பௌத்தர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய அனைத்து மக்களும் வசிக்கும் இடங்களில் மிகவும் முக்கியமானதும் இலங்கையின் வணிக தலைநகரமும், இலங்கையின் ஆகப்பெரிய நகரமுமான கொழும்பு ஒரு பரபரப்பான நகரமாகும். அங்கே இந்தியப் பெருங்கடலின் சத்தமும், போக்குவரத்து நெரிசலும், தெருவோர வியாபாரிகளின் சலசலப்பும் கலந்த வெள்ளவத்தை என்ற இடத்தில், முல்லை என்ற இளம் தமிழ்ப் பெண் வாழ்ந்து வாழ்ந்தாள். பரபரப்பான அந்த நகரத்தைப் போலல்லாமல், முல்லை அமைதியாகவும், கிட்டத்தட்ட கூச்ச சுபாவமுள்ளவராகவும், வெளிச்சத்துக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாள். அவள் கொழும்பின் மையத்தில் வசித்தாலும், அவளுடைய வாழ்க்கை அமைதி, நெகிழ்ச்சி மற்றும் உறுதியுடன் இருந்தது.
முல்லையின் எண்ணம் எல்லாம் அந்த 'மே' மாதம் 18 ம் திகதியும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் அமைந்த கடற்கரை கிராமமும் தான்!
குறிப்பாக 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் உக்கிரமடைந்த சந்தர்ப்பத்தில் அந்த யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலிருந்த மக்கள் பல வார காலமாக உணவிற்கு பாரிய சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு கிடைத்த அரிசியை கொண்டு, கஞ்சி தயாரித்து தமது பசியை அங்கு இன்னும் இருந்த தமிழர்கள் போக்கிக் கொண்டனர். அவர்களில் அவளும் அவளின் குடும்பமும் இருந்தனர். அதை அவள் இன்னும் மறக்கவில்லை.
போர் கூடாது என்பதே மானுடத்தின் பொது நீதி, என்றாலும் அது எல்லா நாட்டிலும் எல்லா வேளையிலும் அப்படி அமைவதில்லை. உள்நாட்டிலேயே பாரபட்சமான அரசின் அடக்குமுறைகள், சிறுபான்மையினரின் அல்லது எளியவர்களின் உயிரையும், உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்காமல் காவு கொள்ளும் நிகழ்வுகள் பல அரங்கேறியுள்ளன. அதுமட்டும் அல்ல, அப்படியான அடக்குமுறைக்கு அல்லது உள்நாட்டு போருக்கு பின்பான வாழ்வும், இடம்பெயர்வும், அப்படியான ஒரு சூழலில் அத்தனை சுலபானதோ சுகமானதும் அல்ல, அதை அனுபவித்தவள் அவள்! அது தான் அவள் பெரிதாக எல்லோருடனும் பழகாமல், தன் வேலையும் தன் குடும்பமாக ஒதுங்கி இருந்துவிட்டாள்.
நல்ல வேளை, அவள் தன் குடும்பத்துடன் இடம்பெயர்ந்து முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்ட வவுனியா "மெனிக் பாம்" தடுப்பு முகாம்களில் ஒன்றில் அடைக்கப்பட்டு இருந்த நேரம், அதைக் கேள்விப்பட்டு, அங்கு வந்த தந்தை அங்கு முன்பு வேலை செய்த தொழிற்சாலையின் முதலாளி, தனது கொழும்பு வீட்டில் ஒரு பகுதியில், அவர்கள் நால்வருக்கும் தங்க இடமும், அவரது கொழும்பு வியாபார நிலையத்தில் தாய், தந்தை இருவருக்கும் துப்பரவாக்கள் மற்றும் எடுபிடி வேலைகளும் கொடுத்ததால், அவளும் தங்கையும் கொழும்பில் தங்கள் படிப்பை தொடர்ந்தனர். அதனால், இருவரும் இப்ப அங்கு ஓரளவு நல்ல உத்தியோகமும் பெற்றனர்.
முல்லையின் குடும்பம், மற்ற பல தமிழ் குடும்பங்களைப் போலவே, சவால்களின் பங்கை எதிர்கொண்டது. பல தசாப்தங்களாக தனது நாட்டை அழித்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு, அங்கிருந்து குடிபெயர்ந்த பின் பல கஷ்டங்களைக் அனுபவித்தாள். ஆனால் அவளுடைய குடும்பம் அவளுக்கு கடின உழைப்பு, நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் மதிப்புகளைக் கற்றுக் கொடுத்தது. அவள் தன் தந்தையின் விடாமுயற்சியையும் தாயின் அரவணைப்பையும் அறிந்தவள், எனவே அவள் எங்கு சென்றாலும் இந்த பண்புகளையும் தன்னுடன் எடுத்துச் சென்றாள்.
முல்லை இலங்கை தேசிய நூலகத்தில் நூலகராக, தன் கடமையில் கண்ணும் கருத்துமாக தன் வேலையை உணர்ந்து செயல்பட்டார். ஒரு நூலகராக, பல்வேறு வகையான புதுப்பித்த, பொருத்தமான மற்றும் அவரவர்களை ஈர்க்கக்கூடிய புத்தகங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் அநேகவிதமான தகவல் / செய்தி சாதனங்களை தேவைக்கு ஏற்ப வழங்குவதில் திறமைசாலியாகவும் இருந்தார்.
அத்துடன் இன்றைய அல்லது அண்மைய தகவல் / செய்திகளை தானும் அறிந்து வாசகர்களுடன் அர்த்தமுள்ள உரையாடல்களில் விரும்பி பங்குபற்றுவார். அதுமட்டும் அல்ல அங்கு வந்து படிப்பவர்களின் தேவைகள் மற்றும் ஆர்வங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் வாசகர்களை உற்சாகப்படுத்தவும், ஆர்வப்படுத்தவும் அதில் ஆறுதலடையவும் என்றும் முன்னுக்கு நிற்பவராகவே இருந்தார். சுருக்கமாக நூலகம் அவளுடைய சரணாலயமாகவே இருந்தது.
முல்லையிடம் என்றும் அமைதியான நடத்தை இருந்த போதிலும், அவளுக்கு கதை சொல்லும் எழுதும் ஆர்வமும் இருந்தது. அதனால் நூலகத்திற்கு வந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சொந்தக் கதைகளைக் சொல்லும் பொழுது உன்னிப்பாக கேட்பாள். அதே நேரம் மற்றவர்களின் தேடுதல்களை, இலக்கியம், அறிவியல் அல்லது வரலாறு எதுவாக இருந்தாலும் கண்டறிய உதவுவதிலும், அவர்களின் திறமைகளை வளர்ப்பதிலும் ஆர்வமாக இருந்தாள். இதனால், பல வழக்கமான வாடிக்கையாளர்கள் பலருடன் அவர் வலுவான உறவை வளர்த்துக் கொண்டார். குறிப்பாக இளம் எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்களுக்கு வழிகாட்டி, அவர்களின் சொந்த பாதையில் செல்ல அவர்களுக்கு உதவுவதில் அவர் பெருமிதம் கொண்டார்.
ஒரு நாள், எழிலன் என்ற பதின்ம வயது இளைஞன் கண்களில் கனவோடு நூலகத்திற்கு வந்தான். அவன் ஒரு எழுத்தாளராக விரும்பினான், ஆனால் எங்கு தொடங்குவது என்று அவனுக்குத் தெரியவில்லை. அப்பொழுது அதை அவனுடன் கதைக்கும் பொழுது அறிந்த முல்லை, அவனது கற்பனையைத் தூண்டும் மற்றும் அவனது ஆர்வத்தை வலுப்படுத்தும் புத்தகங்களைச் தெரிந்தெடுத்து சுட்டிக்காட்டினாள்.
எழிலனுக்கு மட்டும் முல்லை இப்படி உதவி செய்யவில்லை. வழிகாட்டுதலைத் தேடும் பல இளைஞர்களுக்கு அவள் ஒரு வழிகாட்டியாக பலதடவை இருந்துள்ளாள். ஆனால், அவள் ஒருபோதும் தன் உதவிகளுக்கு, வழிகாட்டலுக்கு அங்கீகாரத்தை நாடவில்லை, மாறாக அவள் வெளிச்சத்துக்கு தன்னைக் காட்டாமல், அவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறாள் என்பதை உணர்ந்து மகிழும் அமைதியான திருப்தியை மட்டுமே விரும்பினாள்.
அவர் வழிகாட்டிய பல இளைஞர்கள் வெற்றிகரமான மற்றும் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களாக இன்று மாறியதால், முல்லையின் வழிகாட்டுதல் பலனைத் தந்தது அவளை பெருமைப்படுத்தியது. ஆனால் இந்த எழுத்தாளர்கள் பெற்ற அங்கீகாரம் மற்றும் பாராட்டகளுக்கு ஒரு உந்தலாக முல்லை இருந்த போதிலும், அவள் வெளிச்சத்திலிருந்து விலகி இருப்பதில் தனது விருப்பத்தில் உறுதியாக இருந்தாள். அதற்கு சில காரணங்களும் இல்லாமல் இல்லை. அவள் அனுபவித்த அந்த அவலமான, கொடூரமான பயம் நிறைந்த, கெடுபிடிகள் மலிந்த, பட்டினிகள் நிறைந்த 2007 தொடங்கி 2009 வாழ்வும் ஒரு காரணமாக இருக்கலாம்? ஏனென்றால் அதைப்பற்றி சாட்சிகளுடன் அவள் விரைவில் விரிவாக எழுத முயற்சித்துக் கொண்டு இருக்கும் "முள்ளிவாய்க்காலில் இருந்து முட்கம்பி வேலி தடுப்பு முகாம் வரை" என்ற வரலாற்று கதையுமாக இருக்கலாம்?
அதேநேரம் இந்த முடிவு நூலகத்தில் தனது பங்கும் மற்றும் பிறருக்கு வெற்றிபெற உதவுவதில் அவள் கொண்டிருந்த மனநிறைவின் காரணமாகக் கூட இருக்கலாம்? ஏனென்றால் அவளின் பின்னணி ஒருவேளை அவளின் வாழ்க்கையை குழப்பி, கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வலுக்கட்டாயமாக போகவேண்டிய நிர்பந்தமும் வரலாம்? அப்படி என்றால் அவளின் வரலாற்று கதை முழுமையடையாமல் போய்விடும் என்பதும் இன்னும் ஒரு காரணம். அதனால்த்தான், அவளுடைய பெருமையை விட மற்றவர்களின் பெருமைகளில் தன் மகிழ்வைக் கண்டாள். முல்லையின் பணிவும் தன்னலமற்ற தன்மையும் அவளது குணாதிசயத்திற்கு இன்றியமையாததாக இருந்தது, அவள் வழிகாட்டியவர்கள் செழித்தோங்குவதைக் கண்டு மிகுந்த திருப்தியைப் பெற்றாள்.
அவள் தனது வாழ்க்கையின் அமைதியை என்றும் மதிப்பவள். எனவேதான் பொது அங்கீகாரத்துடன் அடிக்கடி வரும் கவனத்தையும் இடையூறுகளையும் தவிர்க்க விரும்பினாள். முல்லையைப் பொறுத்தவரை, குறைந்த சுயவிவரத்தை பராமரிப்பது, புத்தகங்கள் மற்றும் அவள் விரும்பும் நபர்களால் சூழப்பட்ட ஒரு விரும்பிய வாழ்க்கையைத் தொடர அனுமதித்தது.
மேலும், பாராட்டுகளையும் மற்றும் பாராட்டுகளை தேடாமல் கடினமாக உழைக்க வேண்டியதன் மதிப்பை அவளுடைய குடும்பம் அவளுக்குக் கற்றுக் கொடுத்தது. இந்த தத்துவம் அவளை வாழ்நாள் முழுவதும் வழிநடத்தியது, அவள் அதை அடித்தளமாக வைத்து, உண்மையிலேயே முக்கியமானவற்றில் மட்டுமே கவனம் செலுத்தினாள்.
முல்லையின் சொந்தக் கனவு, அவள் இதயத்தில் இன்னும் இருந்தது. தமிழ் பாரம்பரியத்தின் அழகையும் நெகிழ்ச்சியையும், அது பட்ட அவலத்தையும் கொடூரத்தையும் ஆரம்பத்தில் இருந்தே படம்பிடித்து, ஆனால் குறிப்பாக முள்ளிவாய்க்கால், தடை முகாம் மற்றும் விசாரணைக்காக ஒப்படைத்தவர்கள் அடங்கலாக ஒரு புத்தகத்தை எழுத வேண்டும் என்பதே அது!.
ஒரு நாள், ஒரு உள்ளூர் பதிப்பகத்தில் பணிபுரியும் அவரது தோழி சங்கீதா, முல்லையின் கதை சொல்லும் திறனையும் மற்றவர்களுக்கு உதவுவதில் அவளது அர்ப்பணிப்பையும் கவனித்தார். அது மட்டும் அல்ல, சங்கீதா, அவளது சொந்த வரலாற்றுக் கதையை விரைவில் முடித்து வெளியிடுவதற்கு முலையை ஊக்குவித்தார். “இவ்வளவு நேரம் மற்றவர்களின் கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாய் முல்லை, இனி உன் சொந்தத்தைச் கதை சொல்லும் நேரம் வந்துவிட்டது." என்றாள்.
அவள் ஆரம்பத்தில் சுய சந்தேகத்துடன் போராடினாலும், அவளுடைய தோழி சங்கீதா மற்றும் சில நூலக வாசகர்கள் கொடுத்த ஊக்கமும் ஆலோசனைகளும் அவளை கெதியாக தனது வரலாற்றுக் கதையை, தன் எண்ணங்களையும் அனுபவங்களையும் சேர்த்து முதலில் ஒரு மேலோட்டமாக எழுத வைத்தது.
சில மாதங்களுக்குப் பிறகு, எழுத்துப் பிழைகள் திருத்தி சரிபார்த்தபின், முல்லையின் கையெழுத்துப் பிரதியை சங்கீதாவின் பதிப்பகம் ஏற்றுக்கொண்டது. அந்தவேளையில் தான் இலங்கையின் இலக்கியத் துறையை வளப்படுத்துவதற்கு, சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் பங்களிப்பு வழங்கிய எழுத்தாளர்களுக்கு, அரச சாகித்திய விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி தலைமையில், தாமரைத்தடாக மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் ஒருவனாக எழிலனும் தனது முதல் நாவலுக்காக விருது வழங்கி கெளரவப் படுத்தப்பட்டார்.
அவர் மேடையில் ஏறி விருதுபெறும் தருவாயில், ' என் மதிப்புமிக்க மேடையில் வீற்றிருக்கும் தலைவர்களே, அறிஞர்களே மற்றும் நண்பர்களே, பார்வையாளர்களே, உண்மையில் இந்த விருது, 'வெளிச்சத்துக்கு வராமல்', என்னை இந்த நிலைக்கு ஆளாக்க பின்னணியில் இருந்து ஊக்கமும், ஆலோசனையும் வேண்டிய இலக்கிய மற்றும் நாவலுக்கு தேவையான தரவுகளையும் அவ்வப்போது, தன் வேலை பளுவுக்கு இடையிலும் மனம் சற்றும் சோராமல் இன்முகத்துடன் துணைநின்ற கொழும்பு நூலகர் முல்லைக்கே சேரும். அவருக்கே அர்ப்பணிக்கிறேன்" என்று கைதட்டலுக்கு மத்தியில் ஆனந்தக் கண்ணீருடன், முல்லையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து சொல்லிமுடித்தான்.
நன்றி:[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
0 comments:
Post a Comment