21-12- 2012
இல் உலகம் அழியாது!
பலர் விஷமப் பிரசாரம் செய்வதுபோல 21-12- 2012 இல் உலகம் அழியவேமாட்டாது என்று NASA சந்தேகமே இன்றிக் கூறியுள்ளது.
சும்மா ஒரு மனிதன் உண்டாக்கிய கலண்டரில் ஒரு திகதி இலக்கங்களின் வடிவம் ஒரு 'மாதிரி' வருபோதும், அல்லது ஒரு இனத்தினரின் காலக் கலண்டரின் சுற்றில் ஒரு 'முடிவு' வரும்போதும் இப்படியான புலுடாக் கதைகளை அவிட்டு விட்டுக்கொண்டே இருப்பதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்.
முதலில் சுமேரியர்கள் நிபிறு என்னும் (இல்லாத) கிரகத்தால் 2003 இல் பூமி அழியும் என்று சொல்லி, அது நடைபெறாது போக, ஒரு சிலர் அதை 2012 க்கு தள்ளிப் போட்டனர். இந்த நாள் மாயன் கலண்டர் சுற்றின் முடிவுடன் ஒத்துப் போனதால் இவர்கள் இதுவேதான் உண்மையான அழிவு நாள் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.
ஆனால், நாசா இதை முழுக்கவும் மறுக்கின்றது.
நமது பூமி 4 பில்லியன் வருடங்களாக மிகவும் சேமமாகவே இயங்குகிறது. அழிவது என்பது ஒரு நாலு வருடத்திலோ அல்லது நாலு நிமிடத்திலோ நடக்கின்ற விடயம் அல்ல. இன்னும் பல பில்லியன் வருடங்களுக்கு பவுத்திரமாகவே இருக்கும்.
இதற்கு அவர்கள் காட்டும் அழிவுக்கான காரணிகளுக்கு நாசா கூறும் விளக்கப் பதில்கள்:
*மாபெரும் கோளின் உக்கிரமான மோதலால் உலகம் அழியும்:
அவ்வாறு நடைபெறும் என்றால், அக்கோள் திடீரென வானில் முளைக்க இயலாது.
அதன் வருகை பல வருடங்களுக்கு முன்பே காணக்கூடியதாக இருந்திருக்கும். அப்படி ஒரு துளி அடையாளமும் விண்வெளியில் காணமுடியவில்லை.
* பூமியின் காந்த வடமுனை தென்புறமாக நகர்ந்து கொண்டிருப்பதால், பூமியின் சுழற்ச்சி நின்று, மறுபக்கமாய்ச் சுற்றி உலகம் அழியும்:
இந்தக் காந்தமுனை நகர்வு ஒவ்வொரு 400000 - 800000 வருடச் சுற்றிலும் நடந்துவரும் ஓர் இயற்கைச் சம்பவம். இதனால் திசைக்காட்டிக் கருவிதான் வளம் மாறிக் காட்டுமே ஒழிய பூமி திசை மாறிச் சுற்றாது.
*சூரிய எரி பொழிவால் உலகம் அழியும்:
சூரிய சுவாலையானது 11 - 12 வருடங்களுக்கு ஒரு முறை கூடுதலாக இருக்கும். அடுத்தது 2013 - 2014 இல் வரும். அது தொலைதொடர்பு சாதனங்களுக்குச் சிறிய ஒரு தடங்களை ஏற்படுத்துமே ஒழிய, பெரும் நாசம் விளைவிக்கும் அளவுக்கு எந்தப் பொழிவும் இருக்காது.
*கிரகங்கள் ஒரே கோட்டில் வருவதால் மோதுப்பட்டு உலகம் அழியும்:
இந்த ஆண்டில் அப்படி ஒரு சேர்க்கையும் இல்லவே இல்லை. அப்படி (அண்ணளவாகவே)) சேர்ந்து நின்ற எந்தனையோ ஒவ்வொரு 500 வருடகால சுழற்சிச் சந்தர்ப்பங்களிலும் எந்தவொரு அழிவும் ஏற்பட்டதில்லை. இந்தக் காலத்தில், சூரியனும் பூமியும் மட்டும் பால்வெளி மண்டல மையத்தோடு நேரில் நிற்கும். இது ஒவ்வொரு வருடமும் நடக்கும் சாதாரண விடயம்.
* சீறிக்கொட்டும் எண்ணற்ற எரிகற்களால் அழியும்:
சந்தர்ப்பமே இல்லை. பூமியைப் பலதடவை வால் வெள்ளிகளும், சிறு, சிறு விண் கற்களும் தாக்கியிருக்கின்றன. பெரும் அழிவு ஒன்றும் ஏற்பட்டதே இல்லை. 65 மில்லியன் வருடங்களுக்கு முன்புதான் ஒருமுறை மிகப்பெரிய தாக்கல் காரணமாக டைனோசரஸ் என்ற உயிரினமே முழுவது முற்றாக அழிந்தன. இப்போது அப்படி ஒரு நிகழ்வுக்கு ஒரு சாத்தியக்க்கூறுகளே இல்லை.
விஞ்ஞானிகள் கழுகுக் கண்கள் உள்ளவர்கள். அவர்கள் பார்வையிலிருந்து விண்வெளியில் உள்ள எந்த ஒரு பொருளும் தப்ப இயலாது. இதற்குச் சில உதாரணங்கள்:
140 மீ. அளவுள்ள ஒரு சிறிய விண்கல் 05 -02 -2040 பூமியைத் தாண்டிப் போகுமாம். அதேபோல கடந்த 28 /02, 06 /03, 20 /03 , 16/05 , 15/06 திகதிகளில் பயணம் செய்த சிறு, சிறு விண் கற்களின் வருகையை முன்கூட்டியே தெரிவித்து இருந்தனர்.
ஒருமுறை கூகிள் பண்ணிப் பாருங்கள்; இந்த வருடம் மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் உலகம் அழியும் என்று சொல்லும் வெவ்வேறு சாரர் இருந்து கொண்டே இருக்கிறார்கள்.
ஆதலால், இந்த உலகம் அழியும் என்று கூறுவதெல்லாம் ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதற்கான புரளிக் கூத்துகளே ஒழிய அதில் ஒருவித உண்மையே இல்லை. இவை, மிகையூட்டி எடுக்கப்படும் திரைப் படங்களுக்கு வேண்டுமென்றால் பொருந்தலாம்.
உலகம் அழிந்தாலும் உயிருடன் இருக்கவிருக்கும்
--செல்வத்துரை சந்திரகாசன்