சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க:
பத்து மணிக்கு மேல் வெளியில் தலை காட்டவே மக்கள் பயப்படுகின்றனர். வெயில் மண்டையைப் பிளக்கிறது. அரை மணி நேரம் வெயிலில் செல்ல நேர்ந்தால் கண் எரிச்சல், தோல் வறட்சி, வியர்வை, உடல் சோர்வு, சிறுநீர் தொற்று என பல பிரச்னைகள் வாட்டுகிறது. இது போன்ற சங்கடங்களில் இருந்து காத்துக் கொள்ள ஆலோசனை சொல்கிறார் தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் விக்னேஷ்வரி.
வெயில் நேரத்தில் எந்தப் பாதுகாப்பும் இன்றி வெளியில் செல்வதால் வியர்வை சங்கடத்தை ஏற்படுத்தும். தோல் வறட்சி காணப்படும். மேலும் வியர்வை அதிகரிப்பால் ஏற்கனவே தோல் பகுதியில் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அரிப்பு அதிகரிக்கும். அக்குள் மற்றும் முதுகுப் பகுதியில் இந்த அரிப்பு காணப்படும். உடல் சூட்டின் காரணமாக வெயில் கொப்புளம் மற்றும் வியர்குரு போன்ற தொல்லைகள் உண்டாகும்.
உடல் இயல்பான தட்பவெப்ப நிலைகளில் தோல் வியர்வை மூலம் இயற்கையாகவே வெப்ப மாறுபாடுகளை சரி செய்து விடும். நீண்ட நேரம் அதிக வெப்பநிலையில் இருக்கும் போது உடல் வெப்பக் கட்டுப்பாட்டு செயலிழக்கிறது. இதுவே பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம் ஆகும். கடும் வெப்பத்தின் காரணமாக வலியுடன் கூடிய வெப்பத் தசையிழுப்பு ஏற்படலாம். இதன் மூலம் உடல் உழைப்பில் ஈடுபடும் தசைகளும், வயிற்றுத் தசைகளும் பாதிக்கப்படுகின்றன. மேலும் அதிக வெப்பத்தின் காரணமாக சோர்வு அதிகரிக்கும். மயக்கம், இதயத்துடிப்பு அதிகரித்தல், ரத்த அழுத்தம் குறைதல், தோல் குளிர்ந்து சுருங்குதல் போன்ற தொல்லைகள் உண்டாகும். வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு வெப்பத்தாக்கு ஏற்படலாம். நீரிழப்பு, மதுப்பழக்கம், இதய நோய்கள், கடும் உடற்பயிற்சி மற்றும் சில மருந்துகளை உட்கொள்வதால் வெப்பத்தாக்கு வரும். இயல்பாகவே வியர்வை சுரப்பு குறைவாக உள்ளவர்களை இது விரைவில் தாக்கும். இதயத்துடிப்பு அதிகரித்தல், சுவாசத்தின் வேகம் அதிகரித்தல், மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தப் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு போதுமான நீர் ஆகாரம், சரியான உணவு முறை மற்றும் வெயிலில் இருந்து காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வெயில்கால நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
பாதுகாப்பு முறை: வெயில் நேரத்தில் வெளியில் சுற்றுவதைத் தவிர்க்கவும். வெளியில் செல்லும் போது கையில் எப்போதும் தண்ணீர் பாட்டில் இருக்கட்டும். காட்டன் உடைகள் மட்டுமே வெயிலுக்கு ஏற்றவை. குளிர் கண்ணாடிகளைப் பயன்படுத்தி கண் எரிச்சலைத் தடுக்கலாம். மூன்று முறை குளிப்பதன் மூலம் வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபடலாம். மேலும் பகல் 12 மணியில் இருந்து 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம். காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே கடுமையாக உழைக்கலாம். எடை குறைந்த மெல்லிய உடையை தளர்வாக அணியலாம். மது மற்றும் தேநீர் குடிப்பதைத் தவிர்க்கலாம். சூடான உணவையும் தவிர்ப்பது நல்லது. தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆண்கள் வெளியில் செல்லும் போது முழுக்கை சட்டை, தொப்பி அணியலாம். வெயிலில் இருந்து தப்பிக்க குடை பயன்படுத்தலாம். பெண்கள் வாகனத்தில் செல்லும் போது வெயில்படும் இடங்களை மறைப்பது நல்லது. சன்ஸ்கிரீன் லோஷன் தடவுவதன் மூலம் தோல் கருப்பதைத் தவிர்க்கலாம். வியர்வை உற்பத்தியாகும் பகுதியில் பாக்டீரியாக்கள் செயல்புரிவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மருத்துவரின் ஆலோசனைப்படி சோப் மற்றும் லோஷன் உபயோகித்து துர்நாற்றத்தை விரட்டலாம்.
0 comments:
Post a Comment