இயந்திரமா? அல்லது இயந்திரத்தின் மனிதமா?
நம் முன்னோர்கள் விலங்குகளாக இருந்தனர் - ஆனால் அவர்கள் கைகளால் உழைத்தனர், கால்களால் நடந்தனர், மனத்தால் சிந்தித்தனர். இன்று நாம் மனிதர்களாக இருக்கிறோம்- ஆனால் நம்மிடம் அந்த மூன்றும் மெல்ல மெல்ல உபயோகிக்கப்படாமல் பறிகொடுக்கப்படுகின்றன.
காலை எழுந்தவுடன் வானத்தைப் பார்க்காமல், பல் துலக்கும் முன், முகத்தைத் தேய்க்கும் முன் மொபைல் திரையை பார்த்து விடுகிறோம். முன்னால் வருபவரைத் தெரிவதில்லை. நடக்க வேண்டிய இடத்திற்கும் வாகனம், பேச வேண்டியவர்களுக்குப் சாட், நினைக்க வேண்டிய விஷயங்களுக்குப் செயற்கை நுண் அறிவு AI !
இப்போதைய பிள்ளைகள் கண்ணால் உலகை காணவில்லை- திரையைப் பார்க்கிறார்கள்.
காதால் இயற்கையின் ஒலியை கேட்கவில்லை- இயர்படின் இசையை கேட்கிறார்கள்.
கைகளைப் பயன்படுத்தி எழுதவில்லை- விசைகள் தட்டுகிறார்கள்.
இதுவே ஒரு புதிய பரிணாமத்தின் தொடக்கம்.
எதிர்காலத்தின் மனித வடிவம்:
இன்னும் சில தசாப்தங்களில், "மனிதன்" என்ற வரையறை மாறி விடும்.
அவனுக்குத் தோல் இருக்கும், ஆனால் அதற்குள் சதையில்லை- சிலிக்கான் தகடு பொருத்தப்பட்டிருக்கும்.
அவனுக்கு மூளை இருக்கும், ஆனால் நினைவுகள் இல்லை - மூளை Data Base தரவுத்தளத்தில் இயங்கும்.
அவனுக்குக் கைகள் இருக்கும், ஆனால் உழைப்பு இல்லை- ஆட்டோமேஷன் தானாக இயங்களில் செல்லும்.
பிறக்கும் குழந்தைகள் குரல் எழுப்பாமல் பிறக்கலாம். பிறக்கும் முன்னரே மைக்ரோசிப்ஸ் அடையாள சிம்பு பொருத்தப்பட்டு விடும். அந்த சிப்ஸ்தான் அந்தப் புது உயிரின் ஆறு புலன்களாக இனிச் செயல்படும்.
இதன்படி, அவர்களது குரல் ஏற்கனவே AI குரல் சிப்பில் பதிவாகி இருக்கும்.
அவர்கள் பார்க்காமல் உலகத்தை அனுபவிக்க முடியும் - Neural Vision செயற்கை நரம்பியல் பார்வை வழியாக.
பயணம் செய்யாமலே ஏனையோரை நேரில் சந்தித்துப் பேசமுடியும்- teleport / teletransportation தன்னியல் பெயர்வு மூலமாக. ஆட்களையும்,பொருட்களையும் வரவழைக்க முடியும்.
அவர்கள் நினைப்பதை, செய்ய விழைவதை உடனே Cloud மேகக்கணி பதிவுசெய்து, உலகம் முழுவதும் உள்ள ரோபோக்கள் அதற்கேற்ப செயல்படும்; அவர்களுக்கான எல்லாப் பணிகளையும் தொலைவில் இருந்துகொண்டே ஒழுங்காகத் தவறாது செய்து முடிக்கும்.
இது கனவா? இல்லை -கணினி கனவு. எதிர் கால கனவு!
இயற்கையா? அல்லது இயந்திரமயமான இயற்கையா? மனித இயந்திரமா? அல்லது இயந்திர மனிதனா?
மழை பெய்யும். ஆனால் வானத்திலிருந்து அல்ல- Artificial Climate
Control System மெய்நிகர் காலநிலை கட்டுப்பாட்டிலிருந்து.
பூக்கள் மலரும்- ஆனால் தாவரத்தில் அல்ல, 3D Bio Printer முப்பரிமாண அச்சுப் பொறியிலிருந்து.
நீங்கள் தோட்டத்தில் நடக்கும் போது, நிழலை அளிப்பது மரமல்ல - Solar Umbrella
Drone. சூரிய பறவிக் குடைகள்!
எல்லாம் தொழில்நுட்பம்! ஆனால் அன்பு?
அதற்கும் Virtual Emotion
Simulation மெய்நிகர் உணர்ச்சி உருவகப்படுத்துதல் வந்துவிடும்!
அப்போது “அவள் சிரிக்கிறாள்” என்பது உண்மையா, அல்லது AI Generated Emotion மெய் நிகர் உருவாக்கிய உணர்ச்சி ஆக இருக்கிறதா என்பதையும் நாம் காண முடியாது.
எல்லாம் மாயையா? உண்மையா? மாய உண்மையா? அல்லது உண்மை மாயையா?
மனிதனின் கடைசிச் சோதனை:
மனிதன் கடவுளைப் போல உருவாக்க முயல்கிறான். ஆனால் இறுதியில், தன் உருவத்தையே களைந்து விடுகிறான்.
ஒரு நாள் வரும்போது -மனிதன் தொழில்நுட்பத்தை உருவாக்கியவனா? அல்லது தொழில்நுட்பமே மனிதனை உருவாக்கியதா? என்ற கேள்விக்கே பதில் தெரியாது இருக்கும்.
அந்த நாள் வந்தால், வானத்தில் ஒரு சிறிய மின்னணு வால் மட்டும் தொங்கிக் கொண்டிருக்கும்.
நம் முன்னோர் குரங்காய் இருந்தபோது இருந்த வால் மரத்தை விட்டு இறங்கியதும் தேவையற்று இழந்தது போல், நமது அவயங்களும் தேவையற்றவையாகி இயங்காமல் போய்விடும். அத்தோடு நாம் மனிதராக இருந்தும் மனித தன்மையை இழந்து விடுவோம்.
ஆனால் இன்னும் நம்பிக்கை உண்டு!
மனிதன் உடம்பு எல்லாம் மின் கம்பிகளாய் மாறினாலும்,
ஒரு சிறிய மன இதயம் மட்டும் இன்னும் துடிக்கும்- துடித்துக்கொண்டே இருக்கும்!
அந்த இதயம்தான் நம்மை மனிதனாக வைத்துக்கொண்டு இருக்கவிருக்கும் கடைசி மின்சாரம்!
ஆக்கம்:
சந்திரகாசன் செல்லத்துரை
-:புதிய கண்டுபிடிப்புகள் :-
காற்று மாசை நீக்கும் விளக்கு
வீட்டுக்கு வெளியே மட்டும் தான் காற்று மாசு இருக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால் வீட்டுக்குள் இருக்கும் காற்றும் கூட பல்வேறு வகையான துாசுகளால் மாசடைந்து இருக்கிறது. குறிப்பாக செல்லப் பிராணிகள் உடலில் இருந்து உதிரும் முடி, தோல், கிருமிகள், சிலவிதமான செடிகளின் மகரந்தம் ஆகியவை பல பேருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
இந்த ஒவ்வாமை காலப் போக்கில் ஆஸ்துமாவாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த கொலரடோ பல்கலை ஆய்வாளர்கள் வீட்டுக் குள்ளே இருக்கும் மாசுகளை அகற் றுவதற்கு புற ஊதாக் கதிர்களைப் பயன்படுத்தலாம் என்கின்றனர்.
10 கன மீட்டர் அளவுடைய ஓர் ஆய்வுக் கூடத்தைத் தேர்ந்தெடுத்தனர். அதில் சாதாரணமாக வீட்டுக்குள்ளே இருக்கும் மாசுகளைச் செலுத்தினர்.
இவையெல்லாம் பத்து மைக்ரோமீட்டருக்கும் குறைவான அளவு கொண்டவை என்பதால் சாதாரண கண் களால் பார்க்க இயலாது. பிறகு இந்த அறையில் 222 நானோ மீட்டர் அலைநீளம் கொண்ட புற ஊதாக் கதிர்களை வெளியிடும் மின்விளக்கைப் பொருத்தினர். 254 நானோ மீட்டர் அலை நீளம் கொண்ட புற ஊதாக் கதிர்கள் நம் முடைய கண்களுக்கும் தோலுக்கும் ஆபத்தானவை என்பதால் அதற்கு பதிலாக இதை பயன்படுத் தினர்.
பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து அறையிலுள்ள மாசுகளைச் சோதித்தனர். வெறும் 30 நிமிடங் களிலேயே மனிதர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் துாசுகள் 25 சதவீதம் வரை அழிக்கப்பட்டுவிட்டன.
எனவே இந்த வகை விளக்குகளை வீட்டில், வகுப்பறைகளில், மருத்துவ மனைகளில் பயன் படுத்தி காற்று மாசுகளை அழிக்கலாம் என் கின்றனர் விஞ்ஞானிகள்.
கால்சியம் மாத்திரை
சுண்ணாம் பு சத்து (கால்சியம்) மாத்திரைகளை தொடர்ந்து உண்பதால் ஞாபக மறதி நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக முந்தைய ஆய்வுகள் தெரிவித்தன. இந்நிலையில், வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய பல்கலை மேற்கொண்ட புதிய ஆய்வில், கால்சியம் மாத்திரைகளுக்கும், ஞாபக மறதிக்கும் தொடர்பில்லை என்பது தெரியவந்துள் ளது.
பீர்- கொசுக்கள்
Radboud University / நெதர்லாந்தின் ராட்ப வுட் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், பீர்
குடிக்காதவர்களை விட குடிப்பவர்களை நோக்கி கொசுக்கள் 35 சதவீதம் அதிகம் ஈர்க்கப்படுவது
தெரியவந்து ள்ளது.
எளிமையாகும் வைரஸ் சோதனை
வைரஸ் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவதில்
உள்ள மிகப்பெரிய சிக்கல் ஒன்று உண்டு. அதாவது, நம் உடலுக்குள் பாதிப்புகள் ஏற்பட்ட
பிறகு தான் வைரஸ் இருப்பதே தெரிய வரும். அதற்குள் நம்மிடமுள்ள வைரஸ் பிறருக்கு பரவி
விடும்.
எனவே, அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னரே ஒருவர்
உடலில் வைரஸ் உள்ளதா, இல்லையா என்பதைஅறிந்து கொள்வதும், பாதிக்கப்பட்ட நபரை தனிமைப்படுத்தி
சிகிச்சை தருவதும் அவசியம். ஆனால், இப்படி கண்டறிவது எளிதா என்றால், இல்லை. இதற்கான
சில கருவிகள் இருந்தாலும் அவை விலை அதிகமானவை; மெதுவாக வேலை செய்பவை.
எனவே, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஊர்ஸ்பர்க் பல்கலை இதற்கு ஓர் எளிய தீர்வு கண்டுள்ளது. ச்யூயிங்கம்மில் வைக்கும் படியான உயிரியல் உணரியை உருவாக்கி உள்ளனர். இதன் முக்கியமான சேர்மம், 'க்ளைகோபுரோட்டீன்' எனப்படும் ஒரு புரதம். புதினா குடும்பத்தைச் சேர்ந்த தைம் தாவரத்தில் உள்ள தைமால் எனும் சேர்மத்தின் மீது இந்த புரதம் பூசப்படும். இந்த கலவையை ச்யூயிங்கம்மில் வைத்து, ஒருவருக்கு உண்ண கொடுக்கப்படும்.
ஆரோக்கியமான மனிதர்களால் தைம் சுவையை உணர இயலாது, காரணம் புரதப் பூச்சு. ஆனால், பாதிப்புள்ளவர் உடலில் உள்ள வைரஸ் புரத மூலக்கூறுகளை உடைப்பதால், உள்ளே இருக்கும் தைமால் மூலக்கூறுகள் நாக்கில் பட்டு, தைம் சுவையை உணர வைக்கும். இந்த எளிய சோதனை மூலம் ஒருவர் உடலில் வைரஸ் உள்ளதா, இல்லையா என்பதை கண்டறியலாம் சோதனை முயற்சியில் உள்ள இந்த புதிய முறை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.
புற்றுநோயை தடுக்கும் கொழுப்பு
எது?
தற்போதைய சூழலில் கொழுப்பு சத்து என்றாலே அது
உடலுக்கு தீங்கானது என்ற கருத்து உள்ளது. இது முற்றி லும் உண்மை என்றோ, முற்றிலும்
பொய் என்றோ கூற இயலாது. எந்த வகையான கொழுப்புகள் உடலுக்கு நன்மை செய்யும்; எவை கெட்டது
செய்யும் என்பது குறித்து பல்வே று ஆய்வுகள் நடந்து வருகின்றன.
ஹாங்காங் பல்கலை ஆய்வாளர்கள் இது தொடர்பாக
முக்கிய ஆய்வை மேற்கொண்டனர். நம் உடலில் சாதாரண கட்டிகள் முதல் புற்று கட்டிகள் வரை
அனைத் தையும் எதிர்த்து போராடு பவை ரத்த வெள்ளை அணுக்கள் தான். இவற்றில் பல்வேறு வகைகள்
உள்ளன. அவற்றுள் முக்கியமானவை டெல்டா காமா டி செல்கள். இவற்றை மட்டும் தனியாக எடுத்து
ஆய்வகத்தில் வைத்து, விஞ்ஞானிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.
இவற்றை இரண்டு பிரிவு க ளாக்கினர். ஒரு பிரிவுக்கு உணவாக கொட்டைகள், அவகாடோ, ஆலிவ் எண்ணெய் ஆகிவற்றில் இருக்கும் கொழுப்பான ஒலிக் அமிலத்தை செலுத்தினர். மற்றொரு பிரி வினருக்கு பால் பொருட்கள், இறைச்சி, பனை எண்ணெய் ஆகியவற்றில் இருக்கும் பால்மிடிக் அமிலத்தை செலுத்தினர்.
சில தினங்கள் கழித்து ஆராய்ந்தபோது, ஒலிக் அமிலம் செலுத்தப்பட்ட செல்களுக்குள் உயிரியல் இயக்கம், கட்டிகளை அழிக்கும் திறனும் சிறப்பாக இருந்தன. பால்மிடிக் அமிலம் செலுத்தப்பட்ட செல்கள் உயிரியல் இயக்கம் பாதிக்கப் பட்டு, தங்களை தாங்களே அழித்துக் கொண்டன.
இந்த ஆய்வு மூலம் புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்கள் ஒலிக் அமிலக் கொழுப்பு நிறைந்த உணவுகள் உட்கொண்டு, பால்மிடிக் அமிலம் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நன்மை தரும் என தெரிய வந்துள்ளது.
தொகுப்பு:செ.மனுவேந்தன்