உறவு / uravu
“உறவு” திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்தே ஒரு வலுவான ஒரு உறவுப்பாலமமைத்து கனடிய தமிழ் திரைப்படவரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறார் திரைப்படக் கலைஞர் திவ்வியராஜன் என்றால் அது மிகையாகாது.
கனடிய தமிழ் திரைப்பட உலகின் ஒரு மூத்த கலைஞரின் பாராட்டைப் பெறுவதற்கு ஏற்ற படம்தான் திவ்வியராஜனின் “உறவு”.
கணவன், மனைவி என்றால் தனியே ஒருவர் அல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் மனதாரப் புரிந்து கொள்வதும், விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போவதும் தான் திருமண பந்தத்தின் முதலாவது விதி என்பதை உணர்ந்து கொள்ளாவிட்டால் அந்தக் குடும்பமே சந்தேகத்தில் அழிந்து போய்விடும் என்பது மட்டுமல்ல, குடும்பப்பிரச்சனையில் தேவையற்ற மூன்றாம் மனிதரின் தலையீடும் ஒரு குடும்பத்தை அழித்துவிடும் என்பதை எடுத்துக்காட்டுவதே இந்தப்படத்தின் மூலக் கருவாகும்.
இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஜீவன்ராம் ஜெயம் பாராட்டப்பட வேண்டியவர். குறைந்த வசதிகளோடு மிகவும் அற்புதமாகக் கமெராவைக் கையாண்டிருக்கிறார். கமெராக் கோணங்கள் மிகவும் அற்புதம். பாராட்டுக்கள். சில குறைகள் ஆங்காங்கே இருந்தாலும், இசையமைப்பு ஒலியமைப்பு, எடிற்ரிங் போன்றவை தரமாக இருக்கின்றன. எந்த ஒரு இடத்திலும் சோர்ந்து போகாமல் படம் இயல்பாக நகர்கிறது.
கனடியத் தமிழர் திரைப்படங்களில் இதுவரை இருந்த பெருகுறைகளான ஒரு முழுமையற்ற திரைக்கதை,சுறுசுறுப்பற்றதும்-பாவம் அற்ற பேச்சுவழக்கு சம்பந்தமில்லாத காட்சிகள் என்பனபோன்றவற்றினை தவிர்ப்பதில் திவ்வியராஜன் வெற்றி கண்டுள்ளமை அவருடைய இரண்டாவது திரைப்பட வெற்றிக்கு காரணமெனலாம்.
பொதுவாக,எமது திரைப்பட வளர்ச்சிக்கு எடுக்கப்பட வேண்டிய கவனங்கள் இன்னும் மலையளவு உள்ளன. நம்பமுடியாத மாயாஜால சண்டைக் காட்சிகளும்,ஆடையில்லாத நடனங்களும் எல்லாத் திரைக்கதைகளுக்கும்
அவசியம் என்பதில்லை. அவை
இல்லாத பல இந்தியத் திரைப் படங்கள் கூட சாதனை படைத்திருக்கின்றன.அதேவேளை சம்பந்தமில்லாமல்,
தேவை இல்லாமல் அக்காட்சிகளை வில்லங்கமாக திரைக்கதையில் புகுத்தி படு தோல்வியில் தொலைந்த
இந்தியத் திரைப்படங்களும் உண்டு.
திரைப்படங்களில் ஒரு முழுமையான திரைக்கதை, நகைச்சுவை, நல்ல பின்னணி இசை,பாடல்கள்,நடிகர்கள்,தயாரிப்பு,இயக்கம்,கமரா என அனைத்தும் தரமானதாக அமையும்போது நிச்சயம் அப்படம் வெற்றியடையும்.
“உறவு” திரைக்கதையிலும்
நாயகி ஒரு பரதநாட்டிய ஆசிரியை என்பது சில காட்சிகள் கடந்த பின்னரே உணர முடிந்தது. பின்னணி
இசையிலும் பல இடங்களில் தொய்வு. வழமைபோல்
குரலைத் தாழ்த்தியும்,அழுத்தியும் நம்மவர் மேடையில் பேசி நடிப்பதனை திரையில் தவிர்த்திருக்கலாம்.
இவை போன்ற ஒரு சில சிறிய குறைகள் இருந்தாலும் இதுவரையில் வந்த எம்மவர் திரைப் படங்களில்
“உறவு” முன்னணி வகிக்கிறது.
ஒரு இரசிகனின் பார்வையில் கருத்துக் கூறுகையில் நட்புக்காக நண்பர்களையும், உறவுக்காக உறவுகளையும்- அவர்களை திரைக்கு இழுத்து வந்து வெறும் பொம்மைகளாக வந்து செல்வோரை வந்து பார்த்து திரை அரங்குகளில் சிலமணி நேரம் செலவிடுவதற்கு தமிழ் இரசிகர்கள் தயாராக இல்லை. சில திரைப் படங்களில் தோன்றுவோர்கள் அவர்களின் பாத்திரம் என்ன, யாரோடு பேசுகிறார்கள் என்று எதுவும் புரிவதில்லை.
எனவேதான் நடிகர்களையும், நல்லகதைகளையும் நாடிய திரைப் படங்கள் எம் மத்தியில் வரவேற்கப்படுகின்றன. வெற்றியை தேடி அடைகின்றன.
இந்தியத் தமிழ் திரைப் படங்கள் அவற்றின் உரையாடும் மொழி 50 ,60 களில் நீண்ட வசனங்களாகவும் இலக்கணத் தமிழாகவும் இருந்தன.70 களில் மிகவும் குறைந்த வசனங்களாகவும் உரையாடலில் இடைவெளிகளும் கொண்டு வெளிவந்தன. அப்படங்களை தற்போது எடுத்து பார்த்தால் பொறுமையினை இழந்துவிடுவோம்.ஏனெனில் தற்போது விரைவான இயல்பான நடிப்பு சினிமா இரசிகர்களை கவர்ந்துகொண்டு இருக்கிறது. இப்படிக் காலத்திற்கு காலம் கதை,வசனம்,நடிப்பு என்பனவற்றை மாற்றிக் கொண்டு வருவதன் முலமே இரசிகர்கள் மத்தியில் அவை இன்றும் வளர்ந்துகொண்டு இருக்கிறது. தமிழை மாற்றிப் பேசும்படி நாம் எதிர்பார்க்கவில்லை. நாம் அந்தக் காலத்தில் நாடக மேடையில் பேசியதுபோன்றே இன்றும் பேசிக்கொண்டு இருப்பது பெரும் குறையாகவே தோன்றுகிறது. ஆம், திரைக்கென்று ஒரு திரை மொழி எம் மத்தியில் உருவாகவேண்டும். அப்பொழுது தான் எமது சினிமாவும் எம் மத்தியில் வளர்ந்து நிற்கும்.
------------------ theebam.com
வெறும் பொம்மைகளாக வந்து செல்வோரை வந்து பார்த்து திரை அரங்குகளில் சிலமணி நேரம் செலவிடுவதற்கு தமிழ் இரசிகர்கள் தயாராக இல்லை.
ReplyDelete