சங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]



உலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அமராவதி, தேவதாஸ்-பார்வதி, 
உதயணன்—வாசவதத்தை, 
போன்றோர்களுக்கு சமமான காதல் கதை ஒன்று எமது இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட்டுள்ளது.இந்த காதலர்கள் ஆதிமந்தி-ஆட்டநத்தி என்ற ஆடுகளமகள்-ஆடுகளமகன் ஆகும்.இது ஏனோ பலருக்கு இன்னும் தெரியாமல் இருப்பது ஒரு கேள்விக்குறியே?இந்தச் சோகக் காதல் கதையை குறுந்தொகை 31,அகநானுறு 45,76,135,222,236,376,396 மற்றும் சிலப்பதிகாரம் போன்றவற்றில் பாடியிருக்கிறார்கள்.
இது ஆட்டக்காரி[ஆடுகளமகள்]"ஆதிமந்தி"யின் காதல் கதை..இவளை சோழன் கரிகாலனின் (கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.) மகள் எனவும், அது போல ஆட்டனத்தியை (ஆட்டன்+அத்தி) சேரநாட்டரசனாகவும் பலர் கருதுகின்றனர்.எது எப்படியாயினும் இவர்களைப் பற்றி பரணர்,வெண்வீதியார்[வெள்ளி வீதியார்]போன்ற புலவர்கள் போற்றியுள்ளதுடன் சிலப்பதிகாரமும் இந்நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்கிறது.இனி இந்த சங்க கால காதலர்களின்,கண்ணகியின் முன்னோடியாக கருதப்படும் ஆதிமந்தியின்,காதல் கதையை மேல் கூறப்பட்ட சங்க பாடல்கள் மூலம் பார்ப்போம்.
மலை நேரம் காவேரி ஆறு இன்று ஏனோ மெதுவாக ஓடுகிறது.தனது மனதை யாரிடமோ பறி கொடுத்தது போல தட்டுத் தடுமாறி ஓடிக்கொண்டு இருக்கிறது .சூரியன் தனது கதிர்களை மடக்கிக் கொண்டு காவேரி ஆற்றில் குளிக்க போய் கொண்டு இருக்கிறான் பறவைகள் மரக் கிளைகளை நோக்கி ஆரவாரமாக பறந்து கொண்டு இருக்கிறது.வண்டுகள் மலர்களை சுற்றி ரிங்காரம் இடுகின்றன.காதலர்களை வரவேற்பது போல சந்திரன் பிரகாசமாக ஒளி பரப்பியபடி மேகத்தினுடாக எட்டிப் பார்க்கின்றான்.
ஒவ்வொரு நாளும் இந்த நேரம் தனது தோழியுடன் காவேரி ஆற்றங்கரையில் உலா வரும் ஆதிமந்தியை இன்று காணவில்லை.தோழி தான் முந்தி வந்து விட்டேனோ என்று ஒரு தரம் தடு மாறினாள்.வாடைக்காற்று கொஞ்சம் குளிராக இன்று வீசுகின்றது.தன்னை மேல் அங்கியால் இறுக்கமாக போர்த்துக் கொண்டு அங்கும் இங்கும் தேடினாள்.அதோ..அந்த கற்பாறைகளுக்கிடையில் காவேரியை வெறுத்து பார்த்துக் கொண்டு ஆதிமந்தி இருப்பதை தோழி கண்டாள்.அந்த காவேரியே அவள் கண்களில் இருந்து ஓடுவது போல அவள் அங்கு இருந்தாள்.தோழிக்கு ஒன்றுமே புரியவில்லை.மெல்ல அவளின்  பட்டு போன்ற  நீண்ட கூந்தலை தடவிய படி,ஆதிமந்தியை என்ன நடந்தது என்று கேட்டாள்.
ஓ..என்ன வென்று சொல்வேன் என தடு மாறினவள்,கொஞ்ச அமைதியின் பின், தோழி தனக்கு நல்ல பதில் ஒன்று தருவாள் என்ற ஒரு அவாவில்,தோழியின் முகத்தை பார்த்த படி சொல்ல தொடங்கினாள்.

"மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டும் காணேன் மாண்தக் கோனை
யானும் ஓர் ஆடுகள மகளே என் கைக்
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த
பீடு கெழு குரிசலும் ஓர் ஆடுகள மகனே."
[குறுந்தொகை 31]

தம் மாண்தக்கோனை(தனக்கேற்றவனாக கருதிய தலைவனை),என் காதலனை,அந்த நீச்சல்-நடன விளையாட்டு வீரன் ஆட்டன் ஆத்தி என்பவனை, பலம் உடைய போர்வீரர்கள்[மள்ளர்]விழாக் கொண்டாடும் இடங்களிலும்,மள்ளர் மகளிர் தம்முள் பொழுது போக்காக தழுவி வட்டமாக நின்று கை கோத்துக்கொண்டு ஆடுகின்ற துணங்கை நடனம் ஆடும் இடங்களிலும்  காணமுடியவில்லை.நானும்  ஓர் ஆடுகள மகள்[ஆட்டக்காரி].அந்த ஆட்டக்கார[ஆடுகளக்]கூட்டத்துக்குக் தலைவனான(குரிசில்) அவனை நினைத்து என் சங்கு  கைவளையல் நழுவுகிறது தோழி என  நாணம் கடந்து  வருந்தி முறையிட்டாள்.
தோழிக்கு சிரிப்பு தான் வந்தது.இதுக்கு ஏன் இந்த கவலை நாளை ஆட்டநத்தி எமது அரசன் முன்னிலையில் ஆடப்போகிறான்.நீயும் நானும் முன் வரிசையில் இருந்து பார்க்கப்போகிறோம்.பிறகு என்ன வேண்டும்?இன்று அவன் தனது சக ஆட்டக்காரி  காவேரியுடன் ஒத்திகை பார்க்கிறானோ என்னவோ என  சமாதானப் படுத்தினாள்.
சோழ நாட்டு மக்களுக்கு  தாய், தெய்வம் எல்லாம் இந்த காவிரிதான்.அவள் கருணையால் தான் சோழ நாட்டு ஆற்றுக் கரையில் முப்போகம் முழுசாக விளைகிறது. ஆமாம் புனலாய்ப்[வெள்ளமாய்] பெருகி, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நெஞ்சில் பால் வார்ப்பவள் அவள். அந்த தெய்வத்தின் தரிசனம் காண கரையெல்லாம்  காவேரி அன்னைக்குப் பொங்கலிட்டு,நீரில்  அகல்விளக்கு ஏற்றி விட்டு,ஆட்டனத்தி-காவேரியின்  நீச்சல் நடன விழா காண மக்கள் கூட்டம்  மகிழ்ச்சியில் மிதந்து  கொண்டிருந்தது.
ஆதிமந்தியும் தன காதலனின் நடனம்  காண சீவி சிங்காரித்து  பொன்மகளென,தன் தோழியுடன் புறப்பட்டு வந்திருந்தாள்.இவளும் ஆடற்கலையில் தேர்ந்த வட்ட விழி அழகிதானே.நொப்பும் நுரையுமாய் துள்ளிக்குதித்து வரும் காவேரியை பார்த்து அவள் நெஞ்சமெலாம் கூத்தாடுகிறது.அவனுடன் தான் ஆடுவது போல ஒரு கற்பனையில் மிதந்தாள்.தன்னவன் நெஞ்சில் தலைசாய்த்து..காதலன் கைபிடித்து.. நீரில் நனைந்து எழுந்து தலை கோதி..அப்பப்பா அத்தனையையும் அனுபவித்து விடவேண்டுமென்று அவள் ஆசை...நீண்டு கொண்டே போனது .
தழைத்த கதிர்களையுடைய வயல்களை கொண்ட கழார் என்னும் ஊரிலுள்ள காவிரியாற்றுத் நீர்த்துறையில்,ஆட்டனத்தி என்பவன்,காவேரி என்ற ஆட்டக்காரியுடன்[நீச்சல் மகளுடன்] சேர்ந்து இன்று நீச்சல் நடனம் ஆடப்போகிறான்.இந்த நீச்சல் நடனம் அதுவும் ஆரவாரம் பொருந்திய சுற்றத்தினருடன் சோழன்  கரிகால்வளவன் கண்ணுற்று மகிழ அவன்  முன்னிலையில் நடக்கப்போகிறது.
அவ்வளவு பெருமை பொருந்திய அந்த நடனத்தை எல்லோரும் எதிர் பார்த்து இருக்க,சோழன் கரிகாலனை வணங்கி விட்டு அந்த ஆட்டனத்தி தனது சக ஆட்டக்காரி காவேரியுடன் நீரில் இறங்கினான் எங்கும் ஒரே அமைதி எல்லோர் கண்களும் அந்த ஆட்ட காரர்களிடமே!


"ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை,
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண,
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள,
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று,
இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப,
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து,
காவிரி கொண்டு ஒளித்தாங்கு" (அகநானுறு  376)

நான்கு திசையும் இன்னிசை முழங்கிற்று.கரிய கச்சினைக்[அரைக்கச்சை]கட்டிய ஆட்டனத்தி தன் காலில் அணிந்திருந்த கழல்[சலங்கை] நீருக்கு வெளியே தெரியும்படி புரட்டி ஆடி காட்டினான்.வயிற்றிலிருந்த பொலம்பாண்டில்[பொன்னாலான உருண்டையான ] மணி ஒலிக்கும்படி தன் உடம்பையே நீளவாக்கில் உருட்டி ஆடி  காட்டினான்.அப்படி ஆடி மன்னரையும் மக்களையும் மகிழ்வித்து கொண்டிருக்கையில் அந்த ஆறே இவர்கள் நடனத்தை கண்டு பூரித்தது போல திடீர் என கொந்தளித்தது.
இவனுடன் சேர்ந்து நீச்சல் நடனம் ஆடிய நீண்ட கரிய கூந்தலையுடைய காவிரி இவனது அழகில் மயங்கி ஆற்றுவெள்ளம் காவிரியை ஈர்த்தபோது அவனை வௌவிக்கொண்டும்[பிடித்துக்கொண்டு],தன் கூந்தலால் மறைத்து கொண்டும்  அவனை ஆற்றோடு இழுத்துச் சென்றாள்.என்றாலும் காவிரியை ஆறு அடித்துச் சென்றுவிட்டது.காவிரி ஆற்றுவெள்ளத்தில் மாண்டுபோனாள்.ஆட்டன் அத்தி கரை ஒதுங்கிக் கிடந்தான்.
அங்கே நீராடிய மீனவன் தலைவனின் மகள் மருதி என்பவள் அவனைக் காப்பாற்றி அவனுக்கு தேவையான வைத்தியம் செய்தாள்.அவனும் மெல்ல மெல்ல தேறினான்.மருதிக்கு அவன் மேல் ஒரு மோகம் ஒரு காதல் அரும்ப தொடங்கிற்று.அவனே தன தலைவன் என முடிவும் எடுத்து விட்டாள்.அப்படி இருக்கும் தருவாயில், 
ஆதிமந்தி ஆட்டனத்தியை தேடி பேதுற்றுப் புலம்பிக் கரையோரமாக ஓடினாள். தன் காதலனைக் கண்டீரோ என்று கேட்டுக்கொண்டு ஊர் ஊராக அலைந்தாள். நீரோட்டத்தின் வழியே கடற்கரையிலே பின்சென்று, “மலையொத்த தோள்கள் கொண்டவனே” என்று கதறினாள்.
"கச்சினையும்[cloth tied around his body] கழலினையும்[war anklets] தேன் ஒழுகும் மாலையணிந்த மார்பினை உடையவனும், பலவகை மலர்களால் தொடுக்கப்பட்டு விளங்கிய அழகமைந்த மாலையை உடையவனும் ஆகிய சுருண்ட மயிரினையுடைய அழகிய கூத்தனாகிய ஆட்டனத்தியைக் கண்டிரோ?" என்று கண்டவர்கள் எல்லோரிடமும்  மயக்கமுற்று வருந்தி வினாவினாள்.இதை மருதியும் கேட்டாள்.
ஆதிமந்தி கூறிய அடையாளங்கள்,தான் காப்பற்றிய,தன் மனதை கவர்ந்த,தன் தலைவனாக முடிவெடுத்த இவனின் அடையாளங்களுடன் ஒத்து போவதை கண்டு திடுக்கிட்டாள்.

"முழவு முகம் புலராக் கலி கொள் ஆங்கண்
கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும்
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின்
ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇத்
தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின்
மரதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த
ஆதி மந்தி காதலர் காட்டிப்
படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின்
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்"
[அகநானூறு 222, பரணர், குறிஞ்சி திணை]

அவனைப் பார்த்ததாக யாராவது சொல்ல மாட்டார்களா என்று ஆதிமந்தியின்  நெஞ்சின் ஏக்கம் அவள் வினாவில் இருந்து நெடுமூச்சாய் வெளிப்படுகிறது.. அந்த நேரத்தில் உண்மை தெரிந்துகொண்ட மருதி ஆட்டனத்தியை ஆதிமந்தியிடம் ஒப்படைத்து "இதோ!.." என்று அவள் காட்ட, ஆட்டநந்தியைக் கண்டு சந்தோஷத்தில் அவள் கன்னம் மீண்டும் நனைகிறது; இந்த நனைதல் சூடாய் இல்லை;சுகமாய் இருக்கிறது.அந்த சுகத்தோடு வெட்கமும் சேர்ந்து அவள் கன்னம் சிவக்கின்றன.
ஆட்டனத்தியை அவளது காதலி ஆதிமந்தியிடம் ஒப்படைத்துவிட்ட மருதி தனக்கு வேறு பற்றுக்கோடு இன்மையால் கடலுள் பாய்ந்து தன்னை மாய்த்துக்கொண்டாள்,அப்படி பட்ட சிறந்த சிறப்பினை உடையவள் இந்த  கற்பரசி மருதியாகும் என சங்க பாடல் மேலும் கூறுகிறது !
இந்தக் கதையை  பாவேந்தர் பாரதிதாசன் சேர தாண்டவம் என்று நாடகமாக எழுதினார். இதையே தழுவி எடுக்கப்பட்ட படம் மன்னாதி மன்னன். அதில் அஞ்சலிதேவி தண்ணீரோடு போன எம்.ஜி.ஆரைத் தேடி “காவிரித்தாயே காவிரித்தாயே” என்று பாடுவார்.
மேலும் அகநானுறு 45"காதலர் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து ஆதிமந்தி போல பேதுற்று அலந்தனென் உழல்வென் கொல்லோ,"-வெள்ளிவீதியார்,135"பசலை பாய்ந்த நுதலேன் ஆகி,எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து,ஆதி மந்தியின் அறிவு பிறிதாகிப் பேதுற்றிசினே காதல் அம் தோழி!"-பரணர்,236 "தோட்டு இருஞ் சுரியன் மணந்த பித்தை, ஆட்டன் அத்தியை காணீரோ?’ என நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித் தன்று எனக் கலுழ்ந்த கண்ணள், காதலர் கெடுத்த ஆதி மந்தி போல, ஏதம் சொல்லிப், பேது பெரிது உறலே.",396 "மந்தி பனிவார் கண்ணள் பலபுலந்து உறைய அடுந்திறல் அத்தி ஆடுஅணி றனஇ நெடுநீர்க் காவிரி கொண்டு ஒளித்தாங்கு"-பரணர்,ஆகியவற்றிலும் ஆட்டனத்தி ஆதிமந்தி காதல் குறிப்புகள் காணப்படுகின்றன அது மட்டும் அல்ல " 

"-- உரைசான்ற
மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன்
தன்னைப் புனல்கொள்ளத் தான் புனலின் பின்சென்று
‘கல்நவில் தோளாயோ,’ என்னக் கடல்வந்து
முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழீஇக் கொண்டு
பொன்னங் கொடிபோலப் போதந்தாள்"

என்று இளங்கோ ஆதிமந்தியின் காதல் வலிமையை  சிலப்பதிகாரத்தில் எடுத்துச் சொல்கிறார்.

-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

1 comment: