உணவே மருந்தாக இருக்கவேண்டும் என்பதே சித்த மருத்துவத்தின் தத்துவமாகும். பெரும்பாலான சித்த மருந்துகள் உணவின் வடிவத்திலே காணப்படுகின்றன. சூரணம், லேகியம், மணப்பாகு என பல வடிவங்களில் வழங்கப்படும் சித்த மருந்துகள் பெரும்பாலும் அதிக ஊட்டச்சத்து உடையவையாகவும், பலவித சத்துக்களை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றன. ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை உணவாக உட்கொள்ளும் போது செரிமான மண்டலம் சீராக இயங்குவதுடன் பலவித நோய்களின் ஆதிக்கமும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகவேதான் இந்திய உணவு வகைகள் பல மக்களின் உடல்வாகுக்கும், சுற்றுப்புற சீதோஷ்ணத்திற்கும் ஏற்றவாறு காணப்படுகிறது.
உடனடி சக்தியை தரக்கூடிய அரிசி உணவை தென்னிந்தியர்கள் அதிகம் உண்பதும், தாமத சக்தியை தரக்கூடிய கோதுமை, கேழ்வரகு போன்ற உணவுகளை வட இந்தியர்கள் அதிகம் உட்கொள்வதும் காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும். உடலின் தன்மைக்காக மட்டுமின்றி, சுற்றுப்புற சீதோஷ்ணத்திற்கும் ஏற்றவாறு நாம் உணவுகளை உட்கொள்வது அவசியமாகும்.
வெறும் அரிசியை மட்டுமே உட்கொள்பவர்களுக்கு சர்க்கரை நோயால் பாதிப்பு உண்டாகும் பொழுது பிற உணவுகளை உடல் ஏற்றுக்கொள்ள மறுப்பதாலும், ருசி பிடிக்காமலும் மறுபடியும் அரிசி உணவுகளையே உட்கொண்டு தங்கள் சர்க்கரைநோயை கட்டுப்படுத்த இயலாமல் திணறுகின்றனர். அது போல் வட இந்தியர்கள் கோதுமை, கேழ்வரகு போன்ற உணவுகளை உட்கொள்வதால் உடனடி சக்தி கிடைக்காமல் உடல் உழைப்பு சற்று குறைந்து காணப்படுகின்றனர். ஆகவே ஒவ்வொருவரும் பலதரப்பட்ட சத்துக்களையும் உள்ளடக்கிய கலப்பு உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அரிசியை விட ஊட்டச்சத்து அதிகம் மிகுந்த கோதுமை போன்ற பல தானியங்கள் நடைமுறையில் உள்ளன. அவற்றையும் அடிக்கடி உணவில் எடுத்துக்கொள்வதால் உடலில் சத்துக்குறைபாடு ஏற்படாமல் தடுக்கலாம். அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவானது வெறும் கார்போஹைட்ரேட் மட்டுமின்றி இதர சத்துக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அரிசிக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய தானியங்களில் முக்கியப் பங்கை வகிப்பது ராகி என்று அழைக்கப்படும் கேழ்வரகு ஆகும்.
சிறு குழந்தைகள், வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற உணவாக கேழ்வரகு கருதப்படுகிறது. அரிசியைப் போன்றே சர்க்கரையளவு இதில் காணப்பட்டாலும் சீரண மண்டலத்தில் சர்க்கரையை கொஞ்சங் கொஞ்சமாக வெளியிடுவதால் சர்க்கரை நோயாளிகளும் உட்கொள்ளும் சிறப்பு உணவாக பரிந்துரைக்கப்படுகிறது.
எலுசின் கோரக்கேனா என்ற தாவரவியல் பெயர் கொண்ட போயேசியே குடும்பத்தைச் சார்ந்த புல்லைப் போல் வளரும் கேழ்வரகு தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெருமளவு பயிர் செய்யப்படுகிறது. கருஞ்சிவப்பு நிற ராகியை விட வெள்ளை ராகியே தரம் உயர்ந்ததாக கருதப்படுகிறது. ராகியில் பெருமளவில் புரதம், பாஸ்பரஸ், இரும்பு, தையமின் மற்றும் ரைபோபிளேவின் வைட்டமின்கள் காணப்படுகின்றன. இரத்தத்திலுள்ள கொழுப்பையும் மற்றும் கொழுப்பு அமிலங்களையும் கரைத்து கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் அற்புத ஆற்றலை படைத்தது கேழ்வரகாகும்.
கேழ்வரகை களியாக கிண்டியோ, புட்டு போல் வேகவைத்தோ, அடை அல்லது ரொட்யாக சுட்டோ , கூழ் போல் செய்து குடித்தோ பல்லாண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். கால்கிலோ கருப்பட்டியை 300மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து வடிகட்ட வேண்டும். அரைகிலோ ராகிமாவு, கால் தேக்கரண்டி உப்பு மற்றும் நான்கு மேசைக்கரண்டி தேங்காய்த்துருவலுடன், இந்த கருப்பட்டி நீரை கலந்து கெட்டியாக பிசையவும். இதனை நல்லெண்ணெய் ஊற்றி ரொட்டியாக சுட்டு சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் ராகியை புட்டாக செய்து சாப்பிடலாம்.
அரைகிலோ ராகி மாவை தண்ணீர் மற்றும் கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து உதிரியாக கிளறி 10 நிமிடங்கள் இட்லி போல் ஆவியில் வேகவைத்து அத்துடன் பொடித்த ஏலக்காய்த்தூள், தேவையயனில் தேங்காய் துருவல் மற்றும் நெய் கொஞ்சம் சேர்த்து கிளறி வைத்துக்கொள்ள வேண்டும். இது இரத்த சர்க்கரையளவு அதிகப்படாமல் கட்டுப்படுத்துவதுடன், பசியையும் மட்டுப்படுத்தும்.
கேழ்வரகு கொழுப்பு அமிலங்களை மாற்றுவதில் தீவீரமாக செயல்படுவதால் சிலருக்கு தோல் வறட்சியும், அரிப்பையும் உண்டாக்கலாம். அது போன்றவர்கள் உணவில் கேழ்வரகை குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ளலாம்.
0 comments:
Post a Comment