காதற்ற ஊசியும்
வாராதுகாண் கடைவழிக்கே...
பட்டினத்தார் என்று அழைக்கப்படும்
பட்டினத்து சுவாமிகளின் வாழ்க்கைப் பாதையினை ஒரேயடியாக மாற்றிப் போட்ட அற்புத
வார்த்தை இது. வணிகர் குலத்தில் பிறந்து பெரும் செல்வந்தராய் வாழ்ந்து வந்த இவரை
இல்வாழ்வைத் துறந்த மெய்ஞ்ஞானியாய் மாறச்செய்த அபூர்வ சக்தி கொண்ட வார்த்தை இது.
அப்படி இந்த வார்த்தையில் என்ன தான் கூறப்பட்டுள்ளது? இந்த வார்த்தையில் உள்ள
சொற்களை மாற்றாமல் அப்படியே எடுத்துக்கொண்டால் கீழ்க்காணும் பொருள் கிடைக்கும்.
"காது அறுந்துபோன தையல் ஊசி
கூட ஒருவரின் மரணத்தறுவாயில் அவருடன் வராது"
இது உண்மைதான். எவ்வளவு பெரிய
செல்வந்தர் ஆனாலும் அவர் இறந்தபின்னர் எதையும் தன்னுடன் கொண்டுசெல்ல முடியாது
என்பது ஊரறிந்த உண்மை தானே. ஆனால் இப்போது சிக்கல் அப்பொருளில் இல்லை, அந்த
வார்த்தையில் உள்ளது. ஏனென்றால், உலகமே அறிந்த இந்த உண்மையினை சிவபக்தர் ஆன
பட்டினத்தார் அறிந்திருக்க மாட்டாரா?. திரைகடல் தாண்டிச் சென்று பொருளீட்டி வந்த
அவரது மகன் மனைவியிடம் கொடுத்துவிட்டுச் சென்ற பேழைக்குள் ஒரு பனைஓலை இருந்தது
என்றும் அந்த ஓலையில் எழுதப்பட்டிருந்த இந்த வார்த்தையினை படித்த பின்னரே அவர்
துறவியாக மாறினார் என்றும் கூறுகிறது பட்டினத்தார் வாழ்க்கை வரலாறு. நிச்சயம் அந்த
ஓலையில் முன்னர் கண்ட வார்த்தை எழுதப்பட்டிருக்காது.
ஏனென்றால், ஊரே அறிந்த ஒரு
உண்மையினை பனைஒலையில் கண்டுதான் பட்டினத்தார் ஞானம் பெறவேண்டும் என்ற அவசியம்
அவருக்கு இல்லை. அதுமட்டுமின்றி எத்தனையோ நல்ல பொருட்கள் இருக்க மரணத்தறுவாயில்
ஒருவர் ஏன் காதறுந்த ஊசியை உடன் கொண்டுசெல்ல வேண்டும்?. "ஒருவனது வாழ்நாள்
முடிந்துவிட்டால் அவன் தன்னுடன் ஒரு ஊசியைக் கூட எடுத்துச் செல்லமுடியாது"
என்னும் செய்தியைத் தெரிவிப்பதுதான் வார்த்தையின் நோக்கம் என்றால் வெறுமனே
"ஊசி" என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம். "காதற்ற ஊசி"
என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே பனைஓலையில்
எழுதப்பட்டிருந்த உண்மையான வார்த்தை இதுவல்ல என்பது தெளிவாகிறது.
அப்படி என்றால் அந்தப் பனைஓலையில்
உண்மையில் எழுதப்பட்டிருந்த வார்த்தை என்ன?. அதைத்தான் நாம் இங்கே காணப்போகிறோம்.
"காதற்ற ஊசி" என்னும் சொல்லுக்கு "பயனில்லாத ஊசி" என்பதே
பொருள் ஆகும். தையல் ஊசிக்கு "காது" முழுமையாக மூடி இருந்தால் தான்
அதைப் பயன்படுத்தி எதையும் தைக்கமுடியும். ஊசியின் காது அறுந்துவிட்டால் அதைவைத்துக்
கொண்டு எதையும் தைக்க முடியாது. இதுதான் தையல் ஊசியின் தத்துவம்.
சரி, மரணத்தறுவாயில் உள்ள
ஒருவனுக்கும் தையல் ஊசிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?. தையல் ஊசியைக் கொண்டு
அவனை எதைத் தைக்கச் சொல்கிறார்?. மகனாக வந்து அந்தப் பனைஓலையை பட்டினத்தாருக்குக்
கொடுத்துவிட்டுச் சென்றது இறைவன் அல்லவா?. எனவே அந்த வார்த்தைக்குள் மிகப்பெரிய
தத்துவத்தை மறைத்து வைத்துள்ளார். இந்த தத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கு முன்னால்
ஒரு பிச்சைக்காரனின் கதையினைப் பார்ப்போம்.
ஒரு ஊரில் ஒரே ஒரு பிச்சைக்காரன்
இருந்தான். ஊர்மக்கள் எல்லோரும் அவனுக்கு நல்ல உணவினை நாள்தோறும் பிச்சையாகப்
போட்டதால் அவனும் நன்றாக உண்டு வளர்ந்து கொழுகொழு என்று இருந்தான். அதிகம்
குண்டாகிப் போனதால் நடந்துசென்று பிச்சை எடுக்க முடியாத நிலை உருவானது. அதனால் ஒரு
மரத்தின் கீழ் அமர்ந்துகொண்டு அவ்வழியில் போவோர் வருவோரிடம் பிச்சை கேட்க
ஆரம்பித்தான். ஒருமுறை அவ்வழியாக ஒரு தோல்பை வியாபாரி வந்தான். அவனிடம் பிச்சை
கேட்க அவன் ஒரு கிழிந்த தோல்பையினையும் துருப்பிடித்த ஒரு தையல் ஊசியினையும்
கொடுத்துவிட்டுச் சென்றான். அவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல்
முழித்த அந்த பிச்சைக்காரன் பின்னர் அந்த தோல்பையினை ஊசியைக்கொண்டு தன்னிடம்
இருந்த கயிற்றால் தைத்து பலூன் போல ஊதி விளையாடத் துவங்கினான். பலூன் பறக்கின்ற
அழகில் தன்னையே மறந்தான் அவன்.
ஊசி ஏற்கெனவே துருப்பிடித்திருந்ததால்
அவன் கைபட்டதும் அதன் காது அறுந்து போய் விட்டது. இதை அவன் கவனிக்கவில்லை.
திடீரென்று அந்த பலூன் கீழே விழத் துவங்கியது. அதன் உள்ளே இருந்த காற்று சிறிது
சிறிதாக வெளியேறத் துவங்கியது. இதுவரை பலூனின் பூரித்த அழகைக் கண்டு மெய்மறந்து
ரசித்திருந்த பிச்சைக்காரன் இப்போது பலூனின் நிலையில் மாற்றம் உண்டாவதை
உணர்ந்தான். பலூன் கீழே விழப் போவதைக் கண்டு வருந்தினான். காற்று வெளியேறி பலூன்
சிறிதாவதைக் கண்டு பதைபதைத்தான். பலூனைத் தைத்து காற்று வெளியேறுவதைத்
தடுக்கவேண்டும் என்று எண்ணி தையல் ஊசியைத் தேடினான். அது அவனுக்கு அருகிலேயே
இருந்தது காது அறுந்துபோன நிலையில்.
அப்போது தான் அவன் தனது தவறை
உணர்ந்தான். பலூனைத் தைப்பதற்கு உதவியாய் இருந்த ஊசியைப் பற்றி சிறிதும் கவலைப்
படாமல் அதை இழந்து விட்டோமே என்று வருந்தினான். என்ன வருந்தி என்ன பயன்?. காலம்
கடந்து விட்டதே. தையல் ஊசி இருந்தும் பயனின்றிப் போய்விட்டதால் பலூனில் இருந்து
காற்று வெளியேறுவதை அவனால் தடுக்க முடியவில்லை. காற்று முழுவதும் வெளியேறி
கடைசியில் பலூன் கீழே விழுந்து விட்டது. அவன் இதுவரை கண்டு ரசித்திருந்த பலூனின்
ஆட்டம் அடங்கிவிட்டது. இனி அந்தப் பலூனால் பயன் இல்லை என்று உணர்ந்தான். பலூனைப்
போலவே தன்னுடைய ஆட்டமும் ஒருநாள் அடங்கிவிடும் என்று பயந்தான். இனி மக்களுக்காக
மக்களுடன் சேர்ந்து உழைத்து வாழ்வது என்று முடிவுசெய்து ஊரை நோக்கி நடந்தான்.
இந்தக் கதையில் தையல் ஊசி
உணர்த்தும் பொருள் என்ன?. தையல் ஊசியாகவே இருந்தாலும் அதைப் பக்குவப்படுத்தி
பாதுகாத்து வைத்திருந்தால்தான் தேவையான நேரத்தில் உதவியாய் இருக்கும் என்பதே. இது
பொதுவான பொருள் ஆகும். ஆன்மிகப் பார்வையில் இது உணர்த்தும் பொருள் வேறாகும். நமது
உடல் என்னும் காற்றடைத்த பையினைத் தைக்க உதவும் ஊசி தான் அறிவு ஆகும். உடல் வலிமையாக
உள்ளபோதே அறிவைப் பக்குவப்படுத்தி பாதுகாத்து வைக்கவேண்டும். தீய எண்ணங்களால்
அறிவைத் துருப்பிடிக்க விட்டுவிட்டால் உடலில் இருந்து உயிர் பிரியும் நேரத்தில்
அறிவினால் ஒரு பயனும் இல்லை. அறிவு துருப்பிடிக்காமல் நல்ல நிலையில் இருந்தால்
உயிர் பிரிவதை தள்ளிப் போடமுடியும். இந்தக் கருத்தைத் தான் எல்லா சித்தர்களும்
வலியுறுத்துகின்றனர். இந்தக் கருத்தைத் தான் இறைவனும் பட்டினத்தாருக்கு உணர்த்த
விரும்பினார்.
இதை உணர்ந்ததால் தான்
பட்டினத்தாரும் இல்வாழ்வைத் துறந்தார். ஏனென்றால் இல்வாழ்வில் இருக்கும்வரை ஆசை,
பந்தம், சொந்தம் என்று பல்வேறு இடையூறுகளால் அறிவு துருப்பிடிக்கும் என்று
நினைத்தார். துறவு ஒன்றே அறிவைப் பக்குவப்படுத்த ஒரே வழி என்றும் அதை வாழ்வின்
கடைசி காலத்தில் இல்லாமல் இளமையிலேயே செய்யவேண்டும் என்றும் துணிந்து துறவு
மேற்கொண்டார். இறுதியில் அவர் தனது எண்ணத்தில் வெற்றியும் பெற்று இறைவனடி
சேர்ந்தார் என்பது அவரது வாழ்க்கை வரலாறு.
சரி, இப்போது அந்த பனைஓலை
வார்த்தைக்கு வருவோம். இதுவரை கண்டதில் இருந்து அந்த வார்த்தை என்னவாக இருக்கும்
என்று நீங்கள் ஊகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆம் அந்த வார்த்தை இது
தான்.
" காதற்ற ஊசியூட வாராதுகாண்
கடைவழிக்கே"
No comments:
Post a Comment