விளையாட்டு


இலங்கை கிரிக்கெட் வீரர் சமரவீரா ஓய்வு


 இலங்கை கிரிக்கெட் வீரர் சமரவீரா ஓய்வு
இலங்கை கிரிக்கெட் வீரர் திலன் சமரவீரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து தன்னை நீக்கியதால் தான் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ள சமரவீரா, கொழும்பில் நேற்று (புதன்கிழமை) தேர்வுக் குழுவினரை சந்தித்தப் பிறகு ஓய்வு முடிவை அறிவித்தார்.

இது குறித்து கூறிய சமரவீரா, "வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டதால் பெரும் அதிர்ச்சியடைந்தேன்.

வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடர்களில் மூத்த வீரர்கள் இருவருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்க முடிவு செய்ததாக தேர்வுக் குழுவினர் என்னிடம் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் 9 மாதங்களுக்குப் பிறகு நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் என்னுடைய அனுபவ ஆட்டம் தேவை என்று அவர்கள் கூறினர். எனினும் அடுத்த வாய்ப்புக்காக 9 மாதங்கள் காத்திருக்க விரும்பாததால் ஓய்வு முடிவை எடுத்தேன்.

அதேநேரத்தில் இளம் வீரர்களை களமிறக்குவது என்ற தேர்வுக் குழுவினரின் முடிவுக்கு மதிப்பளித்து, ஓய்வு பெறுவதற்கு இது சரியான நேரம் என நினைத்ததால் கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுகிறேன்." என்று தெரிவித்தார்.

36 வயதாகும் சமரவீரா இதுவரை 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 14 சதம், 30 அரை சதங்களுடன் 5,462 ரன்கள் குவித்துள்ளார். இதேபோல் 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2 சதம் உள்பட 862 ரன்கள் குவித்துள்ளார். (டி.என்.எஸ்)


No comments:

Post a Comment