ஆன்மீகம்-இல்லை/இருக்கிறது


ஆண்டவன் பிரச்சனை
இருக்கிறது என்பதுவும் பிரச்சனையில்லை
இல்லையென்பதுவும் பிரச்சனையில்லை
இருக்கிறது என்ச் சொல்லிப் பிழைப்பதுவும்
இல்லையெனச் சொல்லிப் பிழைப்பதுவும்தான்
இப்போது இங்கே பிரச்சனை

நம்புவதும் ஒன்றும் பிரச்சனையில்லை
நம்பாததும் ஒன்றும் பிரச்சனையில்லை
நம்புபவன் நம்பாதவனை முட்டாள் என்பதுவும்
நம்பாதவன் நம்புபவனை முட்டாள் என்பதுவும்தான்
இப்போது இங்கே பிரச்சனை

கோவில் சன்னதி பக்தி முதலான
நம்பிக்கைகள் கூட பிரச்சனையில்லை
நம்பிக்கைக்கு பாத்திரமாய் இருக்கவேண்டியவனே
சன்னதிக்குள் லீலைபுரிவதே பிரச்சனை

பகுத்தறிவு மூட நம்பிக்கை ஒழிப்பு முதலான
பிரச்சாரங்கள் கூட பிரச்சனையில்லை
பிரச்சாரம் செய்பவனே தன் வீட்டிற்கு அது
பொருந்தாது என்பதுதான் பிரச்சனை

போற்றிப் புகழ்ந்தால் அள்ளி வழங்கவோ
தூற்றித் திரிந்தால் தீமை புரியவோ
ஆண்டவன் மனிதன் இல்லை
அவன் கதிரவனைப் போல் பொதுவானவன்

நோயுள்ளவனை நடுங்கச் செய்தும்
பலசாலியை மகிழச் செய்தும்  போகும்
தென்றல் இரண்டாக இல்லை
அதுவும்  நிலவைப் போல் பொதுவானதே

மொத்தத்தில்
பிரச்சனைகள் எதுவும்
ஆண்டவனால் சிறிதும் இல்லை
சித்தத்தில்
இதனைக் கொண்டால் இங்கே
இத்தனை பிரச்சனை இல்லை
---------- Ramani

0 comments:

Post a Comment