பார்க்கிங் பகுதியில் எந்த இடம் காலியாக இருக்கிறது என தெரிந்துகொண்டு, தானே ஓடிச் சென்று நின்றுகொள்ளும் காரை ஜப்பானின் நிசான் நிறுவனம் வடிவமைத்துள்ளது. கார் தயாரிப்பில் 75 ஆண்டு பாரம்பரியம் கொண்ட நிறுவனம் ஜப்பானை சேர்ந்த நிசான் மோட்டார் கம்பெனி. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வாகனங்கள் தயாரிப்பில் தற்போது அதிக அக்கறை செலுத்தி வருகிறது.
சிறிதும் புகையை கக்காத மின்சார இன்ஜின்களை கார்களில் பயன்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் 8-வது எலக்ட்ரிக் இன்ஜின் காரை தயாரித்துள்ளது. ‘பிவோ-3’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த கார் 42-வது டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. உலகின் முன்னணி நகரங்களில் பல இடங்களில் தானியங்கி பார்க்கிங் வளாகங்கள் உள்ளன. இவை முழுக்க முழுக்க எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தில் செயல்படுபவை.
பிவோ-3 காரில் ஜிபிஎஸ் வசதி உள்ளது. நம்மிடம் இருக்கும் ஸ்மார்ட் போன் மூலம் இதை இயக்க முடியும். தானியங்கி பார்க்கிங் வளாகத்துக்கு வந்த பிறகு, நாம் காரில் இருந்து இறங்கிவிடலாம். தனது ஜிபிஎஸ் வசதியை பயன்படுத்தி, எந்த இடம் காலியாக இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் கார், தானாக அந்த இடத்துக்கு சென்று நிற்கும். எந்த இடத்தில் நிற்கிறது என நமக்கு மெசேஜ் வரும். வேலை முடித்து திரும்பும்போதும், நம் இருப்பிடம் தேடி கார் வந்துவிடும். மிகவும் குறுகலான இடத்தில் ‘யூ டர்ன்’ போடுவதற்கு ஏற்ப இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment