கண்ணகியில் விழுந்த பழி -03



சிலப்பதிகாரக் காலம், தமிழகம் பலவிதக் குழப்பங்கள் மலிந்த காலம், மூவேந்தரும் கட்டற்ற முடியாட்சியைத் தழுவிய காலம் என்று மேலே கூறினோம். அதுவரை அரசியல் செல்வாக்குப் பெற்றிருந்த வேளாண் குடியினரும் வாணிகரும் புறக்கணிக்கப்பட்டனர். அவர்களின் இடத்தை, அரசனைப் புகழ்ந்தும் ஏத்தியும் ஒட்டுண்ணிப் பார்ப்பனர் பிடித்தனர். பிரம தேயங்களை முற்றூட்டாகப் பெற்றனர், வேள்வி வளர்த்துப் பெருஞ்செல்வம் ஈட்டினர். மனங்கசந்த வாணிகர்கள் வடக்கிலிருந்து வந்த சமணத்தைச் தழுவினர்.

 

தமிழக் மூவேந்தரும் கி.மு. நான்காம், மூன்றாம் நூற்றாண்டுகளில்[1] தமக்குள் ஒரு கூட்டணியை ஏற்படுத்தி வைத்து அண்டை அரசுகளின் தாக்குதல்களிலிருந்து தம்மைக் காத்துக் கொண்டதாகவும் அக்கூட்டணியைத் தான் உடைத்ததாகவும் கலிங்க மன்னன் காரவேலன் பொறித்து வைத்திருக்கிறான். கலிங்க நாட்டில் அப்போது சமணம் அரச மதமாயிருந்தது.

 

ஏற்கனவே துவக்கத்தில் நாம் கூறிய விருந்தில் மன்னர் இவ்வாறு வெளியே இருந்து வந்த சமணத்தைத் தழுவியவரும் காஞ்சியில் ஆட்சி செய்தவருமான திரையர்களாயிருக்கலாம். இவர்களே பின்னர் வடமொழி தழுவி தங்கள் பெயரைப் பல்லவர் என்றாக்கிக் கொண்டார். (பல்லவம்-திரை-கடல் அலை) வரிச் சுமையால் நொந்து போயிருந்த கறை கெழு மாக்களும் சமணர்களுமாகிய வணிகர்களிடையில் உள்ள அறை போகு குடிகளை(காட்டிக் கொடுப்போரை)ப் பயன்படுத்தி இப்படையெடுப்பு நடைபெற்றதால் சமணர்கள் தமிழக அரசர்க்கு வேண்டாதாராயினர்.

 

இதனாலேயே கவுந்தியடிகளும் புகாருக்கு வெளியே தோன்றி மதுரைக்கு வெளியிலேயே நின்று விடுகிறார். பார்ப்பனரும் எயினரும் ஆயரும் வேடரும் மன்னன் வாழ்க எனக் கூறினும் கவந்தியும் கோவலனும் ஒரு போதும் மன்னனை வாழ்த்தவில்லை. இவ்வாறு சமணர்கள் அரசர்க்குப் பகையாயிருந்தாலும் மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். ஆயர் முதுமகள் மாதரி காவுந்தியைக் கண்டடி தொழலும் அவர் அடைக்கலமாகத் தந்த கோவலன்-கண்ணகியைப் போற்றிப் புரந்ததும் அவர்கள் மாண்டதறிந்து தான் உயிர் விட்டதும் இதற்குச் சான்றாகின்றன.

 

சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்......... (16:28)

 

என்று மாதரி கோவலனை மதித்துக் கூறுகிறாள். (மக்கள் மீது சமணத்துக்கு இருந்த இந்த செல்வாக்கு 7-ஆம் நூற்றாண்டில் 8000 சமணர்களைச் சம்பந்தர் கொலை செய்த கொடுமைக்குப் பின்னரும் நெடுநாள் நிலைத்து நின்றது குறிப்பிடத்தக்கது).

 

கோவலன் சமணனாயிருந்ததே அவன் சாவுக்குக் காரணமாகியதோ என எண்ணத் தோன்றுகிறது. சமணர்களைப் பகைவன் ஒற்றர்களாகத் தமிழ் மன்னர்கள் கருதிய காலமது. (கல்கியின் சிவகாமியின் சபதமும் இத்தகைய கருத்தைக் கொண்டுள்ளது இங்கு கருதிப் பார்க்கத் தக்கது.) கோவலனை ஒற்றன் என்று கருதியதாலேயே அவனை மூதலிப்பு (உசாவல்) இன்றிக் கொல்ல பாண்டியன் ஆணையிட்டிருக்க வேண்டும்.

 

கோவலனின் முற்பிறப்புச் செய்தியில் வரும் நீலியின் கணவன் சங்கமன் என்ற வாணிகன் ஒற்றன் என்றே கொலைப்பட்டான் என்ற சேதியும் ஒப்பு நோக்கத்தக்கது. இதை மறைமுகமாக கோவலன் பற்றிய தன் பழம் பிறப்புக் கதையில் சாத்தனார் வெளியிட்டார் போலும். முற்பிறப்பில் பரதானாயிருத்த கோவலன் சமணத்தை வெறுப்பவனாயிருந்ததால் அவன் சமணனாகிய சங்கமனை ஒற்றனாகப் பிடித்தான் என்கிறது சிலப்பதிகாரம்

 

விரத நீங்கிய வெறுப்பின (ன்) ஆதலின்

ஒற்றன் இவனெனப் பற்றினன்....... 23: 155-156

 

இவ்வாறு சோழ நாடு அரசுரிமைப் போராலும் பாண்டிய நாடு மக்களின் கசப்பாலும் வெளிநாட்டாரின் படையெடுப்புகளுக்கு ஆட்படும் நிலையிலிருந்த வேளையில் சேர நாட்டில் இளங்கோ வாழ்ந்தார். அவர் தமிழகத்தி நிகழ்பவற்றை நன்கு எடைபோட்டு வைத்திருந்தார். இலக்கியம், கலைகள் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தது போன்றே அரசியலிலும் தேர்ச்சிப் பெற்றிருந்தார். மூவேந்தர் ஒற்றுமையுடன் மக்களின் ஒற்றுமையும், மன்னர்களோடு அவர்களின் ஒத்துழைப்பும் தான் தமிழகத்தை உயர்த்த முடியும் என்பதை உணர்ந்திருந்தார். பொதுமக்கள் மீதும் அவர்களின் பண்பாடு மீதும் ஆழ்ந்த பற்று வைத்திருந்தார். எனவே தான் தன் நூலில் சங்க இலக்கியங்களின் தொகுப்பினுள் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட மக்கள் இலக்கியங்களான கானல்வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, அம்மானை, கந்துக வரி, ஊசல் வரி, வள்ளைப் பாட்டு முதலியவற்றைப் பெய்து வைத்துள்ளார். இவ்வாறு மக்கள் கலைகளை அறிந்து கொண்ட அவருக்கு எளிய மக்களோடு நெருங்கிய தொடர்பிருந்திருக்க வேண்டும்; மக்கள் மீது மிகுந்த செல்வாக்கிருந்திருக்க வேண்டும். அவர் தங்கள் மன்னராக வேண்டுமென்று மக்களில் பலர் விரும்பியுமிருக்கலாம். இத்தகைய அவரது செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு சேர மண்ணில் அரசுரிமைப் போரைத் தூண்டும் முயற்சியே, நிமித்திகள், இளங்கோவடிகளே அரசராவார் என்று கூறிய நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் பகைநாட்டு அரசுகளை வீழ்ந்த இத்தகைய உத்திகளை அர்த்தசாத்திரம் பரிந்துரைக்கிறது. அரசியலில் தெளிவும் தமிழர் நலத்தில் நாட்டமும் கொண்ட இளங்கோவடிகள் உரிய முறையில் நிமித்திகள் சூழ்ச்சியை முறியடித்ததையே அவரது துறவு குறிப்பிடுகிறது. ஆனால் அவரது ஈகம் தமிழகத்தில் அவர் விரும்பிய பலனைத் தரவில்லை என்றே வரலாறு காட்டுகிறது. குறுகிய காலத்தினுள் மூவேந்தர் ஆட்சியும் அழிந்து களப்பிரர் ஆட்சி தோன்றியது.

 

இவ்வாறு அரசகுலத்தில் தோன்றியதும் கதை நிகழ்ந்த காலத்திலேயே வாழ்ந்ததுமே நடந்தவற்றை அப்படியே கூற முடியாமல் இளங்கோவடிகளைத் தடுத்திருக்க வேண்டும். தம் போன்ற அரச குலத்தினரின் தவறுகளை வெட்ட வெளிச்சமாக எடுத்துரைக்கத் தயங்கியதாலேயே பாண்டியன் ஆட்சியை வளையாத செங்கோல் என்று பலமுறை கூறுகிறார். இது சேக்சுபியரின் சூலியசு சீசர் நாடகத்தில் அந்தோனி But Brutus is an honourable man′ என்று பலமுறை கூறுவதை ஒத்தது. இருப்பினும் பாண்டியன் கோல் வளைந்தது என்றும் கூறுகிறார். இருந்தாலும் உலகுக்குக் கூறப்பட்ட மதுரை நிகழ்ச்சிகளுக்குள் கூறப்படாத ஒரு வரலாறும் இருக்கிறதென்று காட்ட தாமே சிலப்பதிகாரம் எழுதத் துணிந்தார் எனலாம். ஆனால் மக்கள் அரசனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதை அவர் விரும்பினார் என்று கூற முடியாது. அரைசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும் என்று ஆட்சியிலிருப்போர்க்கு எச்சரிப்பதே போதுமென்று கருதினார். (அறம் என்ற சொல்லுக்கு சமுதாய நீதி, அதாவது மக்களின் கூட்டு விருப்பம் என்றும் ஒரு பொருள் உண்டு) மொத்தத்தில் இளங்கோவடிகள் ஒரு குடியாட்சி முடியரசியரே (Democratic Monarchist)

 

அரசர்களின் சிறப்புரிமைகள், அதிகாரங்கள் பற்றிய கேள்விகள் அக்கால கட்டத்தில் எழுந்திருக்கலாமென்று ஐயுறத்தக்க தடையமொன்று சிலம்பில் உண்டு. சாத்தனார் மூலம் மதுரையில் நடந்ததை அறிந்த செங்குட்டுவன்

 

மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்

துன்ப மல்லது தொழுதக வில்லென ... (25: 203-204)

 

என்று கூறுவதைக் காணலாம்.

 

இளங்கோவடிகள், வேதவியாசர், வால்மீகி போன்று தான் கதையில் தோன்றும் உத்தியைக் கையாண்டுள்ளார் என்று கூறவது பொருந்தாது. எடுத்துக்காட்டாக வேதவியாசர் மகாபாரதத்தில் தவிர்க்க முடியாத பங்கேற்றுள்ளார். பாண்டவர் மற்றும் கவுரவர்களின் தந்தையர்க்கு அவர் தான் தந்தை. கவுரவர்களின் தாயின் கருச்சிதைவுற்ற போது அதை 100 பாண்டங்களில் திரட்டி குழந்தைகளாக்கியது அவரே. இவ்வாறு வியாசரில்லை யென்றால் மகாபாரதக் கதையே இல்லை. ஆனால் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளுக்கு அத்தகைய தொடர்பு எதுவுமில்லை. அவர் வாழ்க்கையின் ஒரு முகாமையான நிகழ்ச்சி கதையில் வெளிப்படுகிறது; அது கதையில் இடம் பெறாவிடினும் கதைக்கு எந்தப் பாதிப்பும் மாற்றமும் நேராது. சில நிகழ்ச்சிகளுக்குத் தானே சான்றாகும் விளைவு தான் சிலப்பதிகாரத்தில் ஆசிரியர் ஏற்றுள்ள பங்குக்கு உண்டு.

 

இவ்வாறு சிலப்பதிகாரம் தமிழகத்தில் மிக முகாமையான ஒரு வரலாற்றுக் கட்டத்தைக் காட்டுகிறது. மன்னர்கள் கட்டற்ற முடியாட்சியராக மாறிவருகிறார்கள். பார்ப்பனர்கள் அரசர்களின் துணையுடன் வருண முறையைப் புகுத்தப் பார்க்கிறார்கள். விளைப்புக் கருவிகளை உடைமைகளாகப் பெற்றிருந்த வேளாளருக்கும் விளைப்பு ஆற்றலைக் கொண்டிருந்த உழைப்போருக்கும் பண்டங்களின் பங்கீட்டைக் கையாண்ட வாணிகருக்கும் குமுகாயத்திலிருந்த இடம் மறுக்கப்பட்டு கீழே தள்ளப்படுகின்றனர். விளைப்புப் பாங்குடன்(Mode of production) எவ்வித உறவு மில்லாத ஒட்டுண்ணிகளான அரசும், மதமும் தலைமைதாங்க முயன்றன. விளைப்பு விசைகளுக்கும்(Productive forces) விளைப்பு உறவுகளுக்கும்(Productive Relations) இடையில் போராட்டம் நிகழ்ந்து சமுதாயம் முன்னேறிச் செல்வதற்குப் பகரம் பொருட்டுறை அடித்தளத்துக்கும் மேற்கட்டுமானத்துக்கும் இடையில் முரண்பாடு தோன்றியது. வகுப்புகளாகப் பிளவுண்டிருந்த மக்கள் வருணங்களாகப் பிளவுறுவதை ஏற்கவில்லை; இதற்கு ஆணித்தரமான சான்றைச் சிலப்பதிகாரம் கொண்டுள்ளது.

 

கண்ணகியை அடைக்கலமாகப் பெற்ற இடைக்குல முதுமகள் தன் மகள் ஐயையை நாத்தூண் நங்கை (16:19) அதாவது கண்ணகியின் நாத்தனார் என்று கூறுகிறாள்.

 

இன்னும் வாழ்த்துக் காதையில் ஐயையை மாமி மடமகள் (8) என்றும் கூறுகிறாள்.

 

மேலும் பார்ப்பன மங்கை தேவந்தியும், காவற்பெண்டு, அடித்தோழி ஆகிய உரிமைச் சுற்றத்தாரும்(அடிமையரும்) வேறுபாடின்றி கண்ணகியைத் தோழி என்றே அழைக்கின்றனர். பொருட்டுறை வேறுபாடு குமுகியலியல் வேறுபாட்டை ஏற்படுத்தாத ஒரு நிலையையே இது காட்டுகிறது.

 

அதே வேளையில் பார்ப்பனரும் அரசரும் சேர்ந்து வருணத்தைப் புகுத்தினர். வெவ்வேறு வருணத்தார்க்கு வெவ்வேறு வீதிகள் வகுத்தனர். இத்தெருக்களை அடையாளந் தெரிந்து கொள்ள அமைக்கப்பட்ட படிமங்களைத் தான் வருணப் பூதங்களென்று குறிப்பிட்டார் போலும். இத்தெருக்களையும் அவற்றின் அடையாளங்களையும் புரட்சியாளர்கள் அழித்ததைத் தான்,

 

நாற் பாற் பூதமும் பாற் பாற் பெயர

......................................................

பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும்

உரக் குரங்கு உயர்ந்த ஒண்சிலை உரவோன்

கா வெரியூட்டிய நாள் போற் கலங்க....... (22:108-112)

 

இவ்வாறு தனித்துக் குறிப்பிட்டுக் கூறுகிறார் ஆசிரியர்.

 

பார்ப்பாரறவோர் பசுப் பத்தினிப் பெண்டிர்

மூத்தோர் குழவி யெனு மிவரைக் கைவிட்டுத்

தீத்திறத்தார் பக்கமே சேர் கென்று ...... (21:53-55)

 

கண்ணகி கூறியதாகக் கதை கூறுகிறது. ஆனால் பார்ப்பனர் உள்ளிட்ட நால்வேறு தெருவும் கலங்குவதாகவும் கூறுகிறது.

 

இனி அழல் 'தீத்திறத்தார்' யார் யாரைச் சேர்கிறது என்று பார்ப்போம்.

 

1) கோமகன் கோயில் - அரண்மனை (22:14)

 

2) (பார்ப்பனர் உள்ளிட) வருண முறையை ஏற்றுக்கொண்டோர் வாழும் தெருக்கள் (22:110:112)

 

3) மறவோர் சேரி - போர் வீரர்களின் சேரி (22:114)

 

4) யானை, குதிரைக் கொட்டில்கள் (22: 117-118)

 

5) கணிகையர் ஆடரங்கு (22:142)

 

6) கூல மறுகு (22:109)

 

7) கொடித் தேர் விதி. (22:109)

 

இவ்வாறு மேற்கூறிய இடங்களிலுள்ள பெண்கள் குழந்தைகள், விலங்குகள், முதியோர் நீங்கலான ஆடவர் தீயால், அதாவது புரட்சியால் தாக்குண்டனர், அதாவது அரண்மணை, நால் வருணத் தெருக்கள், படைமறவர், சேரி, யானை குதிரைக் கொட்டில்கள், கணிகையரின் ஆடரங்குகள் தாக்கி அழிக்கப்படுகின்றன. அரசனும், வருணமேந்திகளும் அவர்களின் இன்ப நுகர்ச்சிக்களமாகிய கணிகையர் வீதிகளுமே அதிகத் தாக்குதலுக்குள்ளாகின்றன. உண்மையில், பெருமனைக் கிழத்தியர், குடும்பப் பெண்கள், மகிழ்கின்றனர். (22:133).

 

இவ்வாறு மன்னனின் கட்டற்ற ஆட்சியையும் வருணமுறைப் புகுத்தலையும் எதிர்த்து மக்கள் நிகழ்த்திய(பூர்சுவாப் புரட்சி) புரட்சி முறியடிக்கப்பட்டது. பின்னோக்கித் திரும்பிய தமிழக வரலாற்றைத் தடுத்து நிறுத்த மக்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. அன்றிலிருந்து ஏறக்குறைய 17 நூற்றாண்டுகளுக்கான தமிழக வரலாற்றில் இந்த பின்னோக்கிய ஓட்டம் நிற்கவில்லை என்பது வரலாறு விரிவாகக் கூறுகிறது. இந்தத் துயர வரலாற்றுத் திருப்புமுனையைக் காட்டும் எல்லைக்கல்லாக சிலப்பதிகாரம் நிற்கிறது.

 

அடிக்குறிப்பு:

 அண்மையில் வெளியான் ஒரு செய்தியின்படி இந்தக் கூட்டணி கி.மு. பதினைந்தாம் நூற்றாண்டில் ஏற்பட்டது எனத் தெரியவந்துள்ளது.

 [பகுதி 01 இனை வாசிக்க அழுத்துக Theebam.com: கண்ணகியில் விழுந்த பழி -01]

எழுதியவர்: குமரிமைந்தன்



1 comment:

  1. அதாவது,மன்னனின் கொடுங்கோலாட்சியினை எதிர்க்க அந்நாடு மக்களுக்கு கோவலனின் கொலை ஒரு சாட்டாக அமைந்துவிட்டது.மதுரையை கண்ணகி எரித்தாள் என்பதனை பொய்யாக்கி விட்டது உங்கள் ஆய்வு.பின்னால் வந்தவர்கள் அம்மக்களுக்கு பயந்தே கண்ணகியை கடவுளாக்கியிருக்க வேண்டும் என க்கருதுகின்றேன்.

    ReplyDelete