முழக்கம் நியாயமானதா? - பறுவதம் பாட்டி


 [இது 2012 ஆம் ஆண்டு தீபத்தில் வெளியான  உண்மைகளின் ஒரு அலசல். தற்போதும் இந் நிலை தொடர்வதால் மீள் பதிவு செய்யப்படுகிறது.]



அன்று பாடசாலையின் விடுமுறை என்பதால் விடிந்து நெடுநேரமாகியும் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன்.

அடுத்த அறையிலிருந்து தொலைபேசியின் அலறல் கேட்டு என் காதுகளை நீட்டிக்கொண்டேன் 

 நான் எதிர்பார்த்தது போல் ,மாமா வீட்டில் வாழும் அண்ணாமலைத் தாத்தாவின் தொலைபேசி அழைப்பேதான். பாட்டி  போனை ஸ்பீக்கரில் விட்டு பேசிக்கொண்டிருந்தது தெளிவாகக்கேட்டது.

புதினம் படிச்சியே பறுவதம்?”என்று அண்ணாமலைத் தாத்தா ஆரம்பித்துக்கொண்டார்.

எந்தப் புதினத்தை சொல்லுறியள்?”

இந்தியாவில டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தினமும் பெண்கள் கற்பழிக்கப்படும் தகவல்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி அளிக்கும் வகையில் வெளியானபடி உள்ளது. ஒரு காலத்தில ஆன்மீகத்தில அமிழ்ந்திருந்த நாடு இந்தியா. இப்ப அங்க நடக்கிற கேவலங்களை கேட்க கேட்க காதே கூசுது. அண்மையில கிடைச்ச  புள்ளி விவரங்கலின்படி  கடந்த 40 ஆண்டுகளில் நாட்டில் பாலியல் வன்புணர்ச்சி 800 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பது கவலையான சேதி.முன்பு எப்போதுமே இல்லாதவாறு, பெண்களுக்கு ஆபத்து நிறைந்த ஒரு நாடாக இந்தியா இப்போது விளங்குகிறது.” அப்பிடியெல்லொ பத்திரிகையிலை எழுதுறாங்கள்.

பாட்டி தொடர்ந்தாள்.

இந்தியாவில சிலபிரசித்தி பெற்ற IAS,IPS அதிகாரிகள், அமைச்சர்கள், வழக்கறிஞர்கள்,மருத்துவர்கள் ,chartered accountants நிகழ்த்தும் ஊழல்கள்,கயவாளித்தனங்கள்,பாலியல் குற்றங்கள் இவற்றை அசட்டை

செய்வதன் மூலம் குற்றவாளிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

திரைப்படங்களில் வரும், பெண்களை இழிவு படுத்தும் காட்சிகளை,காவல் நிலையத்தில் நடைபெறும் கற்பழிப்பு காட்சிகளையும் தொலைக்காட்சி “சீரியல்களில் வரும் “கணவன் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்தல்”,”ஒரு பெண், ஹிட்லரை விட மோசமான குணநலங்களுடன் தன் புகுந்த வீட்டில் அனைவரையும் பழிவாங்கி இரத்தம் பீச்சிட கொலை செய்தல்,கள்ளத் தொடர்புகள்,கடத்தல்கள்” ஆகிய காட்சிகளை வருடக்கணக்கில்,குழந்தை குட்டிகளுடன் வரவேற்பறையில் இருந்து ரசித்துப்பார்ப்பதன் மூலம் அக்குற்றங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன, ஊக்குவிக்கப்படுகின்றன.

இதே சானல்களில், செய்திகள் என்ற போர்வையில் ஒரு போலி சாமியாரும் ஒரு  பெண்ணும் நிகழ்த்தும் லீலைகள் ஒளிபரப்பு செய்யப்பட்டால் சிரித்து மகிழ்வதுடன்,அவரை தேடிச்சென்று கடவுளாய் வணங்கி குற்றங்களை ஏற்றுக்கொள்கிறோம்.

தொலைக்காட்சியில் சிறுமிகள் உட்பட சிறுவர்களை காதல்,மற்றும் கள்ளத்தொடர்புகள் தொடர்பான நாடக காட்சிகளில் நடிக்கச்செய்து அவர்களைப் பாராட்டி மகிழ்கிறோம்.

எனப் பலவழிகளில் முள்ளுச்செடி விதைகளை காலம் காலமாக விதைத்துக்கொண்டு அவை வளர்ந்து குத்துகிறது என இடும் முழக்கம் நியாயமானதா? இவற்றை எல்லாம் ஊக்குவித்து வளர்த்துக்கொண்டு அதன் பலன்களை கண்டு பொங்கி எழுவதில் என்ன பயன்?”

"நல்லாச் சொன்னாய் பறுவதம்"பாட்டியின் கருத்தில் அண்ணாமலைத் தாத்தாவும் இணைந்துகொண்டார்.

நானும் பாட்டியின் கருத்துக்களைச் சிந்தித்தவாறு மறுபக்கம் புரண்டு படுத்துக் கொண்டேன்.

                               --செல்லத்துரை-மனுவேந்தன்


2 comments:

  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Saturday, January 19, 2013

    பாரத பூமி புண்ணிய பூமி. அறநெறியும் பண்பாடும் மிக்க பூமி. இங்கேதான் ஞானச் செல்வம் அள்ள அள்ளக் குறையாமல் உள்ளது என நாம் போற்றுகிறோம் ஆனால் அதே நேரத்தில் சமஸ்கிரத புராணங்களையும் நம்புகிறோம் போற்றுகிறோம் .இந்த புராணங்கள் கடவுள்களின் கற்பழிப்பை நியாயப்படுத்தும் போது, பெண்கள் எப்படி இந்தியாவில் கற்புரிமையை பாதுகாக்கமுடியும்?இதை நாம் சற்று சிந்திக்க வேண்டும் அது மட்டும் அல்ல 'அர்த்த சாஸ்திரம்' (3,8) இல், ''சூத்திரப் பெண் உயர்சாதி ஆண்கள் இன்பம் அனுபவிப்பதற்கு உரியவள்"என்கிறது.

    விஷ்ணுவிற்கு துளசி பூஜை செய்கிற ஒவ்வொருத்தரும், ஒரு கற்பழிப்பை கொண்டாடுகிறார்கள்? அதுவும், அந்த பெண்ணின் தவறு என்னவென்றால், அவள் விஷ்ணுவின் பக்தையாம், மேலும் மிகுந்த பக்தியுடன் இருந்தாளாம். இதோ அந்த கதை.

    ஒரு ஊரில் ஜலந்தர்-பிருந்தா என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். பிருந்தா விஷ்ணு பக்தை.ஜலந்தர் சிவன் பக்தன் .இந்த விசித்திரமான விஷயத்தை கேள்விப்பட்ட நாரதர், அந்த குடும்பத்தில் சிறிது விளையாடிப் பார்க்க நினைத்தார். என்ன ஜலந்தர்?.நீ பின்பற்றும் சிவபக்தியால் சிவனுடைய மனைவி பார்வதி தேவியையே நீ அடையலாமே... எதற்கு இந்த பிருந்தாவுடன் போராடிக் கொண்டிருக்கிறாய். இந்த பிருந்தாவை விட அந்த பார்வதி எவ்வளவு அழகு தெரியுமோ?... என ஜலந்தரின் மனதில் பற்றவைத்து விடுகிறார் நாரதர். “சிவனுக்கு சாமவேதம் என்றால் உயிர். எங்கே சாமவேதம் ஒலித்தாலும் மயங்கி அந்தப் பக்கம் போய்விடுவார். நீ என்ன பண்ணு... சாமவேதம் பாராயணம் செய்பவர்களை பிடித்து நல்ல சத்தமாக சாமவேதம் ஒலிக்கச் செய்...அதனைக் கேட்டு சிவபெருமான் மயங்கியிருக்கும் வேளையில் கைலாயத்துக்கு சென்று காரியத்தை முடித்துவிடு ” இதைக் கேட்டு சிவன் லயித்திருக்க... நாரதர் கொடுத்த யோசனைப்படி பார்வதியை போய் கட்டிப்பிடித்து விட்டான் ஜலந்தர், ‘ஸ்வாமீ’ என ஏழுகடல் கொந்தளிக்க கத்துகிறாள்.

    கைலாயத்தில் இப்படி நடக்க ...

    ஜலந்தரின் வீட்டுத்தோட்டத்தில்?...

    கணவனைக் காணாது மனைவி பிருந்தா தனித்துத் தவித்திருக்கிறாள். தனது பரம தெய்வமான விஷ்ணுவிடம் தன் கணவன் எங்கே என வேண்டுகிறாள்.இதைப் பார்த்த விஷ்ணு...

    நமது பக்தைக்கு நாம் ஏன் சந்தோஷம் தரக்கூடாது? தன் கணவனை காணோமே என பாவம் தேடிக்கொண்டிருக்கிறாள். நாமே ஜலந்தராக உருவெடுத்து அவளை மகிழ்ச்சிப்படுத்துவோம் என முடிவெடுத்து...

    கணவன் ஜலந்தர் போலவே உருவம் எடுத்து பிருந்தாவை நெருங்கினார் விஷ்ணு.....

    தன் கணவர் ரூபத்தில் வந்திருந்த விஷ்ணுவை கட்டிப்பிடித்துக் கொண்டாடினாள். இருவரும் தோட்டத்தில் ரொம்ப இஷ்டமாக இழைந்து கொண்டிருக்கும் நேரத்தில்...

    நெருக்கமாக இருக்கும் அவர்களுக்கு நெருக்கமாக வந்து பொத்’தென வந்து விழுந்தது ஒரு தலை. ரத்தம் கொட்ட கழுத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட அந்தத்தலை, ஜலந்தரின் தலை....

    வேதத்தின் மயக்கத்தை... பார்வதியின் கூக்குரல் கலைக்க, ஓடிப்போய் பார்த்தார் சிவன். தன் மனைவியை இன்னொருவன் பலாத்காரப்படுத்துவதா?... என ஜலந்தரின் தலையை சீவியெறிந்தார்.அந்த தலையே இந்த தலை!

    பார்த்தாள் பிருந்தா...தன உடலோடு [ஒன்று இணைந்தவன்] விழுந்தவன் கணவனா? இல்லை தலைமட்டும் விழுந்தவன் கணவனா? சந்தேகம் அதிகரிக்க...

    அப்போது திடீர் என உடலோடு கூடிய ஜலந்தர் மறைந்து விஷ்ணுவாகிறார். ‘நான்தான் பக்தையே...’ என அறிமுகம் கொடுக்கிறார்.

    இதைக்கேட்டு பொங்கியெழுந்த பிருந்தா...’அடப்பாவி... பக்தையை இப்படி பண்ணிவிட்டாயே? என் கணவன் ரூபத்தில் வர நீ யார்?என்கிறாள் ?

    இந்த கற்பழிப்பை எவரும் கண்டிக்கவும் இல்லை? விஷ்ணுவை தூக்கி எறியவும் இல்லை ?

    இப்படி பல பல .இவையை ,இந்த புராணங்களை இன்னும் போற்றி வாழும் இந்த சமுதாயத்தில் எப்படி மாற்றம் ஏற்படும் ?இதை புராணமாக கூற, நாம் கேட்டு மௌனம் சாதித்து இன்னும் அங்கீகரிக்கின்றோம்? இப்படி அங்கு நடக்கிற கேவலங்களை கேட்டு கேட்டு காது பழகிவிட்டது.இப்படி பெண்களை இழிவு படுத்தும் காட்சிகள் ஏராளம் .

    "இந்த முள்ளுச்செடி விதைகளை காலம் காலமாக விதைத்துக் கொண்டு அவை வளர்ந்து குத்துகிறது என இடும் முழக்கம் நியாயமானதா?

    இவற்றை எல்லாம் ஊக்குவித்து வளர்த்துக் கொண்டு அதன் பலன்களை கண்டு பொங்கி எழுவதில் என்ன பயன்?”

    என்ற செல்லத்துரை-மனுவேந்தன் அவர்களின் கேள்வி சிந்தனையை தூண்டக்கூடியதே!

    ReplyDelete
  2. ஏனோ தெரியவில்லை, இந்து சமயத்தில் மிகவும் கேவலமான கதைகள் நிறையவே படைக்கப்பட்டிருக்கின்றன. கடவுள்மாரின் ஈனமான பிறப்பு முறைகள், ஆண் - ஆண் சேர்க்கைகள், ஆண் -மிருக சேர்க்கைகள், பல பெண்களுடன் புணர்வுகள், பெண்களை ஏமாற்றிப் புணருதல்,தெய்வங்களுக்குள் நடைபெறும் உக்கிரமான சண்டைகள், சாதிப்பிரிவுகள், முன் பிறப்பு கர்ம வினைகள் என்று சமுதாயத்தைக் கெடுக்கும் பல படைப்புகளை, 'தெய்வீக கதைகள்' என்று போற்றிப் பாராயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். மிச்சம் இருக்கும் இதர ஆக்கங்களில் பலவும் கடவுள்மாரை, அவர்களின் உச்சி குளிரச் செய்வதற்கான வழிமுறைகள்தான் பல உள. இவற்றிற்கெல்லாம் ஞான முத்தி அடைந்த ஆன்மீகவாதிகள், அறிவிலிகளைப் பார்த்து நகைத்து, பல உயரிய தத்துவ விளக்கங்கள் தருவார்கள்.
    ஆங்காங்கு இருக்கும் நல்ல விடயங்களை விடுத்து கெட்டவைகளைக் களை நீக்குவதற்கு எவருமே துணியமாட்டார்கள், ஏனெனில் அது தெய்வ குற்றம் ஆகிவிடும் என்பதால்!

    ReplyDelete