பாடுபட்டுத் தேடிப் பணத்தைச் சேகரித்து, சேர்த்து வைத்துக் காத்திருக்கும் மானிடரே கேளுங்கள்!
வயதோ போகின்றது! உயிரோ இன்றும் போகலாம், நாளையும் போகலாம், என்றும் போகலாம்! ஆனால், நீங்கள் நாயோட்டம் ஓடி, இரவும், பகலும் சளைக்காது உழைத்துக்கொண்டு இருப்பதுதான் ஏன்? நீங்கள் சேமித்த பணத்தை, நீங்கள் அனுபவிக்க நேரமே இல்லாமல் வேறு யாருக்காக இந்த ஆக்கிரோஷமான நாயோட்டம்? ஓடி, உழைத்து, ஆனால் செலவு செய்யாது கடைசியில் நீங்கள் ஓயும்போது, நீங்கள் அச்சமயம் செலவு செய்து அனுபவிக்க விழைந்தால், உங்கள் உடலும் இடம் கொடுக்காது, ஆர்வமும் அற்றுப் போய்விடும். நீங்கள் ஒரு ஜடப்பொருளாகி, விரக்தியுற்ற மனநிலையில், நொட்டி நொடிந்துபோய்ப் படுத்திருப்பீர்கள். ஏன்தான் ஒரு 20 வருடங்களுககு முன்பே அனுபவித்திருகலாமே என்று அந்த முதிய வயதிலே மிகவும் மனவேதனை அடைவீர்கள்.
ஆதலால், வயது போய்க்கொண்டே இருக்கும் உங்கள் யோசனைக்குச் சில சிந்தனைகள்:
* உழையுங்கள், ஆனால் அதேவேளை, உங்கள் சொந்த விருப்புகள், ஓய்வுகள், விடுமுறைகள், பயணங்கள் என்பனவற்றுக்கும் அப்பப்பவே பணத்தைச் செலவு செய்யுங்கள்.
*உங்கள் பிற்காலத்திற்கு என்று சேர்த்துச் சேர்த்து வைத்து,உங்கள் தற்காலத்தினை இழந்து வீணாக்காதீர்கள். அளவோடு சேருங்கள்; மகிழ்வோடு வாழுங்கள்.
* பிள்ளைகளுக்கு என்று சேர்க்காதீர்கள்.அவர்கள் நொண்டியோ, குருடோ, அறிவிலிகளோ அல்ல. நம்மிலும் பார்க்கக் கெட்டிக்காரர்கள், வல்லமை படைத்தவர்கள். அவர்களுக்கு நியாயமான கல்வி வசதியைச் செய்யலாம். ஆனால் இதுதான் படி என்று நிர்பந்திக்க நீங்கள் யார்? அரசு கல்வி கடன் கொடுத்தால் அவர்கள் அதை எடுத்து பின்னர் கட்டட்டும். நீங்கள் அவர்களுக்கு என்று விட்டுச் செல்லும் ஒவ்வொரு வெள்ளியும், அவர்களைச் சோம்பேறிகள், ஒட்டுண்ணிகள், ஊதாரிகள், தண்டச்சோறுகள், ஆடம்பரிகள், குடிகாரர், போதைபொருள் அடிமைகள் ஆக்கிவிடும்.
* சட்டப்படி பெற்றோர் விட்டுச் செல்வது பிள்ளைகளுக்குச் செல்லும்; ஆனால் பிள்ளைகள் சொத்துக்கு நீங்கள் உரிமைகோர இயலாது. ஆகவே, உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கொத்தடிமைச் சேவகம் செய்ய வேண்டாம்.
* நீங்கள் மறைந்ததும் உங்கள் கதை முடிந்து விடும். நீங்கள் புதைத்து வைத்திருக்கும் செல்வம் உங்கள் மரணத்தின் பின் உங்களுக்கு ஒரு பிரஜோசனமும் தரமாட்டா.
* பேராசை கொண்டு பணம் சேர்க்கும் அவாவில் சட்டவிரோதமான செயல்கள் மூலம் சேர்க்கும் பணம் நிலைக்கா. அவப்பெயர்தான் நிலைக்கும். நல்வழியில் சேமியுங்கள்; உங்கள் தேவைக்கு மட்டும்!
* நாலு வீடுகளை வைத்துக்கொண்டு வங்கிக்கடன் கொல்லுதே என்று அழுது வடிந்து நாயாய் ஓடி உழைக்க வேண்டாம்.உங்களுக்குத் தேவை ஒரே ஒரு வீடுதான். மிகுதி எல்லாம் கொழுப்பின் விளைவுகளே.
*அளவுக்கும் அதிகமான உடைகள், நகைகள், மோட்டார் வண்டிகள், பகட்டுகள் எல்லாம் இருந்தால் போல உங்களை உயர்ந்தவர் என்று ஒருவரும் நினைக்க மாட்டார்கள். செருக்கும், திமிரும் பிடித்த பேராசைக்காரர் என்றுதான் ஒதுக்குவார்.
* பல கோடி இருப்பதால் ஒரு 100 தொன் சாப்பாட்டினை உங்கள் வீட்டுக்கு வரைவழைத்தாலும் நீங்கள் சாப்பிடப்போவது ஒரு அரைகிலோ மட்டும்தான். மீதம் எல்லாம் தேவையற்றுக் குப்பைக்குள் போகும். பல அடுக்குகளைக்
கொண்ட வெவ்வேறு அரண்மனைகள் இருந்தாலும் நீங்கள் படுக்கப் போவது ஒரே ஒரு கட்டிலில் தான். பணம் இருக்கின்றது என்று 4 விமானங்களையும், 8 ஹெலிஹோப்டர்களையும் வாங்கியா வீட்டில் தரித்து வைப்பீர்கள்?
* ஆரோக்கியத்தினை இழந்து சேர்க்கும் பணம், இழந்த ஆரோக்கியதினைத் திரும்பத் தரமாட்டா. போட்டிபோட்டுச் சேர்க்கும் பணத்தினால் மன உளைச்சல் அதிகரித்து மன ஆறுதல் அற்றுத் திரிவீர்கள். கவலை கொண்டு அலைவீர்கள். பைத்தியம் பிடித்ததுபோல் புலம்புவீர்கள்.
ஆதலால்,
* நேர்மையான வழியில் உழையுங்கள். அதுவே போதும். எல்லாக் கள்ள வழிகளும் துன்பத்தையே தரும்.
* உங்கள் தேவைக்கேற்பப் போதிய அளவுமட்டும் உழையுங்கள், சேமியுங்கள். உங்களுக்குச் செலவும் செய்யுங்கள்.
* மற்றவரைப் பார்த்துப் போட்டி போட்டு அலையாதீர்கள். அவர்கள் மடையர்கள் என்றால் நீங்களுமா?
* உங்கள் பின் சந்ததியாருக்கென்று விட்டுச் செல்லாதீர்கள். அது உங்கள் கடமையே இல்லை. நீங்கள் படி அளக்கும் கடவுளும் இல்லை.
* உங்கள் தேவைகள், ஓய்வுகள், உல்லாசப் பயணங்கள் என்பனவற்றையும் ஒழுங்காகக் கவனித்துக் கொள்ளுங்கள்; உங்களுக்கு இயலுமாக இருக்கும்பொழுதே.
* மனதுக்குச் சந்தோசம் தரும் மனிதநேயப் பணிகளுக்கு உடம்பாலும், பணத்தாலும் உதவுங்கள். இப்பிறப்பில் பலன் கிடைக்க, மறு பிறப்புக்காக அல்ல.
* தேவைப்படும்போது, தேவையானவர்களுக்கு அவர்கள் உயிருடன் இருக்கும்போது தானம் செய்யுங்கள். இறந்தபின் அல்ல. இறந்தபின் வழங்கினால் இலாபப்படுபவர்கள் அவர்கள் அல்ல. அவர்கள் சாவை உண்டாக்கியவர்களும், உங்களுக்கு வேண்டப்படாதவர்களாகவும் இருக்கலாம்.
* உங்கள் சுகம். சந்தோசம் என்பனவற்றை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ளுங்கள். அளவுக்கு மிஞ்சிய பணம் அல்லலைத்தான் தரும்.
* உங்கள் ஆத்மா சந்தோசமே உருவானது. எந்நாளும், நல்ல மன நிலையில் சந்தோசமான விடயங்களை நினைத்தும், செயல்படுத்தியும் ஆனந்தம் அடையுங்கள்.
* முடிந்த காலமோ, வரும் காலமோ உங்கள் கையில் இல்லை. அக்காலங்களை எண்ணிக் கவலைப்படாமல் உங்கள் கையில் இருக்கும் நிகழ் காலத்தை ஆனந்தமாக்குங்கள்.
* நல்ல மனமே நோய் தீர்க்கும் மருந்து. சந்தோஷ மனம் நோயை இன்னும் விரைவாக மாற்றும். நல்ல + சந்தோசமான மனம் இருந்தால் நோய் கிட்டவும் நெருங்காது.
* நல்ல மனநிலை, இளம் வெயிலில் உடற்பயிற்சி, சத்தான உணவு, தேவையான அளவு உயிர்ச்சத்து உங்களை நீண்ட காலம் சந்தோசமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வைக்கும்.
* நல்வாழ்வுக்குத் தேவையான தியானம், யோகாசனம் ஒழுங்காகச் செய்யுங்கள்.
* நல்லோர்பால் சேருங்கள், நல்லதையே நினையுங்கள், நல்லதையே செய்யுங்கள். நீங்கள் சந்தோஷ உச்சத்தை அடைவீர்கள்.
* விஷமிகள் பால் நெருங்காது ஒதுங்கி இருங்கள். நிம்மதி அடைவீர்கள்.
ஒன்றைமட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 60 வயது என்று வந்துவிட்டாலே,
60 க்கு மேல் உயிருடன் இருக்கும் ஒவ்வொரு வருடமும் எமக்குக் கிடைக்கும் போனஸ்.
அப்படியே,
70 க்கு மேல் ஒவ்வொரு மாசமும்,
80 க்கு மேல் ஒவ்வொரு கிழமையும்,
90 க்கு மேல் ஒவ்வொரு நாளும்,
100 க்கு மேல் ஒவ்வொரு மணியும்,
110 க்கு மேல் ஒவ்வொரு நிமிடமும்
120 க்கு மேல் ஒவ்வொரு வினாடியும் எமக்குக் கிடைக்கும் போனஸ் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
நாம் உயிரோடு இருக்கும்போதே, இளமையாய்த் திரியும் போதே, நிம்மதியான சந்தோஷ வாழ்வுக்கு, இந்த உண்மைகளை உணர்ந்து உருப்பட்டு எமக்கும் எம்மை சார்ந்தோருக்கும் பிரயோசனமாக வாழ்வோமாக!
-செல்வத்துரை சந்திரகாசன்
அருமையாகச் சொன்னீர்கள். எங்களை விட எங்கள் பிள்ளைகள் எவ்வளவோ புத்திசாலிகளாக இருக்கிறார்கள் ,ஆகவே அவர்களுக்கு நீங்கள் பணம் சேர்த்து வைக்க வேண்டிய தேவை இல்லை என்று. உங்கள் வாழ்வை நீங்கள் வாழுங்கள் ,பிள்ளைகள் அவர்களின் வாழ்வை உங்களை விட மிக சிறப்பாக திட்டமிட்டு வாழுவார்கள் என்று.இது தமிழரின் சாபமோ என்னவோ தெரியவில்லை.குளிர் காய்வதற்காக சுள்ளி பொறுக்கி சேகரித்துக் கொண்டேயிருக்கும் ஒருவன் ,தனக்கு குளிர் காய நேரமேயில்லை ,சுள்ளி பொறுக்குவதிலேயே நேரம் போய்விடுகிறது என்று சொன்னானாம்.
ReplyDeleteஅதே போல தான் எம்மவர் பணம் சேகரிப்பும் இருக்கிறது போலும். பாராட்டுக்கள் .
என்னுடன் பேராதனையில் படித்த நண்பன் சந்திரகாசன் கூறியவைக்கு ஒரு எடுத்துக்கட்டாக மூன்று சங்க
ReplyDeleteபாடல்களை கீழே தருகிறேன்.
ஒன்று:
குறுந்தொகை 283[சேர மன்னன் பாலைபாடிய பெருங்கடுங்கோ]
உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவெனச்
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்
சென்றனர் வாழி தோழி யென்றும்
கூற்றத் தன்ன கொலைவேல் மறவர்
ஆற்றிருந் தல்கி வழங்குநர்ச் செகுத்த
படுமுடை பருந்துபார்த் திருக்கும்
நெடுமூ திடைய நீரில் ஆறே.
குறிப்பு:பாட்டனார் தேடி வைத்த பொருளைச் சிதைப்போர் உயிரோடு உள்ளவராகக் கருதுவது நம் தமிழர் மரபில் இல்லை என்பதாகும். தாமே தம் முயற்சியால் பொருள் ஈட்டாமல், முன்னோர் ஈட்டி வைத்துள்ள
செல்வத்தைச் சிதைப்பவர்கள் செல்வமுடையோர் எனச் சொல்லப்பட மாட்டார்கள். நம் பெற்றோர் சேர்த்த செல்வத்தை நாம் செலவு செய்யும் போது, நமக்கு அந்த செல்வத்தின் மதிப்பை நாம் உணராமல்ப் போகிறோம்.தன் முயற்சியால் தேடாமல் வாழ்வது, இரந்து வாழ்தலை விட இழிந்தது என்று தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது
இப்பாடல் வழியாக மேலும் "பகுத்துண்டு வாழ்தல் வேண்டும்" "நாம் உழைத்து,அதில் கிடைக்கும் செல்வத்தையே நாம் பயன்படுத்தி, அடுத்தவருக்கும் உதவி செய்யப் பயன்படுத்த வேண்டும்" என்பதயும் அறியமுடிகிறது
இரண்டு:
அகநானூறு 151 [காவன் முல்லைப் பூதனார்]
தம் நயந்து உறைவோர்த் தாங்கி தாம் நயந்து
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ
நகுதல் ஆற்றார்நல்கூர்ந்தோர்! என
மிகுபொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது
ஆபமன் வாழி தோழி கால் விரிபு
உறுவளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக்
கலைமான் தலையின் முதல் முதற் கவர்த்த
கோடல் அம் கவட்ட குறுங்கால் உழுஞ்சலி
தாறு சினை விளைந்த நெற்றம் ஆடுமகள்
அரிக் கோற் பறையின் ஐயென ஒலிக்கும்
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்
கள்ளி முள் அரை்ப பொருந்தி செல்லுநர்க்கு
உறுவது கூறும் சிறு செந் நாவின்
மணி ஓர்த்தன்ன தெண்குரல்
கணிவாய் பல்லிய காடு இறந்தோரே!
குறிப்பு: சங்ககாலத் தலைவன் ஒருவனுடைய சிந்தனை இப்படி இருக்கிறது
பணம்[பொருள்] எதற்கு?
அவரை விரும்பி வாழ்வோருக்கும், அவரால் விரும்பப்படுவோருக்கும், உறவினர்களுக்கும், கெழீஇ வாழும் நண்பர்களுக்கும், நகைமுகம் காட்டமுடியாமல் வறுமையில் வாடுவோருக்கும் நல்கி அவர்களை வாழவைப்பதற்குப் பொருள் வேண்டுமாம்
இதனால் வரும் மகிழ்ச்சி ஒன்று,தாம் விரும்பும் சுற்றத்தாருடன் கூடிக்கலந்து இன்புறும் மகிழ்சி மற்றொன்று.இவ்விரண்டு மகிழ்ச்சிகளின் திறவுகோல் பொருள்!அதனால் பொருளைத் தேடவேண்டும்"
அதாவது தன்னலத்தோடு பொதுநலச் சிந்தனையும் இங்கு கலக்கிறது
மூன்று:
புறம் - 189
"தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே;
அதனால் செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே''
[மதுரை கணக்காயர் மகனார் நக்கீரனார். ]
குறிப்பு:எல்லோருக்கும் அடிப்படையானது உணவு, உடை, உறைவிடம்…
போதும் என்று மனிதன் சொல்வது உணவுக்கு மட்டுமே!
மானம் காக்கவே ஆடை அணிகிறோம்!
உடுக்கப்படுபவை அரை ஆடை, மேலாடை என இரண்டே!
இவை போல பிற உடல், உள்ளத் தேவைகளும் ஒன்றாகவே இருக்கும்.
உயிர்கள் யாவுக்கும் உணர்வுகள் பொதுவானது (உண்பது நாழி; உடுப்பவை இரண்டே)
இந்த செயல்கள் பணக்காரனுக்கும் ஏழைக்கும்[அரசனுக்கும், ஆண்டிக்கும்] பொதுவானது
பெற்ற செல்வத்தைக் அடுத்தவருக்குக் கொடுப்பதே சிறந்த அறமாகும்.
கொடுத்து வாழ்வோர் இறப்புக்குப் பின்னரும் வாழலாம் ( செல்வத்துப் பயனே ஈதல்)
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பரம்பரை சொத்தால் மாண்டோர் அதிகம்.தற் காலத்தில் இப்படியும் நடக்கிறது.வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தில் ஆடம்பரம் காட்டிக்கொண்டு தம் கல்வியை இழந்து ,தொழில் முயற்சியை மறந்து எதிர் காலத்தை சுத்த சூன்யமாக்கிக் கொண்டோர் பலர்.
Delete