சனி, 6 ஏப்ரல் 2013:சென்னையில் இன்று ஐ.பி.எல். கிரிக்கெட் முதல் போட்டி நடைபெறுகிறது. இதில் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாண்டிங் தலைமை மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
ஏற்கனவெ பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரக மும்பை அணி கடுமையாக சவால் கொடுத்து 2 ரன்களில் தோல்வி தழுவியது. அதனால் இன்று வெற்றி பெறுவது என்ற உறுதியுடன் விளையாடும்.
சச்சின், பாண்டிங் கூட்டணி நின்று விட்டால் சென்னைக்கு ஆபத்துதான். தோனி தலைமையில் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் அல்பி மோர்கல், டூபிளஸ்ஸிஸ் ஆகியோர் இந்த ஆட்டத்தில் விளையாடமாட்டார்கள். அல்பி மோர்கல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ராம் ஸ்லாம் டி20 தொடரில் விளையாடி வருகிறார். டூபிளெஸ்ஸிஸ் முதுகு வலி பிரச்னையில் இருந்து குணமடைந்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த ஐபிஎல் போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தவர்கள். சென்னையில் இலங்கை வீரர்கள் விளையாட தடை விதிக்கப்பட்டிருப்பதால் குலசேகரா, அகில தனஞ்ஜெய ஆகியோரும் இந்த ஆட்டத்தில் விளையாடமாட்டார்கள்.
சென்னை அணி முரளி விஜய், மைக் ஹசி, பத்ரிநாத், ரெய்னா, வேயன் பிராவோ, கேப்டன் தோனி, ரவீந்திர ஜடேஜா என பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்களாக பென் ஹில்பெனாஸ், திர்க் நேன்ஸ் ஆகியோர் களமிறக்கப்படலாம். சுழற்பந்துவீச்சைப் பொறுத்தவரையில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா கூட்டணி கவனிக்கும்.
சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால் 11-வது வீரருக்கான இடத்தைப் பிடிப்பதில் தமிழக இளம் ஆல்ரவுண்டரான பாபா அபராஜித், ஷதாப் ஜகாத்தி ஆகியோரிடையே போட்டி நிலவும் என்று தெரிகிறது.
கூடுதல் பேட்ஸ்மேனுடன் களமிறங்குவது என தோனி முடிவெடுத்தால் அனிருத்தாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
மும்பை அணியைப் பொறுத்தவரையில் சச்சின், பாண்டிங், தினேஷ் கார்த்திக், ரோஹித் சர்மா, அம்பட்டி ராயுடு, கைரான் போலார்ட் என முன்னணி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
இவர்களில் தினேஷ் கார்த்திக் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 37 பந்துகளில் 60 ரன்களைக் குவித்து ஆட்டத்தின் போக்கை திருப்பினார். அவரின் அதிரடி இந்த ஆட்டத்திலும் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிய அளவில் ரன் குவிக்கும் முயற்சியாக இந்த ஆட்டத்தில் கைரான் போலார்ட் முன்வரிசையில் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் லசித் மலிங்கா சென்னையில் விளையாட முடியாது என்பதால், முனாஃப் படேல், மிட்செல் ஜான்சன், ஜஸ்பிரித் பூம்ரா ஆகியோரை நம்பியுள்ளது மும்பை.
இவர்களில் முனாப் படேல் கடந்த ஆட்டத்தில் 4 ஓவர்களில் 42 ரன்களை வாரி வழங்கியதோடு, விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.
மேலும் சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் படேலுக்குப் பதிலாக ரூ.5.3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட கிளன் மேக்ஸ்வெல் மற்றும் ஜேம்ஸ் பிராங்க்ளின், பிரக்யான் ஓஜா ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment