வியாபாரிமூலை:-எந்த ஊர் போனாலும்….….. நம்ம ஊர் போலாகுமா!!!



இலங்கைத்தீவின் வடமுனையாக விளங்கும் பருத்தித்துறையிலிருந்து மேற்காக காங்கேசன்துறை நோக்கி நீளும் கடற்கரையோர வீதியில் ஒரு கிலோமீற்றர் தூரம் சென்று மாலிசந்தி நோக்கி கிளைவிடும் தார்வீதியில் திரும்ப வருவது வியாபாரிமூலையெனும் அமைதியான கிராமம்.

கடற்கரையிலிருந்து வீரபத்திரர் கோவில் வளைவு வரை வீதியின் இருமருங்கும் கிளைவிடும் சிறு சிறு ஒழுங்கைகளும் வீதிகளும், அங்கு வசிக்கும் அனைவருக்குமிடையிலான உறவுமுறைகளும், வியாபாரிமூலையெனும் கிராமத்தினை ஒருங்கிணைக்கும். ஆலய மணியோசைகள் துயிலெழுப்பும், உப்புக்காற்று இதமாய் வீசும்.

கிராமத்தின் ஒவ்வொரு குறிச்சியும் (சிறு பகுதிகளும்) தனித்துவமான பெயர்களைக்கொண்டது. வெள்ளையற்றணி, சிப்பிமணலடி, பெயர்ந்த ஆலடி, விராவளை, சின்னக்கிளானை, பெரியகிளானை, வாரியார்வளவு, கம்பளியப்பான், பலாப்பத்தை என்று பல்வேறுபட்ட காரணப்பெயர்களுடன் நீளும் குறிச்சிகளின் பட்டியல். அநேகமாக குடும்பப்பெயர்களுடன் குறிச்சிகளின் பெயர்களும் சேர்ந்தே பலரையும் இனங்காண உதவும்.

சில பத்தாண்டுகளிற்கு முன்னர் ஒரே பெயரை பலருக்கும் வைத்ததால் ஏற்பட்ட குழப்பங்கள் இவ்வாறே தீர்க்கப்பட்டன. இதேபோல ஒருவருக்கு இரண்டு (அதற்குமேலும் கூட) பெயர்களுமிருக்கும். தந்தைவழி உறவுகளை திருப்திப்படுத்த ஒரு பெயரும் தாய்வழி உறவுகளை திருப்திப்படுத்த ஒரு பெயரும் என்று பெயர்களை வைத்து எல்லாரையும் திருப்திப்படுத்தினார்கள். அதனால் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களிற்காக சத்தியக்கடதாசிகளிற்காக பலரும் அலைந்தது வேறு கதை.

குறிச்சிப்பெயர்களை விட அடைமொழிகளும், பட்டப்பெயர்களும் கூட பலரை குறிப்பிட உதவின. ஜப்பான் (குறுகிய காலத்தில் வியாபாரத்தில் முன்னேறியவர்), சக்கடத்தார், மனேச்சர், சவுடால், ஹொல்டோன் (hold-on), முயல், அதாவது (எப்பொழுதும் அதாவதுஎன்று கதைக்கத்தொடங்கும்) போன்ற அடைமொழிகளும் கருமுனி, குறுமுனி, சருகுமுனி போன்ற பட்டப்பெயர்களும் பிரபலமாக இருந்தன.

பதினைந்து அடி உயரமான கோட்டைச்சுவர் போன்ற கற்சுவர்களுடனும் மிகப்பெரிய வாயிற்கதவுகளுடனும் பளிங்குக்கல் பதித்த தரைகளுடனும் எஞ்சியிருக்கும் சில சுண்ணாம்புக் கட்டடங்கள் கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்த கிராமத்தின் பணக்கார குடும்பங்களின் கதைகள் சொல்லும். இலங்கைத்தீவின் வடமுனையிலிருந்து தென்முனைவரை வியாபாரத்தில் முத்திரை பதித்த அந்தக் குடும்பங்கள் தேடிய செல்வத்தின் அளவு அந்த வீடுகளில் காணப்படும் தரையுடன் சேர்த்துக்கட்டப்பட்ட பெரிய இரும்புப்பெட்டகங்களில் தெரியும். இப்படியாக வியாபரிகளின் கையோங்கியிருந்த கிராமத்திற்கு வியாபரிமூலையென்ற பெயர் வைத்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

இன்றைக்கு 50 ஆண்டுகளிற்கு முன்னர், பெற்றோர்கள் தங்கள் ஆண்பிள்ளைகளை சிறுவயதில் வியாபாரம் செய்யும் உறவினர்களுடன் அனுப்பிவிடுவார்கள். அவர்கள் வியாபார நுணுக்கங்கள் பழகும்வரை நீண்டகாலம் ஊதியமில்லாது வேலைசெய்வார்கள். பின்னர் அந்த முதலாளி (உறவினர்) மற்றும் பெற்றோரின் உதவியுடன் சொந்தமாக வியாபாரம் செய்யத் தொடங்கிவிடுவார்கள். இப்படி அநுபவத்துடன் வியாபாரம் தொடங்குவதால் அநேகம் பேர் தங்கள் தொழிலில் நட்டமடைவதில்லை. இன்றுகூட சில குடும்பங்களில் இந்தவழக்கம் தொடர்கிறது.

வியாபாரம் செய்பவர்கள் தவிர்ந்த ஏனையோர் விவசாயம் செய்பவர்களாக இருந்தார்கள். ஊரின் வடக்காக கடற்கரையோரமாக இருந்த வளங்குறைந்த தோட்டநிலங்களில் உழைப்பை உரமாகவும் வியர்வையை நீராகவும் பாய்ச்சி குரக்கன், தினை, மரவள்ளி, காய்கறிகள் என்று பயிர்செய்தார்கள். துலா ஓடி நீரிறைத்த அந்த நாட்களின் எச்சங்களாக ஆடுகால்களிற்கு நடப்பட்ட சில பூவரச மரங்கள் இன்றும் அந்த தோட்டக்கிணறுகளிற்கருகில் தனித்து நிற்கின்றன. விஞ்ஞானத்தைப் பாடமாகப் படிக்காத அந்தக்காலத்திலும் மழைநீரை சேமிக்கக் குளங்கள் இருந்தன. கடலிற்கருகில் இருப்பதால் கடல்நீர் உட்புகுவதைத்தடுக்க (நிலத்தடி நன்னீருடன் கலப்பதைத் தடுக்க) ஒற்றுமையாக சரியான நேர இடைவெளியில் நீரிறைத்தார்கள். மழைபெய்த அளவிற்கேற்ப பயிர்நட்டார்கள்.

வீதிகளில் ஆவுரோஞ்சிக்கற்களும் (ஆடு, மாடுகள் தங்கள் உடம்புகளை உரசிக்கொள்ள), சுமைதாங்கிகற்களும் (தலையில் சுமையுடன் செல்பவர்கள் அவற்றை இறக்கிவைத்து இளைப்பாற), குடிநீர்ப்பானைகளும் இருந்தன.
அறிவுப்பசிக்கு விருந்திடும் வியாபாரிமூலை கலைமணி சனசமூக நிலையம் ஊரின் மத்தியில் பெரும் பணிபுரிகிறது.

ஆன்மிகம் வளர்க்க ஊரின் நான்கு திசைகளிலும் கோயில்களும் அவற்றுடன் ஒன்றிவாழும் பண்புமிருந்தன. கோயில்களில் சைவக்குருக்கள் பூசைகள் செய்தனர். வேற்றூர்களில் வியாபாரம் செய்பவர்கள் கோவில் திருவிழாக்காலங்களில் ஊர்திரும்புவர். இயற்கை கற்பூரம் விளைந்த சித்தி விநாயகர் ஆலயமும், விரபத்திரர் ஆலயமும், சித்திராபௌர்ணமியில் இராப்பொங்கல் நடக்கும் நாச்சிமார் கோவிலும், அருளம்பல சுவாமிகளின் (மகாகவி பாரதியாரின் குரு) சமாதியும், காலனித்துவ ஆட்சியில் கல்விக்காக மதம்மாறுவதைத் தடுக்க ஆரம்பித்த சைவப்பிரகாச வித்தியாசாலையும் ஊர்மக்களின் ஆன்மீக ஈடுபாட்டிற்கு சான்றுகளாயுள்ளன.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
 "கோவிந்த சாமிபுகழ் சிறிது சொன்னேன்;
குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான்,.....
என்று ஆரம்பித்துப் பாடிய கவியொறில்  அவர் கூறும் யாழ்ப்பாணத்தான், வியாபாரிமூலையைச் சேர்ந்த மோனம் அருளம்பலம் சித்தர் என்பது எம் மண்ணிற்கு பெருமை சேர்க்கிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த பாம்புப் பரியாரியாரும் (விசக்கடிக்கு சிறந்த மருத்துவம் செய்ததால் ஏற்பட்ட பெயர்), எலும்பு முறிவுற்றவர்களை ஒட்டகப்புலத்திற்கு ஏற்றிச்செல்ல மாட்டுவண்டிக்காரரும் இருந்தார்கள்.

இப்படி சுயநிறைவுடனும் வளமாகவும் மக்கள் வாழ்ந்த கிராமம் வியாபாரிமூலை. இன்றும்கூட வியாபாரிமூலையான் என்று பெருமையாக என்று எங்களூரார் தங்களைச் சொல்லிக்கொள்வார்கள்.

–  வியாபாரி

0 comments:

Post a Comment