[பகுதி:01] இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்:-

"முகவுரை"

 

"வந்தது தெரியும் போவது எங்கே

வாசல் நமக்கே தெரியாது

வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் - இந்த

மண்ணில் நமக்கே இடமேது?

வாழ்க்கை என்பது வியாபாரம் - வரும்

ஜனனம் என்பது வரவாகும் - அதில்

மரணம் என்பது செலவாகும்

போனால் போகட்டும் போடா"

[பாலும் பழமும்/கவிஞர் கண்ணதாசன்]

 


மரணம் என்றால் துக்கம் தரும் ஒரு நிகழ்வு. மரணம் அடைந்த ஒருவர் திரும்பி வராத இடம் ஒன்றிற்கு செல்கிறார். ஒருவரின் மரணம் அவருடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மிகுந்த துக்கத்தை அளிக்கின்றது. ஒருவரின் மரணம் அவரைச் சார்ந்து இருப்பவர்கள் அனைவருக்கும் சொல்ல முடியாத மனவேதனையை அளிக்கிறது. ஒருவன் செல்வந்தனாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அழகாக இருந்தாலும் சரி,அழகற்றவனாக இருந்தாலும் சரி - அனைவரும் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும். இது இயற்கையின் நியதி. ஆக மரணம் என்பது யாருக்கும் பிடிக்காத ஒரு விடயம் [சம்பவம்]. ஆனால் யாரும் அதிலிருந்து எப்பவும் தப்பிக்கவே முடியாது.

 

உணர்வு பூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் நாம் ஒரு நாள் இறப்போம் என எமக்கு தெரிந்திருந்தாலும், பொதுவாக நாம் எமது மரணத்தைப் பற்றி சிந்திப்பதில் எந்த ஆர்வமற்றும் மனமின்றியும், எதோ நாம் இந்த உலகில் சதாகாலமும் வாழ்வோம் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அதனால் ஆன்மீக விழுமியங்களை விட பொருள்  உடைமையிலும், புகழிலும், மக்கள் செல்வாக்கிலும் உடல் ஆறுதலை தரும் புலனுகர்வு சார்ந்த மகிழ்ச்சியிலும் நாம்  திளைக்க - அதற்கு தலையாய முக்கியம் கொடுத்து - எமது நேரத்தையும் சக்தியையும் அதை அடைவதற்காக  செலவழிக்கிறோம்.

 

எனக்கு, எனது இருப்புக்கு என்ன நடக்கும் என்ற பயமும் அல்லது இடர்கள் துன்பங்கள் தாண்டி தப்பி பிழைத்து தொடர்ந்து வாழ்வோமா என்ற பயமும் தான் இயற்கையை பார்த்து மனிதன் பயந்ததற்கும், கடவுள் என்ற ஒன்று தோன்றியதற்கும் காரணமாய் இருக்க முடியும். மரணத்தைப்பற்றி ஆழமாக அலசும் பொழுது ஒரு முக்கிய கேள்வி முதலில் எமக்கு பிறக்கிறது. அதாவது "ஏன் உயிர்கள் முதற்கண் மரணமடைகின்றன?"  எமது அனுபவத்திலும் எமது அறிவியலிலும் இருந்தும் நாம் தெரிந்து கொண்டது, என்னவென்றால், பல இறப்புக்கள் உண்மையில்  தடுக்கக் கூடியவை. ஆனால் அப்படி தடுப்பதற்கு, முதலில் மக்கள் ஏன் இறந்தார்கள் / இறக்கிறார்கள் என்பதற்கான நடைமுறைகளை அல்லது காரணங்களை நாங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். எனவே நோய், அடி முதலானவற்றால் உண்டாகும் காயம், மனித உடலின் வளர்ச்சி மற்றும் முதுமை போன்றவற்றினை நாம் விரிவாக விளங்கிக் கொள்ளவேண்டும். ஜெபம், பிரார்த்தனைகள் யார் செய்தாலும் மரணத்தைத் தடுக்க முடியாது. என்றாலும் இறுதியில், அனைவரும் இறந்து விடுகிறார்கள் என்பதே உண்மை !

 

பைபிள் இதற்கு சுருக்கமாக ஒரு விடையை தருகிறது. அதாவது, கடவுளின் "நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம் அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்" [ஆதியாகமம் 2:17] என்று கட்டளையை,  நம்முடைய முன்னோர்களும் முதல் மனிதர்களுமான ஆதாமும் ஏவாளும். தெரிந்தும் கீழ்படியாமற் போனபடியால் அவர்கள் கடவுளிடம் இருந்து பிரிக்கப்பட்டார்கள். அதுமாத்திரமல்ல, ஆதாமும் ஏவாளும் தம் பாவ இயல்பை நமக்கும் தந்துவிட்டார்கள். இப்படியாக, ஓரே மனிதனால் பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே வந்தது போல, எல்லா மனிதர்களும் பாவம் செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது போலவும் இதுவுமாயிற்று. என்று ரோமர் 5:12 குறிப்பிடுகிறது. குறிப்பாக “எல்லாருக்கும்” என்ற வார்த்தை மூலம்  நாம் எல்லோரும் பாவிகள் நாம் அனைவரும் ஓருநாள் மரிக்கவேண்டும் என்று சொல்லாமல் சொல்லுகிறது. மேலும் "நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்ட படியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்" என ஆதியாகமம் 3:19 கூறுவதையும் கவனத்தில் கொள்க. ஒரு வாதத்துக்கு, நாம் ஆதாம் மற்றும் ஏவாளின் சந்ததியினராக இருப்பதால், அவர்களின் தலைவிதியில் நாங்கள் பங்கு கொள்ளலாம். அதில் பிரச்சனை இல்லை. ஆனால், ஏன் விலங்குகள், பறவைகள் இறக்க வேண்டும்? அவைகளின் சந்ததியினர் அறிவின் மரத்திலிருந்து சாப்பிட்டார்களா ? என்னை இது குழப்புகிறது ? உங்களுக்கு எப்படி ?

 

உண்மையாகவே, மரணம் ஒரு பெரிய மர்மமாகவே உள்ளது. காலகாலமாக  ஒவ்வொரு முக்கிய சமயங்களும் தத்துவங்களும், ஆன்மீக கருத்துகளும், இந்த மர்மத்தை கண்டு பிடிக்க முயன்றன. ஒவ்வொரு ஆணினதும் பெண்ணினதும் வாழ்வை தொட்டு, முழு மானிட சாதியையும் "தவிர்க்கமுடியாத  மாள்வு" என்ற ஒன்றின் கீழ் இணைத்த ஒன்று இதுவாகும். இங்கு  பணக்காரனோ ஏழையோ, ஒரே மாதிரியான முடிவை மரணத்தில் அடைகிறார்கள். கருப்பனோ வெள்ளையனோ, இருவரும் எந்த வேறு பாடும் இன்றி பிணக்குழிக்குள் போகிறார்கள். பெருஞ் செல்வாக்கும் சக்திமிக்கவர்களும், எளிய அடக்க முள்ளவர்களும் இந்த உலகத்தை விட்டே கடைசியில் போகிறார்கள். 

 

"உறங்குவது போலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு"

[குறள்: 339]

 

இந்த நிலையற்ற வாழ்க்கையில், உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு [சாக்காடு-இறப்பு]. இந்த கருத்தை வலியுறுத்தும் பாடல்களை நாலடியார், மணிமேகலை, சீவக சிந்தாமணி போன்றவற்றிலும் நாம் பார்க்கலாம்.

 

"இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்

பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?

விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன்

அழித்துப் பிறக்கும் பிறப்பு."

[நாலடியார் 302]

 

நொடிப் பொழுதில் மாய்தற்குரிய இப்பிறவியின் பொருட்டு மானக் குறைவான இரத்தல் செயலைச் செய்து உயிர் பிழைத்தல் ஆகாது என்கிறது. இங்கும் “விழித்திமைக்கும் மாத்திரையன்றோ ஒருவன் அழித்துப் பிறக்கும் பிறப்பு” என்கிறது நாலடியார்.

 

"பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்

உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின்

நல்லறஞ் செய்தோர் நல்லுல கடைதலும்

அல்லறஞ் செய்தோர் அருநர கடைதலும்

உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்".

[ஆதிரை பிச்சை இட்ட காதை: 84-90 / மணிமேகலை]

 

இளமையும் உடம்பும் நிலையானவை அல்ல; செல்வமும் நிலையானது அல்ல; அறமே நிலைத்தது, என்றும் துணையாக இருப்பது என்றும் கூறுகிறது. இங்கும் “பிறந்தவர் சாதலும், இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது” என்கிறது மணிமேகலை. மேலும் சுந்தரர் தேவாரம், “உறங்கி விழித்தாலொக்கும் இப்பிறவி” என்கிறது.

 

உண்மையில் இறப்பு என்றால் என்ன?

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

 

பகுதி: 02 "மரணம்" என்றால் உண்மையில் என்ன?" தொடரும்

No comments:

Post a Comment