ஒளிர்வு -05


புதுக்கவி:-நாம் தமிழர்
காலையில்
டொரோண்டோ நகர வீதிகளில்
போத்துக்கீசனைக்   கண்டால்
போம்ஜிய என்போம்
சீனனைக்   கண்டால்
சவான் என்போம்
இந்தியனைக்   கண்டால்
அச்சாசுத என்போம்
பிறேஞ்சுக்காரனைக்   கண்டால்
பொன்ஜோ என்போம்
இத்தாலிக்காரனைக்   கண்டால்
பொன்ஜோர்னோ என்போம்
ஆங்கிலேயனைக்   கண்டால்
குட்மோர்னிங் என்போம்
ஆனால்
தமிழனைக்   கண்டால்
தரை பார்த்து  நழுவுவோம்.
                                                                       -S.MANUVENTHAN 
         நினைவில் ஒரு பழமொழி-ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.

சிறுகதை:- கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?

கனடாவுக்கு வந்து பரமர்    முப்பது வருடங்கள் எப்படியோ பறந்தோடிவிட்டன. தனது சொந்த ஊரான ஆச்சுப்பிடி கிராமத்தினைப் பார்க்கும் ஆசையில்  கனடாவிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்து இறங்கினார் பரமர்.  அவர் நெஞ்சினில் தான் வெளிநாடு சென்று கட்டியெழுப்பிய ஆச்சுப்பிடிக்   கிராமம் எப்படி இருக்கும் என்ற ஆவல் பலாலி விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது  மேலும் பலமடங்கு அதிகரித்துவிட்டது எனலாம்.
கிராமத்திற்கு செல்ல ஒரு ஆட்டோ வினை பிடித்துக்கொண்ட பரமர் ஊர் போய் சேர அரை மணி நேரம் செல்லும் என ஆட்டோ சாரதி கூறியபோதுநீண்ட நேரமாகுதே என்று   சலித்துக்கொண்டார்.
 ஆட்டோவில் ஏறிய பரமரின் சிந்தனைகள் பின்னோக்கிப் பறந்தன.
அந்நிய நாட்டில் சென்று வாழ்ந்தாலும் சொந்த நாட்டில் தான் வாழ்ந்த விதத்தை மறக்க அவரால் முடியவில்லை.தனது இளம் வயதில் தானும் நண்பர்களுடன்  கீரிமலைக்   கேணியில் நீந்தி விளையாடிய நினைவுகளும்,அவர்களுடன் இணைந்து உருவாக்கிய கணபதி விளையாட்டுக் கழகமும் அக் காலத்தில் அக் கழகம் அடைந்த வளர்ச்சியும்,வருடாந்த விளையாட்டுப் போட்டிகளும்,கலை விழாக்களும் அவர் கண் முன்னே அடிக்கடி வந்து போயின. அந்த நினைவுகள்,அவை கொடுத்த கனவுகள் தானும் தான் நண்பர்களும் விளையாடித் திரிந்த பூமியில்,ஒரு நீச்சல் தடாகமும்,கலையரங்கும்  உருவாகவேனும் என ஆசை கொண்டார்.
  அவருடைய ஆசையினை கனடா வாழ் தனது நண்பர்களுடன் பகிர்ந்தபோது அவர்களின் ஆதரவும் கிடைக்க,பலரும் இணைந்து அத்திட்டத்திற்கான பணத்தினைச் சேர்த்து ஊரிலுள்ள பெரியோர்களையும் உற்சாகப்படுத்தி,அவர்கள் மூலம்,ஒரு நீச்சல் தடாகத்தையும், கலையரங்கையும் கட்டி முடித்துவிட்டனர்.
பரமர் அடையாளப்படுத்தி கூறிய ஆச்சுப்பிடி ஐயனார் கோவிலடி வந்ததும் ஆட்டோ சாரதி வண்டியை நிறுத்தி "ஐயா உங்கட இடம் வந்திட்டுது"என்று குரல் கொடுத்தபோதே  சுய நினைவுக்கு திரும்பினார் பரமர்.

 "அட தம்பி.வலு கெதியாய் வந்திட்டாய்" என்று சாரதியை பாராட்டியவாறே,வண்டிக் கூலி கொடுத்தவர்  சுற்று முற்றும் பார்த்தவாறே,தனது நண்பர் கனகர் வீடு நோக்கிச் சென்றார்.

ஊர் நன்றாக மாறியிருந்தாலும்,முன்னர் அகலமானவைகள் எனக் கருதப்பட்ட வீதிகளெல்லாம் மிகவும் குறுகியதாகவே தென்பட்டன.பரமர் வாழ்ந்த  சிறிய வீடு இருந்த இடத்தில்  ஒரு மாளிகை போன்ற வீடும் சுற்றுமதிலும்,இரும்புப் படலையிலிருந்து வீடு வரை பளிங்குக் கற்களும் பதிக்கப்படிருந்தன. சந்தேகமடைந்த பரமரும் படலையில் தயக்கத்துடன் நிற்க,வீட்டு வாசலில் கட்டியிருந்த அல்சேஷன் நாயின் சத்தம் கேட்டு
வந்த கனகரும் பரமரை அடையாளம் கண்டுகொண்டார்.
ஆனந்தத்துடன் வரவேற்று உபசரித்த கனகருடன் இருந்து பேச பொறுமை இல்லாத  பரமர்,கனகரையும் அழைத்துக்கொண்டு கணபதி விளையாட்டுக் கழகத்தினை பார்வையிட புறப்பட்டுக்கொண்டார்.
   இப்படி ஒரு இடி தலையில் விழும் என்று பரமர் எண்ணிப்பார்க்கவில்லை. கலைஅரங்கத்தையும் நீச்சல்தடாகத்தையும் கண்டுகளிக்க ஓடோடி வந்த பரமர் அங்கு நேரில் கண்ட காட்சிகள் தலையைச் சுற்றியது.அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டார்.
"ஆடுகளும் மாடுகளும் படுத்து உறங்கவா இக்கலை அரங்கத்தை கட்டினோம்.குப்பைத் தொட்டியாய் உபயோக்கிக்கவா இந்த நீச்சல் தடாகத்தைக் கட்டினோம் நாங்கள் கண்ட கனவெல்லாம் கானல் நீராய்ப்   போச்சே!."தலையிலை கை வைத்துப் புலம்பினார் பரமர்.அருகில் உட்கார்ந்த கனகர் பேசத்தொடங்கினார்.
"கொஞ்சம் பொறும் பரமர்.நான் சொல்லுறன் எண்டு குறை நினையாதை.
அந்தக்காலத்தில நாங்கள் பெடியளாய் இருந்த வேளையிலை டிவி,வீடியோ,செல்போன்,ஐபோட்,கம்ப்யூட்டர்,இண்டநெட்,என்று எதுவும் இருக்கவில்லை.எங்கட பொழுது போக்குக்காகக்  கூடினோம்.கழகம் அமைத்தோம்.கூத்து ஆடினோம். இப்ப காலம் எவ்வளவோ மாறிவிட்டுது பரமர்.இப்பத்தே பிள்ளைகள் இதுகளிலை மினக்கெட மாட்டினம். அத்தனை பொழுதுபோக்கும் அவர்கள் கைக்குள்ளேயே இருக்கிறது. ஏன்?அங்கை பார். உங்களால எழுப்பப்பட்ட வாசிகசாலை படிக்கிற பிள்ளைகளால பயன்படுத்தப்படுகுதுதானே! அதுவும் கணணி வசதிகள் இருப்பதினாலேயே வாசிகசாலை உபயோகமாய் இருக்குது. என்று சமாதானப் படுத்திக்கொண்டார் கனகர்.
காலத்தை உணராது எடுக்கும்  முயற்சிகள் பயனற்றவை என்பதனை பரமர் அன்றே உணர்ந்தார்.
                            --செ-மனுவேந்தன்

சினிமா:-கடந்த 30 நாட்களில் வெளிவந்த திரைப்படங்கள்.

2011-03-14 நந்தி
நடிகர்கள்:அகில்,சனுஷா.
கதை-: தன்னை நந்தியாக நினைத்துக் கொண்டிருப்பவனுக்கும், அவனை வணங்காமல் இருக்கும் ஒருவனுக்குமான பிரச்சினைதான் கதை
புள்ளிகள்-:35

2011-03-02 நடுநிசி நாய்கள்
நடிகர்கள்: வீரா, ஸ்வப்னா, ஆப்ரஹாம்,தேவா, சமீராரெட்டி, அஸ்வின் .
கதை-: இளம் வயதில் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் கதை.
புள்ளிகள்-:45

2011-03-02 சீடன்
நடிகர்கள்:கிருஷ்ணா,அனன்யா,தனுஷ்,சுஹாசினி,விவேக்.
கதை-: வேலைக்காரி-நாயகன்  காதலை ஏற்காத சமுதாயத்தில்,நுழையும் இன்னொரு நாயகன் எப்படி அவர்களை சேர்த்து வைத்தான் என்பதே கதை.
புள்ளிகள்-:65

2011-02-28 தம்பிகோட்டை
நடிகர்கள்: நரேன்,பூணம் பஜ்வா,பிரபு,மீனா,ராஜேந்திரன்,சந்தானம்,சங்கீதா.
கதை-: அக்கா-தம்பி பாசத்தில் துவங்கும் படம், காதலில் பயணித்து இறுதியில் பழிவாங்குதலில் முடிகிறது
புள்ளிகள்-:55

2011-02-28 ஆடுபுலி
நடிகர்கள்: ஆதி,பூர்ணா, நிழல்கள் ரவி,சுரேஷ்,கே.ஆர்.விஜயா,ரவிச்சந்திரன்
கதை-: ஹீரோக்கும், காதலியின் அப்பாவுமான வில்லனுக்கும் இடையே நடக்கும் நீயா? நானா? போட்டிதான் படம்.
புள்ளிகள்-:35

2011-02-16 பயணம்
நடிகர்கள்: நாகார்ஜுன், பிரகாஷ்ராஜ், சனாகான், 'தலைவாசல்' விஜய்.
கதை-: விமானத்தை கடத்த முயலும் தீவிரவாதிகளோடு துணை கேப்டன்அதிரடியாய் உள்நுழைந்து எப்படி விமானத்தில் உள்ள பயணிகளை காப்பாற்றினார் என்பதே கதை.
புள்ளிகள்-:50

2011-02-16 தூங்காநகரம்
நடிகர்கள்: விமல், அஞ்சலி, பரணி, நிஷாந்த், கௌரவ்.
கதை-:நட்பின் இலக்கணம் என்னவென்று புரியாமல் குழம்பும் டாஸ்மாக் நண்பர்களின் கதை.
புள்ளிகள்-:40

2011-02-15 பதினாறு
நடிகர்கள்: மிர்ச்சி சிவா, மது ஷாலினி, அபிஷேக்.
கதை-: காதல் என்றால் பொய், ஏமாற்று வேலை என ஒரு வாதம்.அதனை தவறு என நிரூபிக்கும்  ஒரு நாயகனின் கதை.
புள்ளிகள்-:55