வேம்பு எமது வாழ்வோடு ஒன்றியது.
வேப்பம் இலை கிருமி நீக்கியாக,
வேப்பம் பூ வடகமாக,வேப்பம் கொட்டை நுளம்புத் திரி இல்லாத காலங்களில் புகை போடுவதற்காக,வேப்பம் பிசின் ஒட்டும் பசையாக,வேப்பம் பலகை கதவு, நிலை, தளபாடங்கள் செய்யவென நினைந்து ஏங்கவே முடிகிறது.
வேப்பெண்ணையை மறந்து விட்டேன் என எண்ணாதீர்கள்.
தொண்டை நோ வந்தால் வீட்டுச் சிகிச்சையாக வெளிப்பக்கமாகப் பூசுவதாக பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
சுகம் கிடைக்காவிட்டால் கூட அடுத்த முறையும் அதைப் பூசுவதில் அவர்களுக்குத் தயக்கமில்லை.
‘குடித்துப் பார்க்கவில்லையா?’ என கிண்டல் வெளித் தெரியாமல் கேட்டால் ‘குடிக்கிறது கஷ்டம்’ என அப்பாவித்தனமாச் சொல்லுவார்களே ஒழிய அதன் சாதக பாதகங்களைப் புரிந்த சிலமன் இருக்காது.
இன்றைய நவீன காலத்தில் அதுவும் நான் மருத்துவம் செய்யும் பெருநகரில் குடிப்பவர் எவருமில்லாது இருக்கலாம்.
ஆயினும் கிராமப்புறங்களில் குடிப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
தொண்டை நோவுக்காக அல்லாவிடினும் குடற் பூச்சிகளுக்காக வேப்பெண்ணைய் குடிப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.
1982ல் வெளியான மருத்துவ ஏட்டில் (Lancet Feb 1981 28:1 (8218):487-9)
“இந்தியா, இலங்கை, பர்மா, தாய்லந்து, மலேசியா, இந்தோனிசியா போன்ற நாடுகளில் இதனை வெளிப் பூச்சு மருந்தாகப் பாவிப்பதாகவும், ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் முதல் சிறு பிள்ளைகளுக்கு குறைந்த அளவில் குடிக்கக் கொடுப்பார்கள்”என்றும் சொல்கிறது.தொடர்ந்து அதனால் ஏற்படும் ஆபத்துகளையும் விபரித்திருகிறது.
ஆனால் இது பழம் கதையல்ல.இன்றும் தொடர்கிறது.
பூச்சி மருந்தாக வீட்டார், 14 மாதக் குழந்தைக்கு வேப்பெண்ணெயைக் கொடுத்த போது மூளை மண்டலம் பாதிப்புற்று வாந்தி,மயக்கம்,முழுமையான வலிப்பு (Generalized Seizures) ஆகிய ஆபத்தான அறிகுறிகளுடன் குழந்தைகளுக்கான கொழும்பு லேடி றிட்ஸ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.
ஈரல் வீக்கம், ஈரல் பாதிப்பு, Metabolic Acidosis போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டது.
வேகமான மூச்சிளைப்பும் ஏற்படுவதுண்டு.இது Toxic Encephalopathy எனும் நோயாகும். ஆயினும் தீவிர சிகிச்சையின் பின் காப்பாற்றப்பட்டது.
வேப்பெண்ணெயில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த கொழுப்பு அமிலங்களான (Nimbin, Nibinin. Nimbidin,Nimbidilol) மற்றும் சல்பர் (Sulphur)சார்ந்த வேதியல் பொருட்களே வேப்பெண்ணெயின் ஆபத்தான விளைவுகளுக்குக் காரணமாகும்.
மருத்துவ சஞ்சிகைகளை ஆராய்ந்தால் இவ்வாறான பல சம்பவங்களைக் காண முடிகிறது.வேப்பெண்ணெய் குடித்து இந்நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் காப்பாற்றப்பட்ட போதும் பல மரணங்களும் நிகழ்ந்தமை ஆவணப் படுத்தப்படுள்ளன.
ஆயினும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஆனால் மருத்துவ குணமுள்ளதாக நம்பப்படும் எண்ணெயானது எத்தகைய கட்டுப்பாடுகளும் இன்றி எங்கும் கட்டுப்பாடின்றி விற்பனையாகிறது.
‘வெளிப் பூச்சுக்கு மட்டும் பாவகிக்கவும், குடிக்கக் கூடாது’என்ற எச்சரிக்கையையாவது லேபளில் ஒட்டியிருக்கலாம்.
ஆனால் அப்படிச் செய்ய வேண்டும் என்ற சட்டவிதிகள் எதுவும் இதுவரை கிடையாது.பாரம்பரிய மருத்துவ முறைகளில் எமது சமுதாயத்தினர் பலருக்கும் உள்ள நம்பிக்கை அளப்பரியது.தாய் மண் மீது பற்றுக் கொண்ட எம்மவர்கள் நாம்.எமது ஏனைய பாரம்பரிய முறைகளையும் பேணிப் பாதுகாத்து ஊக்குவிக்க முயல்வதில் தப்பேதும் இல்லை.
அது அவசியமும் கூட.
ஆயினும் பகுத்தறிந்து பார்க்காது ஆதரவும் ஊக்குவிப்பும் செய்வது அழிவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை வரலாறு புகட்டியிருக்கிறது.
வேப்பெண்ணெய் கசத்தாலும் அதன் மருத்துவ குணங்கள் பற்றி இனிமையான எண்ணங்களைச் சுமக்கும் எம்மவர்கள்
அதன் ஆபத்தான அம்சங்களையும் அறிந்திருப்பது அவசியமாகும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0 comments:
Post a Comment