காண்கிறோம்.ஆகவே எங்கு சொல்லப்பட்டது ,எந்த சூழலில் சொல்லப்பட்டது,ஏன் சொல்லப்பட்டது என்பதை அறிந்து பொருள் கொள்வது மிகவும் சிறந்தது.

குறிப்பு:"வீரத்தை சேர்ப்பது தாய் முலைப் பாலடா" என்றான் பாரதி "கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை" என்றான்  கண்ணதாசன்.அப்படிப்பட்ட  வீரத் தாயைப் பற்றியும்  அவள் பால் ஊட்டி வளர்த்த புறநானுற்று  மா வீரர்களைப் பற்றியும்  5 பகுதிகளாக ஒரு கட்டுரை  விரைவில் சமர்ப்பிக்க உள்ளேன் 
[-கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

No comments:

Post a Comment