அறிவியல்=விஞ்ஞானம்
நோய்கள் தீர்க்கும்
நீர்
நம் உடலுக்கு எவ்வாறு உணவு முக்கியமோ, அதுபோல தண்ணீரும் முக்கியமானது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று அமெரிக்க கலிபோர்னியா பல்கலை ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
முதலாவதாக அதீத உடல் எடை கொண்டவர்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். தொடர்ந்து பன்னிரண்டு வாரங்கள், சாப்பிடுவதற்கு முன்பாக அவர்கள் 1.5 லிட்டர் தண்ணீர் குடிக்கச் சொன்னார்கள். ஆறே மாதங்களில் அவர்களுடைய எடை குறைந்தது.
அடுத்து, டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட, 40 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். காலை உணவு சாப்பிடும் முன்பாக 250 மி.லி தண்ணீரும், மதிய உணவுக்கு முன் அரை லிட்டர் தண்ணீரும், இரவு உணவுக்கு முன் 250 மி.லி நீரும் பருகச் சொன்னார்கள்.
எட்டு வாரம் தொடர்ந்து இவ்வாறு செய்த பின், இவர்களுடைய ரத்தச் சர்க்கரை அளவு குறைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மைக்ரேன் முதலில் கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்ட 102 பேரைத் தினமும் 1.5 லிட்டர் கூடுதலான நீர் பருகச் சொன்னார்கள். மூன்று மாதத்திற்குத் தொடர்ந்து கண்காணித்ததில் அவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் தலைவலி குறைந்து இருப்பது தெரிய வந்தது.
சிறுநீரகக் குழாய் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட, 140 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். தினமும், 1.5 லிட்டர் நீரைக் கூடுதலாக அருந்தும்படி அறிவுறுத்தப்பட்டது. 12 மாதங்களில் மருந்தின்றி குணமடைந்தனர். 25 - 50 வயதுக்குட்பட்ட ஏற்கனவே சிறுநீரகக் கல் ஏற்பட்ட 221 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
அவர்கள் குடிக்கும் தண்ணீருடன், இரண்டு லிட்டர் தண்ணீரைக் கூடுதலாகக் குடிக்கும்படி கேட்டுக் கொண்டனர். அடுத்த 5 ஆண்டுகள் அவர்களுக்குச் சிறுநீரக கல் உருவாவது முற்றிலும் நின்றது. மேற்கண்ட ஆய்வு அதிக அளவில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை நமக்கு விளக்குகிறது.
ஒளிரும் காளான்
மைசெனா க்ரோகடா என்பது ஐரோப்பாவிலும்,
ஜப்பானிலும் வளரும் ஒரு வகையான காளான். இது, நீளமான காளான் வகைகளுள் ஒன்று. இதற்கு
ஒளிரும் தன்மை இருப்பது இதுவரை அறியப்படாத ஒன்று. தற்போது தான் முதன்முதலாக இது ஒளிர்வது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீன்களின்
நெகிழி
நுண்நெகிழிகளால் ஏற்படும்
கேடுகள் குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். தற்போது, மக்களால்
பரவலாக உண்ணப்படும் கடல் மீன்களின் உடலில் நுண் நெகிழிகள் இருப்பதை, அமெரிக்காவைச்
சேர்ந்த போர்ட்லாந்து மாநிலப் பல்கலை கண்டறிந்துள்ளது. இவற்றை உட்கொண்டால் நம் உடல்
நலமும் பாதிக்கப்படும் என்கின்றனர்.
காலை வேளைக்
காபி
அமெரிக்காவைச் சேர்ந்த ட்யுலேன்
பல்கலை மேற்கொண்ட ஆய்வில், மாலை வேளைகளை விட காலை வேளைகளில் காபி குடிப்பது, உடலுக்கு
பல வகைகளில் நன்மை தரும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உப்பு சப்பில்லாத
சாப்பாட்டுக்கு 'குட் பை'
உங்களுக்கு அதிக ரத்த அழுத்தம் இருக்கிறது. இனிமேல் உப்பை குறைவாகச் சாப்பிட வேண்டும் என்று உங்கள் மருத்துவர் அறிவுறுத்தி உள்ளாரா? உப்பு சப்பில்லாமல் எப்படி சாப்பிடுவது என்று வருத்தப்படுகிறீர்களா? கவலை வேண்டாம். உங்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த நவீன கரண்டி.
மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கரண்டி (Electric spoon) 2022ம் ஆண்டே வடிவமைக்கப்பட்டு விட்டது. ஜப்பானைச் சேர்ந்த உணவுத் தயாரிப்பு நிறுவனம் ஒன்று முதன்முதலில் மின்சார சாப்ஸ்டிக்கை உருவாக்கியது. இதைக் கொண்டு சாப்பிட்டால், உணவில் உப்பு குறைவாக இருந்தாலும், நம் நாக்கு, உவர்ப்பு சுவையை உணர்ந்து ஆறுதல் அடையும்.
அதே போல் இப்போது இந்த மின்கரண்டி உருவாக்கப்பட்டுள்ளது. பேட்டரியில் இயங்கும் இந்தக் கரண்டியில் இரண்டு எலக்ட்ரோடு இருக்கும். ஒன்று கைப்பிடியில், மற்றொன்று உணவு எடுக்கும் பகுதியில் இருக்கும். உணவை எடுக்கும்போது, உணவில் இருக்கும் சோடியம் அயனிகளை மட்டும் இந்தக் கரண்டி ஈர்த்துப் பிரித்துவிடும்.
சோடியம் அயனிகள் தனியே நாக்கில் படும்போது, உவர்ப்பு சுவையை நாக்கு உணர்ந்து கொள்ளும். இதனால் குறைவான உப்பு இருந்தாலும், நமக்கு நிறைவாக இருக்கும்.
ஆரம்பத்தில் 200 கரண்டிகள் மட்டும் வடிவமைக்கப்பட்டன. அவை அனைத்தும் விற்றுவிட்டன. இதைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரி முதல் மறுபடியும் இந்த ஸ்பூன் உற்பத்தியை துவங்க உள்ளனர். இதில் ஒரே ஒரு பிரச்னை என்னவென்றால், தங்களுடைய உடலிலே பேஸ்மேக்கர் முதலிய மருத்துவ மின் கருவிகள் வைத்திருப்பவர்கள் இதைப் பயன்படுத்தக்கூடாது என்பது மட்டுமே.
புற்றுநோயை
தடுக்கும் பால்
உலகை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று புற்றுநோய். அதிலும் குடல் புற்றுநோய் என்பது மிகவும் அபாயகரமானது. அதிலிருந்து தப்பிப்பதற்கு சிறந்த உபாயத்தை இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துஉள்ளனர்.
ஏறத்தாழ 5,42,000 மக்களைக் கொண்டு ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. ஒவ்வொருவருடைய உணவுப் பழக்கம் பற்றியும் கேட்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது. அனைவரும் 16 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். அதில், 12,259 பேருக்கு குடல் புற்றுநோய் ஏற்பட்டது தெரியவந்தது. இவர்களுக்கு மட்டும் எப்படி வந்தது? பிறருக்கு ஏன் வரவில்லை என்பது குறித்து ஆராயப்பட்டது.
இதிலிருந்து தினமும் 300 மில்லி கிராம் கால்சியம் எடுத்துக்கொண்டு வருபவர்களுக்குக் குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு 17 சதவீதம் குறையும் என்று கண்டறிந்துள்ளனர். தினமும் ஒரு குவளை பால் சாப்பிட்டால் இந்தச் சுண்ணாம்புச் சத்து நமக்கு கிடைத்துவிடும். பால் சாப்பிடப் பிடிக்காதவர்கள் டோபு அல்லது பிரக்கோலி போன்ற காய்கறிகள் மூலம் இந்த கால்சியத்தைப் பெறலாம்.
அதேபோல இந்த ஆய்வில் மற்றொரு விஷயமும் தெரியவந்துள்ளது. தினமும் 100 கிராம் ரெட் மீட் அதாவது ஆடு, பன்றி, மாடு, முயல் ஆகிய விலங்குகளின் மாமிசம் சாப்பிடுவது இந்தப் புற்றுநோய் வரும் வாய்ப்பை 29 சதவீதம் அதிகரிக்கிறது.
தினமும் 200 கிராம் மது குடிப்பது புற்றுநோய் வரும் வாய்ப்பை 15 சதவீதம் அதிகரிக்கிறது. ஆகவே மது, மாமிசத்தைத் தவிர்த்துவிட்டு, பால் குடிப்பது நல்லது என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment