இராவணன் நல்லவனா? -கேள்வி(01...03)


நல்லவன் கெட்டவன் என்று பாகுபடுத்தல் கடினமான வேலை.. அது ராமனாக இருந்தாலும் சரி ராவணனாக இருந்தாலும் சரி. எல்லோரும் பிறந்தனர் வாழ்ந்தனர்.. இறந்தனர்... அவ்வளவே! 

கேள்வி(01):-   ஒரு நாட்டின் ராஜகுமாரியைத் தூக்கிக் கொண்டுவந்து சிறைபிடிக்கும் ஓர் அரசன் எங்ஙனம் அவன் நாட்டின் அழகிய பெண்களைப் பாதுகாப்பான்?

ராவணனின் மகள் சீதை என்று ஒரு கதை உண்டு..

ராவணனுக்கு அவன் சீதையைக் கொண்டுவந்தபோது அவள் ஒரு காட்டுவாசி அவ்வளவே. ராஜகுமாரி அல்ல. அது ராஜகுமாரியை கடத்தியது என்று சொல்லமுடியாது. பெண்களைக் கவர்வது தவறு என்று அந்த காலத்தில் கருதப் பட்டதாக தெரியவில்லை. சுக்ரீவனின் மனைவியை வாலி கவர்ந்தான், மன்னர்கள் தாங்கள் வெற்றிப்பெற்ற நாடுகளில் இருந்து பெண்களை கவர்ந்து வந்தனர். ராமன் தங்க மானைப் பிடிக்கலாம். ராவணன் சீதையைப் பிடிக்கக் கூடாதா? மானும் கடவுள் படைத்த உயிரினம் தானே? ராமன் ஏன் அசுவமேத யாகம் செய்தான்? யாகக்குதிரையை கட்டிய சிறுவர்களுடன் ஏன் போரிட்டான்.. கௌரவம் அய்யா கௌரவம்.. அவ்வளவுதான்..

கேள்வி(02):-பாதுகாப்பில்லாத வாழ்க்கை நடத்திவரும் இளைஞிகளுக்கு மத்தியில் இராவணன் இலங்கையை எப்படி சொர்க்கபுரியாக ஆள முடியும்?

இலங்கையின் குடிமக்கள் பாதுகாப்பின்றி வாழவில்லை என்பது அபாண்டம். அனுமன் இலங்கைக்குள் நுழைய என்ன பாடுபட்டான் என்று தெரியுமல்லவா? ராவணன் பல தாரமுள்ளவனாக வாழவில்லை. அவன் குல வழக்கப்படியே வாழ்ந்தான்.. ஓரிரு முறை அவன் பிறபெண்களின் மேல் ஆசைப்பட்டிருக்கலாமே தவிர பெண்களுக்கு அவன் ஆட்சியில் பாதுகாப்பில்லை என்ற கருத்தை எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவனது குலமாந்தர் உலகைச் சுதந்திரமாய் சுற்றி வந்தனர்.. ஆண்களின் பின் அடுப்படிகளில் மறைந்து வாழவில்லை.

கேள்வி(03):-சொர்க்கமாக ஆண்ட இராவணனை ஏன் கருணையின்றி இராமன் கொல்லவேண்டும்? மன்னித்து அரசை அவனுக்கே கொடுக்கலாமே?!!

ராமன் ராவணன் மேல் போர்தொடுத்தது ஒரு கௌரவப் பிரச்சனை. அதில் யாரும் விட்டுக் கொடுத்திருக்க முடியாது.. யாராவது விட்டுக் கொடுத்தால்தானே இருவரும் உயிரோடு இருக்க.. போரில் தோல்வி யாருக்கும் இல்லை. யாரும் தன் கொள்கைகளை விட்டுக் கொடுக்கவில்லை. ராமன் ராவணனை கொன்றானா வென்றானா என்று வேண்டுமானால் பட்டிமன்றம் வைத்துக் கொள்ளலாம்.. ஒருவன் இறப்பதால் அவன் தோற்றான் என்று அர்த்தமில்லை.

-THAMARAI,VENTHAN (கேள்விகள்  தொடரும்...)

clickdown  to read more

Theebam.com: இராவணன் நல்லவனா?..கேள்வி(04...09)

1 comment:

  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Thursday, August 08, 2013

    ஒரு அரசன் இன்னொரு நாட்டின் மீது படையெடுத்துச் செல்ல முடிவு செய்தவுடன், முதலில் அந்த நாட்டின் பசுக்களைக் கவர்ந்து வருவான்.இழந்த ஆநிரைகளை மீட்க அந்தப் பகை நாட்டரசன் போருக்கு வருவான்.அதாவது எதிரி நாட்டரசனை போருக்கு வர வழைக்க "ஆநிரை கவர்தல்" ஒரு முகாந்திரமாகப் பயன்பட்டது.அது போலத்தான் ராவணன் சீதாவை கவர்ந்த ஒன்றாகும்.ராமன் காட்டில் வனவாசத்தில் இருந்ததால்,தன் தங்கையை மானபங்கம் செய்தவர்களுடன் போருக்கு [சூளுரைக்க] அறை கூவ ஒரே வழி-சீதையை கவருவதாகவே அப்பொழுது அவனுக்கு இருந்திருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. ஆயுதம் ஏதும் அற்ற தன் தங்கையின் மூக்கை அறுத்து கேவலபடுத்திய தற்கு பழிவாங்க சீதையை கடத்தியிருக்கலாம்?.அப்படி அவன் தன் தங்கைக்காக பழிவாங்காவிட்டால்,அவனது குடிமகன்கள்[பிரஜைகள்] எவருமே அவனை தங்கள் பாது காவளனாக பார்க்கமாட்டார்கள் என்பது ஒரு கருத்தாகும். மேலும் எந்த ஒரு சந்தர்பத்திலும் அவன் சீதையை தொடவோ அல்லது தவறாக நடக்கவோ இல்லை என்பது கவனிக்கத்தக்கது. அவன் இலங்கையை 2554 BC to 2517 BC யில் ஆண்டதாக கருதப்படுகிறது.மேலும் தமிழ் நாட்டின் கிராம புறங்களில் கிராமிய வடிவில் ராவணனை தலைவனாகவும் பெண்ணை நியாயமற்ற வழியில் கையாண்ட ராமனை வில்லனாகவும் கருதப்படுகிறது.அகலிகைக்கு விமோசனம் கொடுத்த ராமன் தனது அழகிய மனைவியை நம்பவில்லை. அக்கினி பிரவேசம் செய்ய சொல்கிறான்.மீண்டும் கருவுற்ற தன அழகிய மனைவியை காட்டிற்கு அனுப்பிவிட்டு தான் அரண்மனையில் இருக்கிறான் .அவள் தனி-தாயாக பிள்ளைகளை பெற்று வளர்க்கிறாள் .அயோத்திய கண்டத்தில் ராமன் "பெண்ணை நம்பக்கூடாது" என்றும் "ரகசியங்கள் மனைவிக்கு அந்தரங்கப் பகிர்வு செய்ய கூடாது" என்றும் சொல்கிறான் என்பதும் கவனிக்கத்தக்கது. அயோத்திய புரியில் பட்டம் சூடிய இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுகிறார். சீதா பெற்ற துயர்களைப் போல இன்றும் நம் நாட்டுப் பெண்டிரில் பலர் இன்னல் அடைந்து வருகிறார்கள் என்பது கண்கூடு. தனித்து விடப்பட்ட சீதை குழந்தைகள் பிறந்த பிறகு மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டு மரணம் அடைவது இந்திய இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் உன்னத துன்பியல் வரலாறு. காட்டுக்குத் துரத்தப்பட்ட கர்ப்பவதி சீதா, இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்று, வால்மீகி ஆசிரமத்தில் வாழ்ந்து இறுதியில் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். ஆனால் பாரத நாடு இராமனும் சீதாவும் இல்லறத்தில் ஒன்றாக வாழ்ந்த உன்னத தம்பதிகளாய்க் காட்டித் தொழுது வருகிறது!

    ReplyDelete