தொழில்நுட்பம்


புதுமையான கண்ணாடி!:- அதிகாலை வேளையில் மூக்குக் கண்ணாடியில் புகை போலப் படியும் பனி, அதை அணிவோருக்குத் தொந்தரவையும், எரிச்சலையும் ஏற்படுத்தும்.
 இனி அம்மாதிரி சாதாரணக் கண்ணாடிகளுக்கு விடை கொடுத்துவிடலாம். இப்போது, ஈரப்பதமான இடங்கள், நேரங்களில் புகை போல பனி படியாத மூக்குக் கண்ணாடியைத் தயாரித்திருக்கிறார்கள். இது, எப்படிப்பட்ட காலநிலையிலும் தெளிவாகவே இருக்கும்.
 `ஆப்டிபாக்எனப்படும் இந்த கண்ணாடியில் ஒரு விசேஷப் பூச்சு அமைந்திருக்கிறது. இது தண்ணீரை கூடுதல் ஈர்ப்பாகக் கவரும். ஆனால் கண்ணாடியில் பனி போல படர விடாமல், கண்ணுக்குத் தெரியாத படலமாக மாற்றிவிடும். எனவே கண்ணாடியில் ஈரப்பதம் பட்டாலும் அது தெளிவாகவே இருக்கும் என்கிறார்கள் இதன் தயாரிப்பாளர்கள்.
 இதை உருவாக்கியிருக்கும் பிரெஞ்சு நிறுவனமான எசிலார், சமையல் கலைஞர்கள், ஓட்டப்பந்தய வீரர்கள், சைக்கிள் வீரர்கள், முகமூடி அணியும் மருத்துவ நிபுணர்கள் போன்றவர்களுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும் என்று கூறுகிறது.
 கண்ணாடி மூலம் பார்ப்பது இயற்கைப் பார்வைக்கு இணையாக இருக்கும் வகையில் செய்வதற்கு எங்கள் ஆராய்ச்சியாளர்கள் உழைத்து வருகிறார்கள். அந்த நோக்கில் `ஆப்டிபாக்ஒரு முக் கியமான மைல்கல்என்கிறார், மேற்கண்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மைக் கிர்க்லி.
பனி எதிர்ப்புப் பூச்சைக் காக்க இந்த கண்ணாடியில் ஒவ்வொரு வாரமும் ஒரு வேதித் திரவத்தை `ஸ்பிரேசெய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook மூலம் வாக்காளர்களை பதிவு செய்யும் புதிய நடைமுறை:
பிரபல சமூக இணையத்தளமான பேஸ் புக் மூலம் வாக்காளர்களை பதிவு செய்யும் புதிய நடைமுறை ஒன்று அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
 அடுத்த வாரம் முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரலாம் என அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
 அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் முதல் முறையாக இந்த திட்டம் அமுலுக்கு வரவுள்ளது.
 வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் பிறந்த திகதி உள்ளிட்ட விபரங்கள் மாத்திரமே சமூக இணையத்தளமான பேஸ் புக் ஊடாக பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.
 இந்த நடைமுறையை ஏனைய மாநிலங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு குறித்த மாநிலங்களின் சட்டசபையின் அனுமதி பெறப்பட வேண்டியுள்ளது.
 எனினும் இணையத்தளம் மூலம் வாக்காளர்களின் பெயர் விபரங்கள் திரட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சூரிய மின்சக்தியில் பறக்கும் விமானம் சோதனை ஓட்டம்:
சூரிய மின்சக்தியில் பறக்கும் Solar Impulse விமானம் ஸ்பெயினில் இருந்து மொராக்கோ நாட்டுக்கு நேற்று சோதனை ஓட்டமாக புறப்பட்டது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த சாகச நிபுணர் பெர்னாட் பிக்கார்ட். வயது 54. சூரிய மின்சக்தியில் விமானத்தை இயக்குவது அவரது குறிக்கோள். சுவிஸ் நாட்டில் இருந்து மே மாதத்தில் அவரது சோலார் இம்பல்ஸ் விமானம் ஸ்பெயின் வந்தது. அங்கிருந்து 2500 கி.மீ. தூர மொராக்கோ நாட்டின் தலைநகர் ரபாட் நகருக்கு நேற்று விமானத்தில் கிளம்பினார் பெர்னாட். விமானத்தின் மேல் பகுதி முழுவதும் சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றும் சோலார் செல்கள் பொருத்தப்பட்டுள்ளன. விமானம் 11800 அடி உயரத்தில் பறக்கும் . ஒருவர் அமரக்கூடிய இந்த விமானத்தின் நீண்ட தூர பயணம் வெற்றிகரமாக அமைந்தால் எதிர்காலத்தில் சூரிய சக்தி விமான போக்குவரத்துக்கான கண்டுபிடிப்புகள் முன்னேற்றம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்வெளிக்கு பொருட்களைக் கொண்டுசெல்லும் முதலாவது தனியார் விண்கலம்:
விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்குத் தேவையான பொருட்களை கொண்டுசெல்லும் விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.
இந்த விண்கலம் கலிபோர்னியாவைச் சேர்ந்த SpaceX தனியார் நிறுவனத்தினால் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 விண்வெளிக்கு பொருட்களை அனுப்பி வைப்பதற்காக தனியாரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள முதலாவது விண்கலமாக இது கருதப்படுகின்றது.
 அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுகளின் வரலாற்றில் இது முக்கியமான ஒரு விடயமாக அமைந்துள்ளது.
 விண்வெளி வீரர்களுக்கு வெளி நபர்களால் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

0 comments:

Post a Comment